அரசியல் கொடிக் கம்பங்களை அகற்ற முயற்சி: அலுவலர்கள் - அரசியல் கட்சியினர் தகராறு

தஞ்சாவூரில் அரசியல் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்காக திங்கள்கிழமை வந்த அலுவலர்களுக்கும், கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தஞ்சாவூரில் அரசியல் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்காக திங்கள்கிழமை வந்த அலுவலர்களுக்கும், கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்களில் உள்ள கொடிகளைப் பறக்கவிடக் கூடாது. கம்பங்களில் உள்ள கொடிகளை அவிழ்த்துவிட வேண்டும். கொடிக் கம்பங்களின் பீடங்களில் உள்ள கல்வெட்டுகளை மூடி மறைக்க வேண்டும் என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரயிலடியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றுவதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலர்கள் தங்களது பணியாளர்களுடன் திங்கள்கிழமை சென்றனர். 
அப்போது, அங்கிருந்த ஒரு கொடிக் கம்பத்தின் பீடம் தள்ளிவிடப்பட்டது. இதேபோல, இதர கொடிக் கம்பங்களையும் அகற்றப் போவதாகத் தகவல் பரவியது.
இதையடுத்து, காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அங்கு திரண்டனர். மேலும், கொடிகளை அகற்றிவிட்ட நிலையில், கொடிக் கம்பங்களைக் காகிதம் மூலம் சுற்றி மறைத்துக் கொள்கிறோம் என கூறினர். ஆனால், கொடி கம்பங்களை முழுமையாக அகற்றுமாறு உயர் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளதாக அலுவலர்கள் கூறினர்.
இதனால், அலுவலர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த மேற்கு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொடிக் கம்பத்தில் காகிதத்தை மூடி மறைத்துக் கொள்வதாக அரசியல் கட்சியினர் கூறியதையடுத்து, அகற்றும் பணியை அலுவலர்கள் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com