கொத்தடிமைத் தொழிலாளர்கள் 29 பேர் மீட்பு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த குழந்தைகள் உள்பட 29 பேர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த குழந்தைகள் உள்பட 29 பேர் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.
 கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்து, விவசாய கூலித் தொழிலாளர்களாகப் பயன்படுத்தி வருவதாகப் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அருகே புலியூர்காட்டுசாகை பகுதியில் கரும்புத் தோட்டத்தில் பலர் கொத்தடிமைகளாகப் பணிபுரிவதை, நிலைத்த வளர்ச்சிக்கான அறக்கட்டளையினர் கண்டறிந்து, கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க குள்ளஞ்சாவடி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
 இதையடுத்து, வருவாய்த் துறை, காவல் துறை, தொழிலாளர் நலத் துறையினர், அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கரும்புத் தோட்டத்தில் பணிபுரிந்தோரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளாக வேலைபார்த்து வருவதாகத் தெரிவித்தனராம். இதையடுத்து, அங்கிருந்த 10 பெண்கள், 8 ஆண்கள், 11 குழந்தைகளை மீட்டு கடலூர் சார்-ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.
 இதுகுறித்து நிலைத்த வளர்ச்சிக்கான அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராணி கூறியதாவது:
 இருளர் இன மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்கள் குறித்த கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டோம். அப்போது, பண்ருட்டி அருகே உள்ள அகரம் கிராமத்தில் விசாரித்தபோது, பல குடும்பத்தினர் கொத்தடிமைகளாகச் சென்றிருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், திருவதிகையைச் சேர்ந்த சேகர் என்பவர் இருளர் குடும்பத்தினருக்கு குறைந்த அளவில் முன்பணம் கொடுத்து, அவர்களை குடும்பத்துடன் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
 இவர், அந்தத் தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தின் அருகிலேயே வயல்வெளியில் அவர்கள் தங்குவதற்கு சிறிய தடுப்புகளை அமைத்துக் கொடுத்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு படி அரிசியும், தினக் கூலியாக ரூ.30 வீதமும் வழங்கி வருவாராம். தொழிலாளர்கள் தங்களது ஊருக்குச் செல்லவோ, மற்றவர்களிடம் வேலைக்குச் செல்லவோ அனுமதிக்கமாட்டாராம். இவ்வாறு பல ஆண்டுகள் அவரிடம் பணிபுரிந்த பிறகே தொழிலாளர்கள் ஊருக்குத் திரும்ப முடியும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புக் கொண்டு, கொத்தடிமைகளாகப் பணிபுரிந்தோரை மீட்டுள்ளோம். இதுகுறித்து சேகர் மீதும் புகார் அளித்துள்ளோம் என்றார் அவர்.
 மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்வதோடு, அவர்களது குழந்தைகளைப் படிக்க வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com