நியாய விலைக் கடை பணியாளர்கள் 3-ஆவது நாளாகப் போராட்டம்: 150 பேர் கைது

மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக 150 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக 150 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை தனித் துறையாக நடத்த வேண்டும். நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
 பணி வரன்முறைப்படுத்துதல், சரியான எடையில் பொருள்களை வழங்குதல், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 100 சதவீத பொருள்களை வழங்குதல், பயோமெட்ரிக் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்தப் போராட்டம் 3- ஆவது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தது. இதையடுத்து, அந்தச் சங்கத்தினர் நியாயவிலைக் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கடலூரில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் ஜி.ஜெயசந்திரராஜா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கருப்பையா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலர் மு.ராஜாமணி, டாஸ்மாக் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த சரவணன், சத்துணவுப் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
 இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 150 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.
 இந்தப் போராட்டத்தினால் மாவட்டத்தில் பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் அடைக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com