நெல் பயிரில் மஞ்சள் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிரில் மஞ்சள் நோய்த் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிரில் மஞ்சள் நோய்த் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
 கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல், மணிலா, வாழை, கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறுவை சாகுபடியைத் தொடர்ந்து, தற்போது, சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர்.
 குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, நைனார்குப்பம், ஓணாங்குப்பம், மருவாய், ராஜாகுப்பம், பூதம்பாடி, கல்குணம், ஆடூர் அகரம், ஆடூர்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரில் மஞ்சள் நோய் வேகமாக பரவி வருகிறது.
 நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் மருந்து தெளித்து வருகின்றனர். இந்த நிலையில், தனியார் மருந்து நிறுவனங்களின் விற்பனைப் பிரதிநிதிகள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு, நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆனால், விவசாயத் துறையைச் சேர்ந்த யாரும் வந்து ஆலோசனை வழங்கவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
 இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
 மாவட்டத்தில் பேரிடர் காலத்தில் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதி குறிஞ்சிப்பாடி வட்டாரம். இப்பகுதி மக்களின் பிரதானத் தொழில் விவசாயம். கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளம், வறட்சி, மழை, புயல் என ஏதாவது ஒன்றால் நஷ்டம் அடைந்து வருகிறோம். கடந்த குருவை சாகுபடியில் அதிக வெப்பத்தினால் நெல் பயிர்கள் மஞ்சளாக மாறி மகசூல் இழப்பு ஏற்பட்டது. தற்போது, சம்பா நடவு செய்துள்ளோம். அதிக மழை காற்றின் திசை மாற்றம் போன்ற காரணத்தால் நெல் பயிர்கள் மஞ்சளாக மாறிவிட்டன. குறிஞ்சிப்பாடி வட்டாரம் முழுவதும் இதே நிலை உள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com