நிதித் துறைச் செயலர் மீதான உரிமை மீறல்: புகாரை விசாரிக்க பேரவைத் தலைவர் உத்தரவு

புதுவை நிதித் துறைச் செயலர் கந்தவேலு மீதான உரிமை மீறல் புகாரை விசாரிக்க சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.

புதுவை நிதித் துறைச் செயலர் கந்தவேலு மீதான உரிமை மீறல் புகாரை விசாரிக்க சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
புதுவை அரசின் நிதித் துறைச் செயலர் கந்தவேலு, அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கு அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையில் அரசின் மானிய நிதியைக் கையாளும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. ஆளுநரின் ஒப்புதலின்றி நிதியைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி, தனக்குத் தெரியாமல் நிதிச் செயலர் தன்னிச்சையாக வெளியிட்ட அந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்து சனிக்கிழமை நிலை ஆணை பிறப்பித்தார்.
இருப்பினும், இதை ஏற்க மறுத்த நிதிச் செயலர் கந்தவேலு, அரசு அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய குறிப்பாணையில், தான் ஏற்கெனவே வெளியிட்ட சுற்றறிக்கையின்படியும், மத்திய பொது நிதிச் சட்ட விதிமுறைகளின்படியும் அரசு மானிய நிதியைக் கையாளும் முழு அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என்று மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தை திங்கள்கிழமை இரவு சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி கடிதம் அளித்தார்.
அது தொடர்பாக சட்டப்பேரவை வட்டாரங்கள் கூறியதாவது: முதல்வர் ஆணையைச் செயல்படுத்த முடியாது என்று நிதித் துறைச் செயலர் கந்தவேலு தெரிவித்துள்ளார். 
இது உரிமை மீறலாகும். அதனால், நிதிச் செயலர் மீது உரிமை மீறல் புகாரை பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளார். இதை விசாரிக்க உரிமை மீறல் குழுவுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உரிமை மீறல் குழுவின் தலைவராக இருக்கும் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவர் வந்த பிறகு இந்தப் புகார் மீதான விசாரணை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அதிமுக எம்.எல்.ஏ. அளித்த உரிமை மீறல் புகார் மீது விசாரணை நடத்திய பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட  நகராட்சி ஆணையராக இருந்த சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com