நூதன முறையில் சாராயம் கடத்தியவர் கைது

கடலூரில் நூதன முறையில் சாராயம் கடத்தியதாக புதுவை இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூரில் நூதன முறையில் சாராயம் கடத்தியதாக புதுவை இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து கடலூர் கேப்பர்மலை பகுதிக்கு சரக்கு வாகனத்தில் நூதன முறையில் சாராயம் கடத்திச் செல்லப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 
அதனடிப்படையில் கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் ஏழுமலை, காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவலர்கள் கடலூர் கேப்பர்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். 
அப்போது, சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனம் வழக்கமான வடிவமைப்பை விட சற்று வித்தியாசமாக இருப்பதைக் கண்ட காவல் துறையினர் அந்த வாகனத்தைச் சோதனையிட்டனர்.
வாகனத்தில் சரக்கு ஏற்றும் பகுதியில் சிறிய அளவிலான அறை அமைத்து அதில் சாராயத்தை மூட்டைகளாக கட்டி வைத்து அதன் மேல் வாகனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பலகையை வடிவமைத்திருந்தது தெரிய வந்தது. 
இதையடுத்து, 21 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லிட்டர் சாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த புதுச்சேரி மாநிலம், ஆராய்ச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் இளவரசனை (23) கைது செய்தனர். சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த 
கடலூர் முதுநகர் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com