கூட்டுப் பண்ணையம் அமைத்து வேளாண்மை செய்யும் விவசாயிகள்!

கடலூர் மாவட்டத்தில் கூட்டுப் பண்ணையம் அமைத்து விவசாயிகள் வேளாண்மை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கூட்டுப் பண்ணையம் அமைத்து விவசாயிகள் வேளாண்மை செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், விவசாயத்தை லாபகரமான தொழிலாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பல்வேறு விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து வேளாண்மை நிறுவனம் அமைத்து உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்திடும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, கூட்டுப் பண்ணையம் என்ற திட்டத்தில் மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறை சார்பில் 55 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலை துறை சார்பில் 25 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் மொத்தம் 80 வருவாய் கிராமங்களுக்கு தலா 100 பேர் கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 20 விவசாயிகள் அடங்கிய உழவர் ஆர்வலர் குழுவும், 5 உழவர் ஆர்வலர் குழுக்களும் சேர்ந்து அடுத்தக்கட்ட நிகழ்வாக 100 பேர் கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுவும் உருவாக்கப்படும். அதன்படி, கடலூர் வட்டாரத்தில் 2017-18-ஆம் ஆண்டில் பில்லாலி, சேடப்பாளையம், மதலப்பட்டு மற்றும் தூக்கனாம்பாக்கம் ஆகிய 4 வருவாய் கிராமங்களில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. 
இவை ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.5 லட்சம் மூல ஆதார நிதியாக வழங்கப்பட்டு, அதனடிப்படையில் டிராக்டர், பவர்டில்லர், நெல் நடவு இயந்திரங்கள், ரோட்டாவேட்டர்கள் மற்றும் நெல் நாற்று தட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பில்லாலி உழவர் ஆர்வலர் குழுத் தலைவர் கே.ஜெயராமன் கூறியதாவது:  
பில்லாலி உழவர் ஆர்வலர் குழு மூலமாக நெல் நடவு இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு அளிப்பதால் அவர்களுக்கு செலவு குறைகிறது.  இதனால் ஏக்கருக்கு ரூ.800 முதல் ரூ.900 வரை மிச்சப்படுகிறது. 
இதேபோல, தங்களது கிராமத்தில் நெல் சாகுபடிக்குத் தேவையான விதை, உரம் மற்றும் பூச்சி மருந்துகளை மொத்தமாக குழு மூலம் கொள்முதல் செய்வதாலும் கணிசமான தொகை சேமிப்பு அடைவதாக அவர் கூறினார்.  இந்தப் பணியை கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் சு.பூவராகன் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com