சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச்சொற்கள் உருவாக்கம்

சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் செந்தமிழ்ச்

சொற்குவைத் திட்டத்தில் 8,000 கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் தங்க. காமராசு.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் பின்னர் தெரிவித்தது:
தமிழ் அகராதியை உருவாக்க வேண்டும் என்பதற்காகச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 1974 ஆம் ஆண்டில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இதில், சொற்குவைத் திட்டம் 2018, ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி வீதம் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது சொற்குவை உண்டியல் வைக்கப்படுகிறது. இதில், அகராதியில் இல்லாத புதிய கலைச்சொற்களைப் பேராசிரியர்கள், மாணவர்கள் எழுதி இடுகின்றனர்.  இதன் மூலம், 56 புதிய கலைச்சொற்கள் கிடைத்துள்ளன. உண்டியலில் செலுத்தப்படும் முதல் 3 சிறந்த சொற்களுக்கு 3 பரிசுகள் வழங்கப்படுகிறது.
மேலும், w‌w‌w.‌s‌o‌r‌k‌u‌v​a‌i.​c‌o‌m  என்ற புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, 1800 599 14469 என்ற கட்டணமில்லா அலை மையம் (டோல் ப்ரீ) ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் இந்த எண்ணில் கலைச்சொற்கள் குறித்து சந்தேகம் கேட்டு அறியலாம். இதேபோல, மக்களும் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். இதில், மக்கள் தெரிவிக்கும் புதிய கலைச்சொற்களை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்த பிறகு வெளியிடப்படும்.
சொற்குவைத் திட்டத்தின் கீழ் மாதத்துக்கு 1,000 புதிய கலைச் சொற்கள் வீதம் மொத்தம் 8,000 கலைச்சொற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த இயக்ககத்தின் மூலம் 1985 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 31 மடலங்கள் (செய்தி மடல்) வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 13,327 பக்கங்கள் கொண்ட இந்த மடலங்களில் 1.75 லட்சம் கலைச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. இது சுருக்கப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,  8,500 பக்கங்களில் 2.10 லட்சம் சொற்களுடன் திருத்தப்பட்ட பதிப்பு மே மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. இதில், புதிய கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டு, தேவையற்ற சொற்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படும். இதில், சொற் பிறப்பு, இலக்கணம், சமகாலத்தில் கையாளப்படும் சொல்,  மூலச்சொல் போன்றவை இடம்பெறும்.
மேலும்,  மே மாதத்தில் மாணவர் இலக்கிய தமிழ் அகரமுதலி,  தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அகரமுதலி,  நடைமுறைத் தமிழ்ப் பேரகரமுதலி ஆகிய 3 நூல்கள் வெளியிடப்படவுள்ளன. ஒவ்வொன்றும் ஏறத்தாழ 400 பக்கங்கள் கொண்ட இந்நூல்களில் மொத்தம் 28,000 கலைச்சொற்கள் இடம்பெறும் என்றார் காமராசு.
முன்னதாக, நடைபெற்ற கருத்தரங்கத்துக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். பதிவாளர் ச. முத்துக்குமார், அகராதியியல் துறைத் தலைவர் உல. பாலசுப்பிரமணியன், அகராதியியல் அறிஞர்கள் புதுச்சேரி கு. சிவமணி, திருச்சி பி. தமிழகன்,  திருச்சி தூய வளனார் கல்லூரி பேராசிரியர் இ. சூசை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் சு. பத்மநாபன், இயக்ககப் பதிப்பாசிரியர் மா. பூங்குன்றன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com