நெல்பயிரில் சொட்டு நீர்ப் பாசனம்!

கடலூர் விவசாயி ஒருவர் அரசு மானியத்துடன் தனது நெல் வயலில் சொட்டு நீர்ப் பாசன வசதியை ஏற்படுத்தியுள்ளார்.
நெல்பயிரில் சொட்டு நீர்ப் பாசனம்!

கடலூர் விவசாயி ஒருவர் அரசு மானியத்துடன் தனது நெல் வயலில் சொட்டு நீர்ப் பாசன வசதியை ஏற்படுத்தியுள்ளார்.
 தமிழகத்தின் மொத்த சாகுபடி பரப்பில் சுமார் 60 சதவீதம் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால், பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் நெல் பயிர்கள் வாடும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், கடலூர் வட்டாரம், வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சுந்தரம், பிரதமரின் விவசாய பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பில் சொட்டு நீர் பாசன வசதியை ஏற்படுத்தியுள்ளார்.
 வழக்கமாக தோட்டக்கலை பயிர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் சொட்டுநீர்ப் பாசன வசதியை முதல் முறையாக நெல் வயலில் பயன்படுத்தி உள்ளார். இவரது வயலை கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் சி.அண்ணாதுரை, துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ச.வேல்விழி, கடலூர் வட்டார உதவி இயக்குநர் சு.பூவராகன் ஆகியோர் அண்மையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 இதுகுறித்து சு.பூவராகன் கூறியதாவது: பிரதமரின் விவசாய பாசன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் நெல் வயலில் சொட்டுநீர்ப் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.20 லட்சம் செலவிடப்பட்டது.
 நான்கு அடிக்கு 2 அடி பட்டம் விட்டு சொட்டுநீர் குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன. பயிருக்கு பயிர் 15 செ.மீ., வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளி விடப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயிரின் வளர்ச்சி திடமாக இருப்பதோடு, களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. நெல் அறுவடைக்குப் பின்னர் பக்கவாட்டு குழாய்களை மடக்கி வைத்து உழவு செய்து விட்டு மீண்டும் சொட்டு நீர்ப் பாசனத்தில் உளுந்து பயிரிடலாம்.
 வழக்கமான முறையில் ஒரு ஏக்கரில் நெல் பயிர் சாகுபடி செய்ய நாற்று விட்டதிலிருந்து 75 நாள்கள் வரை 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், சொட்டு நீர்ப் பாசன முறையில் 14.50 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே போதுமானதாகும். இதனால் மின் சிக்கனத்துடன், அதிக தூர்கள் பிடித்து, சீரான வளர்ச்சி, திரட்சியான நெல் மணிகளைப் பெற்று கூடுதல் மகசூலை அள்ள முடியும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com