காவலர் தேர்வு விவகாரம்: ஆளுநர் நிராகரித்த கோப்பு மத்திய உள்துறைக்கு அனுப்பப்படும்

புதுவையில் காவலர் தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்பை 

புதுவையில் காவலர் தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்பை மத்திய உள்துறைக்கு அனுப்புவோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 பெரியாரின் 140-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு புதுவை அரசு சார்பில் முதல்வர் வே.நாராயணசாமி மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினார்.
 இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 புதுவை காவல் துறையில் 390 காவலர் பணியிடங்களுக்கு இதுவரை 7,000 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
 இந்தத் தேர்வுக்கான வயது வரம்பு அதிகபட்சம் 22 என்பதை 24-ஆக உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
 அதன் அடிப்படையில் வயது வரம்பை 24-ஆக உயர்த்துவது தொடர்பான கோப்பை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பினோம். ஆனால், அவர் அதற்கு அனுமதி தரவில்லை. மாறாக, அதை திருப்பி அனுப்பிவிட்டார்.
 எனவே, இதுதொடர்பான கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். காவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
 புதுவையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர் என்றார் நாராயணசாமி.
 துணைநிலை ஆளுநர் கருத்து: புதுவை காவலர் தேர்வில் வயதை தளர்த்துவது கொள்கை மீறும் செயல் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் தனது கட்செவி அஞ்சலில் வெளியிட்ட பதிவு :
 பிரதமரின் உத்தரவின் கீழ் அமைக்கப்பட்ட காவலர் சீர்திருத்தக் குழு பரிந்துரைப்படி செயல்பட்டு வருகிறோம்.
 தேசிய அளவில் அமைக்கப்பட்ட இந்தக் குழு ஆலோசனைகளைக் கேட்டது. தற்போதைய கொள்கை அந்தக் குழு பரிந்துரைத்தது. அது மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
 எனவே, வயது தளர்வு கொடுத்தால், அது கொள்கையை மீறுவதாகும். காவலர் தேர்வுக்கு கொள்கை இல்லாமல் இல்லை. நம்மிடம் கொள்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com