சிதம்பரம் (தனி): 5 முறை காங்கிரஸ் வென்ற தொகுதி

சிதம்பரம் (தனி): 5 முறை காங்கிரஸ் வென்ற தொகுதி

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும், பாமக 2 முறையும், அதிமுக 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன

சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் நடைபெற்ற 14 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும், பாமக 2 முறையும், அதிமுக 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன. சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியானது கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
 2004-ஆம் ஆண்டு தேர்தல் வரை இந்தத் தொகுதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), மங்களூர் (தனி), குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் மங்களூர் (தற்போது திட்டக்குடி தொகுதி), விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டன. அந்த 3 தொகுதிகளுக்குப் பதிலாக அரியலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து குன்னம் ஆகிய தொகுதிகள் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளும், அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து குன்னம் ஆகிய பேரவைத் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
 1957-ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் தொகுதியாக சிதம்பரம் இருந்தது. அப்போதைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபைபிள்ளை, எல்.இளையபெருமாள் ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர், 1962-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.கனகசபை, 1967, 1971-இல் திமுகவைச் சேர்ந்த வி.மாயவன், 1977-இல் அதிமுகவைச் சேர்ந்த ஏ.முருகேசன், 1980-இல் திமுகவைச் சேர்ந்த வே.குழந்தைவேலு, 1984, 1989, 1991 ஆகிய 3 முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ப.வள்ளல்பெருமான், 1996-இல் திமுகவைச் சேர்ந்த வே.கணேசன், 1998-இல் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை, 1999, 2004-இல் பாமகவைச் சேர்ந்த இ.பொன்னுசாமி, 2009-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், 2014-இல் அதிமுகவைச் சேர்ந்த மா.சந்திரகாசி ஆகியோர் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றனர். இந்தத் தொகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
 தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் அதிகம் வாழும் தொகுதி: சிதம்பரம், புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சமமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். காட்டுமன்னார்கோவிலில் தலித்துகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அரியலூர் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகமாகவும், அதற்கடுத்து மூப்பனார், உடையார், தலித் சமூகத்தினர் அதிகமாகவும் வசிக்கின்றனர். ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். அதற்கடுத்து முதலியார், தலித் சமூகத்தினர் வசிக்கின்றனர். குன்னம் தொகுதியில் வன்னியர், தலித் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கின்றனர். இந்தத் தொகுதியில் பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, ஆயங்குடி, பின்னத்தூர் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். மேலும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் கார்காத்த வேளாளர்கள் சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
 இந்தத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 4 முறை போட்டியிட்டு, ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது 5-ஆவது முறையாக இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ள அதிமுக இந்தத் தேர்தலில் நேரடியாக களமிறங்கியுள்ளது. அதிமுக - பாமக- தேமுதிக- பாஜக - தமாகா கூட்டணி வேட்பாளராக அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக முனைவர் ஏ.இளவரசன் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2 லட்சத்து 79, 016 வாக்குகள் பெற்ற பாமக, இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தற்போது மொத்தம் 14,61,735 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் - 7,28,368, பெண்கள் -7,33,321, திருநங்கைகள்- 46 பேர்களாவர்.
 கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 13,33,823 வாக்காளர்கள் இருந்தனர். இந்தத் தேர்தலில் 1,27,912 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
 2014 மக்களவைத் தேர்தல்
 மா.சந்திரகாசி அதிமுக 4,29,536
 தொல்.திருமாவளவன் விசிக 3,01,041
 சுதா மணிரத்தினம் பாமக 2,79,016
 ப.வள்ளல்பெருமான் காங்கிரஸ் 28,988

 -ஜி.சுந்தரராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com