புதுவை தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக்கூடாது: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி வி.கந்தவேலுவை மாற்றக்கூடாது என, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கோரிக்கை மனு அனுப்பினார்.

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி வி.கந்தவேலுவை மாற்றக்கூடாது என, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கோரிக்கை மனு அனுப்பினார்.
 இது குறித்து அவர் அனுப்பிய மனு விவரம்: புதுவை மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் கந்தவேலு மிகச் சிறப்பான முறையில் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
 இதனிடையே, அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக, ஆளும் காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கந்தவேலுவை தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
 எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதனை மிகத் திறமையாகவும், நேர்மையாகவும் நடத்தும் திறன் பெற்ற ஓர் அதிகாரியை மாற்றல் செய்ய வலியுறுத்துவது உள்நோக்கம் கொண்டதாக மக்கள் மத்தியில் விமர்சிக்கப்படுகிறது.
 கந்தவேலு, 2016-ஆம் ஆண்டு மிக செம்மையாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்தி சிறந்த தலைமை தேர்தல் அதிகாரி விருதை பெற்றவர்.
 இதுபோன்று, திறமையாக செயல்படும் தலைமை தேர்தல் அதிகாரியை சுயநலத்துக்காக மாற்றி விட்டு தங்களுக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைக்கக் கூடிய ஒரு அதிகாரியை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்து அவரை தங்களுக்கு சாதகமாக செயல்பட வைக்க துடிக்கின்றனர்.
 இந்த முயற்சி ஜனநாயகத்துக்கு விரோதமானது எனத் தெரிவித்துள்ளார் ஓம்சக்தி சேகர்.
 கந்தவேலுவை இடமாற்ற வலியுறுத்தி, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் மனு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com