நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலம் புதுவை

நூறு சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக புதுவை மாறியுள்ளது என்று முதல்வர் வே.நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார்.

நூறு சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக புதுவை மாறியுள்ளது என்று முதல்வர் வே.நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார்.
புதுச்சேரி அருகேஅரியாங்குப்பத்தில் உள்ள ஏவிஆர்கே மஹாலில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: 
புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும், கல்விக்கு அரசு அதிக கவனம் செலுத்துகிறது. நிதிநிலை அறிக்கையில் கல்விக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.  
மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்வித் துறையில் பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த மாற்றத்தை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இப்போது, நமது பிள்ளைகளின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் கொள்கை. அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை, பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு.  
பல துறைகளில் உயர்ந்துள்ளோம். குறிப்பாக, நூற்றுக்கு நூறு கல்வி அறிவு பெற்ற மாநிலம் புதுவை.   அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடு இடங்களில் பயிலும் மாணவர்களுக்கு பல கட்டணங்களை அரசே செலுத்துகிறது. பள்ளிகளில் ரொட்டி,  பால் வழங்கும் திட்டம்,  அக்ஷயா பாத்திரத் திட்டத்தின் மூலம் தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் உணவு கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம்.
உயர்கல்வியில் புதுவை மாநிலம் அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.  புதுவை பொறியியல் கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரி,  கதிர்காமம் அரசுக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் இந்திய அளவில் சிறந்த இடங்களை பிடித்துள்ளன.  தரமான கல்வியை பள்ளிகளிலும் கொடுக்க வேண்டும் என்று கவனம் செலுத்தி வருகிறாம். 
கல்வி மட்டுமன்றி விளையாட்டு, கலைத் துறைகளில் மாணவர்கள் சிறந்து விளங்க பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.  தரம் உயர்ந்த கல்வி மட்டுமன்றி வேலைவாய்ப்பை உருவாக்க,  பொறியியல் படித்தவர்களுக்கு கணினி முறையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கை,  2 ஆயிரம் பொறியியல் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை,  திறன் மேம்பாட்டு பயிற்சி போன்றவற்றை அளிக்கிறோம்.
நேர்முகத் தேர்வு செல்லும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ரூ.1.50 கோடி செலவு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழாண்டு 1,850 பேருக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளோம்.  புதுவை மாநிலம் கல்வியில் முதன்மையான மாநிலமாக வர முனைந்து செயல்பட்டு வருகிறோம் என்றார் முதல்வர் நாராயணசாமி.
விழாவில்,   பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கெüடு வரவேற்றார். அரியாங்குப்பம் எம்எல்ஏ ஜெயமூர்த்தி,  வளர்ச்சி ஆணையர்  மற்றும் கல்வித் துறைச் செயலருமான அன்பரசு,  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் சிறந்த படைப்பாளி குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றுகள் வழங்கப்பட்டன.
விழாவில், குழந்தைகளின் பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com