மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின்கீழ் ரூ.2.68 கோடி இடுபொருள் மானியம் விநியோகம்: மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள்

கடலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ரூ.2.68 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மானாவாரி பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வருமானத்தை நிலைபெறச் செய்ய நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் வேளாண்மை துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இதற்காக, மானாவாரி நிலங்களை ஒருங்கிணைத்து ஆயிரம் ஏக்கருக்கு ஒரு தொகுப்பு உருவாக்கப்படுகிறது. 
இதன்படி கடலூர் மாவட்டத்தில் மங்களூரில் 9, நல்லூர் வட்டாரத்தில் ஒரு தொகுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தைச் சார்ந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மங்களூர் வட்டாரத்தில் 9 தடுப்பணைகளும், நல்லூர் வட்டாரத்தில் ஒரு தடுப்பணையும் மொத்தம் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு தொகுப்பிலிருந்தும் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 நீர்சேகரிப்பு அமைப்புகள் தலா ரூ.7.5 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 
தொகுப்பு வளர்ச்சி குழு உறுப்பினர்களின் தேவைக்கேற்ப மண்வகை, பருவ நிலையைப் பொருத்து பயறு, எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பருத்தி போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பை  தீர்மானித்து சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. 
தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக மக்காசோளத்துக்கு தலா ரூ.2,750, பருத்திக்கு தலா ரூ.2,500, மணிலாவுக்கு தலா ரூ.9,650, எள்ளுக்கு தலா ரூ.1,430, உளுந்துக்கு தலா ரூ.2,390 வீதம் மொத்தம் ரூ.2.68 கோடி இடுபொருள் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  
2017-18-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் மங்களூர் 7, நல்லூர் 4, விருத்தாசலம் 3, கம்மாபுரம் வட்டாரத்தில் ஒரு தொகுப்பும் தெரிவு செய்யப்பட்டு 15 ஆயிரம் ஹெக்டர் நிலப் பரப்புக்கு அடிப்படை பணிகளான புள்ளி விவரம் சேகரிப்பு, விவசாயிகள் குழு உருவாக்கம், விவசாயிகளுக்கு பயிற்சி, தடுப்பணைகள் கட்டுதல், கோடை உழவு மற்றும் மானாவாரி பயிர்கள் சாகுபடி போன்ற பணிகளுக்காக ரூ.5.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
2018-19-ஆம் நிதியாண்டுக்கு மங்களூர், நல்லூர் மற்றும் விருத்தாசலம் வட்டாரங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் 10 மானாவாரி தொகுப்புகள் ஆரம்பித்து செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com