வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றம்: எதிர்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரைக் கொல்ல முயற்சி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் தீக்குளிக்க முயன்றதுடன்,

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலர் தீக்குளிக்க முயன்றதுடன், கோட்டாட்சியர் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு குறுக்குசாலை பகுதியில் கருப்புசாமி கோயில் உள்ளது. இதன் பூசாரி ஆறுமுகம், கோயிலின் பின்பகுதியில் உள்ள குமார உடைப்பு வாய்க்காலை ஆக்கிரமித்து 3 மாடியில் ஒரு கட்டடமும், 2 மாடியில் ஒரு கட்டடமும், அன்னதானக்கூடமும் கட்டியுள்ளார். இதற்காக வாய்க்கால் பகுதியில் 162 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.
 இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்தக் கட்டடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்பதால் அவற்றை இடித்து அகற்ற 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், இந்தக் கட்டடங்களை இடிக்க வருவாய்த் துறை, பொதுப் பணித் துறையினர் பல முறை முயற்சித்தும் அந்தப் பணி கடந்த 2 ஆண்டுகளாக தள்ளிப்போனது. சிதம்பரம் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரங்களுடன் குமார உடைப்பு வாய்க்கால் பகுதிக்கு வந்தனர். அப்போது பூசாரி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் கட்டடங்களை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து, தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இவர்களில் சிலர் கோட்டாட்சியர் ராஜேந்திரன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி அவரை கட்டிப்பிடித்தனர். இதையடுத்து வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் கோட்டாட்சியரை பத்திரமாக மீட்டனர்.
 இதுகுறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சம்பவ இடத்துக்கு வந்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, அந்தக் கட்டடங்கள் முழுவதையும் வருவாய்த் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
 சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் ஆறுமுகம் உள்ளிட்ட 50 பேர் மீது கோட்டாட்சியர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com