போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு நேரடி அபராதம் விதிக்கும் அதிகாரம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: கிரண் பேடி

போக்குவரத்து விதிகளை மீறுவோர்களுக்கு நேரடி அபராதம் விதிக்கும் அதிகாரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.


போக்குவரத்து விதிகளை மீறுவோர்களுக்கு நேரடி அபராதம் விதிக்கும் அதிகாரம் கொண்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
புதுவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும், விதிமீறல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனைத்துக் காவல் நிலைய தலைமை அதிகாரிகளுடன் ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது:
புதுவையில் போக்குவரத்தைச் சீரமைக்க அனைத்துக் காவல் நிலைய அதிகாரிகளுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது. சாலைப் பாதுகாப்புத் திட்டத்தை வெளிப்படைத் திறனுடன் நடைமுறைப்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 2015-இன்படி, காவல் துறை உதவி ஆய்வாளர் நேரடி அபராதம் (ஸ்பாட் பைன்) விதிக்க அதிகாரம் உள்ளது. தற்போது காவல் துறை போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் 14 பேர் மட்டுமே நேரடி அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் விதிக்க அதிகாரம் கொண்டவர்களின் எண்ணிக்கை தற்போது 87- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்துக் காவல் நிலைய அதிகாரிகளும், காவல் கண்காணிப்பாளர்களும் நேரடி அபராதம் விதிக்கலாம். புதுவையில் 50 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்களே போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோர் மீது நேரடியாக அபராதம் விதிக்க முடியும். விதி மீறலில் ஈடுபடுவோர் பிடிபடும் போது கையில் பணம் இல்லை என்று கூறினால், அவர்களுக்கு உடனே நோட்டீஸ் அளித்து அபராதத்தை நீதிமன்றத்தில் கட்ட அறிவுறுத்த வேண்டும். விதி மீறலை கணினியில் பதிவு செய்து செய்ய வேண்டும். இதற்காக தனி மென்பொருள் ஏற்கெனவே உள்ளது.
புதுச்சேரியில் அதிகமான சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவேதான் சாலைப் போக்குவரத்துப் பாதுகாப்பை ஆளுநர் மாளிகை முன்னெடுத்துள்ளது. சாலைப் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்த அனைத்துக் காவல் நிலையங்களில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் பொறுப்புள்ளது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது, காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதுதான் அதிகமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல, வாகனத்தை நிறுத்துவதிலும் விதிமீறல் உள்ளது. போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடும் போது, வாகன நிறுத்தத் தடை விதிக்கப்பட்ட (நோ- பார்க்கிங்) பகுதியில் வாகனங்கள் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
சாலைப் போக்குவரத்து விதிமீறல் மூலம் வரும் அபராத தொகைகள் அனைத்தும் சாலைப் பாதுகாப்பு நிதிக்கு போய்ச் சேரும் என்றார் ஆளுநர் கிரண் பேடி.
கூட்டத்தில் புதுவை மாநில காவல் துறை தலைவர் சுந்தரி நந்தா, டி.ஐ.ஜி. சந்திரன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com