ஆளுநர் வருகையின் போது நடத்தவிருந்த போராட்டம் ரத்து

சிதம்பரம் நகருக்கு வருகிற நவம்பர் 25-ஆம் தேதி தமிழக ஆளுநர் வருகையின் போது, வர்த்தகர் சங்கம், கொள்ளிடம் தடுப்பணைக் குழு ஆகியவை சார்பில் உப்புநீர் குடங்களுடன் வரவேற்று மனு அளிக்கும் போராட்டம்

சிதம்பரம் நகருக்கு வருகிற நவம்பர் 25-ஆம் தேதி தமிழக ஆளுநர் வருகையின் போது, வர்த்தகர் சங்கம், கொள்ளிடம் தடுப்பணைக் குழு ஆகியவை சார்பில் உப்புநீர் குடங்களுடன் வரவேற்று மனு அளிக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
 இந்த நிலையில், இதுதொடர்பாக சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. உதவி ஆட்சியர் விசுமகாஜன் தலைமை வகித்தார்.
 கூட்டத்தில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ரா.மணிமோகன், சீர்காழி உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் அருணகிரி, ரமேஷ், டி.எஸ்.பி. ஜவகர்லால், காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர், காவல் உதவி ஆய்வாளர் கே.நாகராஜன், வட்டாட்சியர் தமிழ்செல்வன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, கொள்ளிடம் தடுப்பணைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெக.சண்முகம், வர்த்தகர் சங்கத் தலைவர் சதீஷ்குமார், செயலர்கள் பெரி.முருகப்பன், கமல்கிஷோர்ஜெயின், இணைச் செயலர் சிவராம வீரப்பன், சமூக ஆர்வலர் மு.செங்குட்டுவன், நுகர்வோர் பாதுகாப்புப் பேரவையின் அம்பிகாபதி, நகர பாஜக தலைவர் கனகசபை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டதால், நவ. 25-ஆம் தேதி நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்வதென முடிவெடுக்கப்பட்டது.
 மேலும், கொள்ளிடம் ஆற்றில் உப்புநீர் உள்புகுவதைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 2018-இல் மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியரால் நடத்தப்பட்ட சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின்படி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பெராம்பட்டு மதுரா மேலகுண்டபாடி கிராமத்துக்கும், நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், சந்தப்படுகை கிராமத்துக்கும் இடையே தடுப்பணை கட்டுவதற்கான நிர்வாக அனுமதி, அதற்கான நிதி ஒதுக்கீடு பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுப்பது, சிதம்பரம் ரயில் நிலையத்தில் புவனேஸ்வர், பைசியாபாத், அந்தியோதயா ஆகிய 3 விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க ரயில்வே கோட்ட மேலாளரை வலியுறுத்துவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com