நெல் கொள்முதல் நிலையம் பிரச்னை: சார்-ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நெல் கொள்முதல் நிலையம் பிரச்னை தொடர்பாக விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தை  விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.


நெல் கொள்முதல் நிலையம் பிரச்னை தொடர்பாக விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தை  விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
 விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் கிராமத்தில் அய்யனார் கோயில் வளாகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தற்போது நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், மேற்கூறிய கொள்முதல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம், சனிக்கிழமை 4-ஆவது நாளாக தொடர்ந்தது.  அப்போது, விருத்தாசலம் சார்- ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நெல் கொள்முதல் செய்ய மாற்று இடத்தை தேர்வு செய்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது போராட்டக்காரர்கள் கூறுகையில், கடந்த 
10 ஆண்டுகளாக கோயில் வளாகத்தில்தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தனிநபர் ஒருவர் எதிர்க்கிறார் என்றக் காரணத்தை முன்வைத்து வேறு இடத்திற்கு மாற்றுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு அலைச்சலும், செலவும் அதிகரிக்கும் என்பதால், கோயில் பகுதியிலேயே கொள்முதல் நிலையத்தை அமைக்க வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.
 அப்போது கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், நெல் கொள்முதல் என்ற பெயரில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சிலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதோடு, கோயிலுக்கு வந்து செல்வோரிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தை அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைத்துக்கொள்வதே சரியானதாகும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். நிர்வாகத்தினரும் அதை ஏற்று வேறு இடத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்தனர். ஆனால் விவசாய நிலமே இல்லாத தனி நபர்கள் சிலர், கோயில் இடத்தை பயன்படுத்தும் நோக்கில் சிலரை தூண்டிவிட்டு இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com