தொடர் மழை: புதுச்சேரியில் 12 ஏரிகள் நிரம்பின

தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் 12 ஏரிகள் நிரம்பியுள்ளன.

தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் 12 ஏரிகள் நிரம்பியுள்ளன.
 தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாள்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 இந்த நிலையில், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிநிற்கிறது. வீடுகளைச் சுற்றியும் தண்ணீர் தேங்கியுள்ளது. புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 முதல் புதன்கிழமை காலை 8.30 மணி வரை 23.8 மி.மீட்டர் மழையும், புதன்கிழமை காலை 8.30 முதல் மாலை 5.30 மணி வரை 16.2 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
 இதனிடையே தொடர் மழை காரணமாக புதுவை மாநிலத்தின் 2-ஆவது பெரிய ஏரியான பாகூர் ஏரி 3.6 மீட்டர் உயரத்தில் 1.64 மீட்டர் தண்ணீர் நிரம்பியுள்ளது.
 பாகூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 24 ஏரியில் பனையடிக்குப்பம், சித்தேரி, கரையான்புத்தூர் ஏரி, வண்ணான் ஏரி, கடுவனூர் ஏரி, இருளன்சந்தை ஏரி, ஆராய்ச்சிக்குப்பம், மேல்பரிக்கல்பட்டு, உச்சிமேடு ஏரி, மணப்பட்டு, அரங்கனூர் பெரியமேடு, கிருமாம்பாக்கம் சின்ன ஏரி ஆகிய 12 ஏரிகள் நிரம்பியுள்ளன.
 விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இவற்றை விவசாயிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த 2 தினங்களாக பெய்த மழையினால் கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட்டை கிராமத்தில் கூலித்தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. மழையால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய், மின்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com