அதிமுக எம்எல்ஏவை மிரட்டினால்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்

காங்கிரஸ் ஆட்சியை கலைக்க குதிரை பேரம் நடத்திய விவகாரத்தை வைத்து அதிமுக எம்.எல்.ஏ.வை மிரட்டினால் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா


காங்கிரஸ் ஆட்சியை கலைக்க குதிரை பேரம் நடத்திய விவகாரத்தை வைத்து அதிமுக எம்.எல்.ஏ.வை மிரட்டினால் பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று புதுவை பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எச்சரிக்கை விடுத்தார்.
 இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அமைத்துள்ள கூட்டணி பற்றி காங்கிரஸ் தலைவர்களும், அதன் கூட்டணிக் கட்சியினரும் குறை கூறி வருகின்றனர். அதற்கு எந்தவிதமான தகுதியும்,  அறுகதையும் அவர்களுக்கு இல்லை.  அரசியலில் பல்வேறு சூழ்நிலைகளில், பல கட்சிகள் அவ்வப்போது ஏற்படுகிற சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைப்பது என்பது ஜனநாயகத்தில் ஒன்று.  அந்த அடிப்படையில் புதுவை மக்களவைத் தொகுதியில் எங்கள் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட கட்சித் தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.  எங்களிடம் 5 எம்எல்ஏக்கள் இருந்தபோது மாநிலங்களவை உறுப்பினரை என்.ஆர். காங்கிரஸ் விட்டுக் கொடுத்தது. அதேபோல, நடைபெற்ற இடைத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஆதரவாக ரங்கசாமி வாக்கு சேகரித்தார். தற்போது, புதுவை எம்பியாக என்.ஆர். காங்கிரஸை சேர்ந்தவர் உள்ளார். இதனால் எம்.பி. தொகுதியை என்.ஆர்.காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்துள்ளோம்.   தற்போது, ஆட்சியைக் கலைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சிகள் விலை பேசுவதாக கூறுகின்றனர். விலைபேசக்கூடிய பலகீனமான எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கொண்டுள்ளதா.  அதிமுக பேசியதற்கு என்ன ஆதாரம் உள்ளது.   இந்த ஆட்சி அமைந்த ஆறாவது மாதத்தில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலர் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது.  அதிகாரம் இருப்பதால் அதிமுக எம்.எல்.ஏ.க்களை மிரட்ட கூடாது.  பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசும் எண்ணமும் அதிமுகவுக்கு இல்லை.நேர்வழியில் நிச்சயம் புதுவையில் ஆட்சிக்கு வருவோம்.  பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அரசியல் பண்புகளையும், பல்வேறு பதவிகளையும் வகித்தவர்.  இவ்வாறு மிரட்டுவதால் அவரின் மதிப்பு கெடும்.  பேரவைத் தலைவர் அரசியல் நிலைக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். ஆளுநர் மீது அதிமுக கொடுத்த உரிமை மீறல் புகார் இதுவரை விசாரிக்கப்படவில்லை.  எதிர்க்கட்சிகளிடம் பேரம் பேசிய எம்.எல்.ஏ.க்கள் மீது காங்கிரஸ் கட்சிதான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அன்பழகன். பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ.  ஓமலிங்கம்உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com