போலி ஏ.டி.எம். அட்டை மூலம் பண மோசடி: தில்லியைச் சேர்ந்த 2 பேர் கைது

புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். அட்டை மூலம் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தில்லியைச் சேர்ந்த 2 பேரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


புதுச்சேரியில் போலி ஏ.டி.எம். அட்டை மூலம் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தில்லியைச் சேர்ந்த 2 பேரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி அருகே சின்ன கரையாம்புத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சாமூண்டீஸ்வரி (42). அங்கன்வாடி ஆசிரியையான இவருடைய வங்கிக் கணக்கில் இருந்து கடந்த செப். 7 முதல் 9-ஆம் தேதி வரை ரூ. ஒரு லட்சத்து 35 ஆயிரம் போலி ஏ.டி.எம். அட்டை மூலமாகவும், வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவும் அவருக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டிருந்தது.
இது பற்றி அறிந்த சாமுண்டீஸ்வரி அவர் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று கேட்டுள்ளார். அப்போது, அவருடைய வங்கிக் கணக்கு அட்டை எண்ணை வைத்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது, மர்ம நபர்கள் போலி ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த நவ.
9-ஆம் தேதி புதுச்சேரி சிபிசிஐடி-சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சாமூண்டீஸ்வரி புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருட்டுக் கும்பலைப் பிடிக்க காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார், தலைமைக் காவலர்கள் முகமது லியாகத் அலி, பெரியண்ணசாமி, காவலர்கள் மணிமொழி, ஜோசப், இருசவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஸ்கிம்மர் கருவியை ஏ.டி.எம். இயந்திரத்தில் பொருத்தி ரகசிய குறியீட்டு (பின் நம்பர்) எண்ணைத் திருடி, போலி ஏ.டி.எம். அட்டையைத் தயாரித்து, நள்ளிரவு 11.45 முதல் 12.30 மணிக்குள் பணத்தைத் திருடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பணம் திருடப்பட்ட செப். 7 முதல் 9-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில் புதுச்சேரியில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தது யார் யார் என்பது குறித்து தனிப் படையினர் விசாரித்தனர். அவர்களுடைய செல்லிடப்பேசி எண்களையும் போலீஸார் கண்காணித்தனர்.
இதில், தில்லி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்விநாதன் (29), ககன்குமார் (32) ஆகியோர் குறிப்பிட்ட ஏ.டி.எம். மையத்தில் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் தலைமையிலான தனிப் படையினர் தில்லி சென்று, அங்குள்ள காவல் துறை உதவியுடன் கல்விநாதன், ககன்
குமார் ஆகியோரை கைது செய்து ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சாமூண்டீஸ்வரி வங்கிக் கணக்கில் இருந்து ரூ. ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணத்தைத் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து புதுவை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால்,
சிபிசிஐடி-சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிடிபட்ட கல்விநாதன், ககன்குமார் இருவரும் தில்லியில் இருந்து புதுச்சேரி அருகே உள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்துக்கு வந்து, தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி ரகசியக் குறியீட்டு எண்ணைத் திருடி, போலி ஏ.டி.எம். அட்டைகளைத் தயார் செய்து பலரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடியுள்ளனர். அந்தப் பணத்தை கூனிமேடு பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தங்களுடைய பெயரில் வரவு வைத்துள்ளனர். அவர்கள் சுமார் ரூ. 15 லட்சம் வரை திருடியுள்ளனர். ககன்
குமார் மீது ஏற்கெனவே தில்லியில் ஏ.டி.எம். வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னரே இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என்றனர்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏ.டி.எம். அட்டை பண மோசடி வழக்கில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com