ஆயுதப் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் கடன்தொல்லை காரணமாக ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரியில் கடன்தொல்லை காரணமாக ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி லாசுப்பேட்டை அசோக் நகர் பகத்சிங் வீதியைச் சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ் (39), புதுச்சேரி ஆயுதப்படைக் காவலர். இவரது மனைவி சபிதா, இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சுரேஷ் வீட்டில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதற்காக பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாகத் தெரிகிறது. ஏலச்சீட்டு எடுத்தவர்கள் முறையாக பணத்தை செலுத்தவில்லையாம். 
இதே போல, பலருக்கு ஏலச்சீட்டு பணத்தையும் சுரேஷ் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த வகையில், சுமார் ரூ. 30 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. ஏலச்சீட்டில் மோசடி செய்துவிட்டதாக சுரேஷ் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கும் நிலுவையில் உள்ளது. 
மேலும், தொழிலுக்காக சுரேஷுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து, பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் அவர் கடந்த சில நாள்களாக கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல, பணிக்குச் சென்றவர் அலுவலகத்துக்கு செல்லாமல் லாசுப்பேட்டை இடையன்சாவடி சாலை ஓடைக்கரையில் இருந்த மரத்தில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் லாசுப்பேட்டை போலீஸார், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com