காணும் பொங்கல்: புதுச்சேரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை பொது மக்கள்,

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வியாழக்கிழமை பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்து உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.
 பொங்கல் பண்டிகை கடந்த ஜன.15-ஆம் தேதியும்,  புதன்கிழமை மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது. தை மாதம் மூன்றாவது நாளான வியாழக்கிழமை காணும் பொங்கல்  உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர். கடற்கரை,  பாரதி பூங்கா,  மணக்குள விநாயகர் கோயில், தாவரவியல் பூங்கா,  அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
 இதேபோல, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம், கர்நாடகம்,  கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்தனர்.  மேலும், சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.  ஊசுட்டேரி படகு குழாம்,  ஆரோவில், சின்ன வீராம்பட்டினம் சின்வீர் பீச்,  பொம்மையார்பாளையம் உள்ளிட்ட கடற்கரைகளில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்து மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடினர்.
காணும் பொங்கல் கொண்டாட்டம் காரணமாக, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதே போல, கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 650 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com