தொடர்ந்து ஏமாற்றி வரும் மழை: செஞ்சி பகுதி விவசாயிகள் கவலை

மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் செஞ்சி வட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.


மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் செஞ்சி வட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதைத் தொடர்ந்து செஞ்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு மாதங்களில் நிலத்தடி நீரும் அடியோடு வற்றிப் போய்விடும். செஞ்சி நகரைப் பொருத்தவரை நீர்மட்டம் குறைந்து வருகிறது. திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் இருந்து குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இதுவும் சரிவர பெறப்பட்டு விநியோகம் நடை பெறுவதில்லை.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த மழையால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்த நீரும் தற்போது வற்றிவிட்டது. கஜா புயலும் விழுப்புரம் மாவட்டத்தை ஏமாற்றி விட்டது.
பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில், இயற்கை சீற்றங்களான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் போன்ற காரணங்களால் மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையும் பொய்த்து போனதால் செஞ்சி வட்ட மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
செஞ்சி நகருக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குவது திருவண்ணாமலை சாலையில் உள்ள பி. ஏரியும், சிறுகடம்பூரில் உள்ள பெரிய ஏரியும்தான்.
ஆனால், ஆக்கிரமிப்புகளால் ஏரிகளுக்கு நீர்வருவது தடைபட்டுள்ளது. மழையாலும், ஆற்று வெள்ளத்தாலும் நிரம்பும் ஏரிகள் செஞ்சி வட்டத்தில் அதிகம் உள்ளன.
இவற்றின் நீர்வழித் தடங்களில் உள்ள தடைகளை அகற்றி நீர் வருவதற்கான ஆதாரங்களை ஏற்படுத்த அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயமும், நிலத்தடி நீரும் காப்பாற்றப்படும். மழைநீர் சேகரிப்பு மற்றும் ஏரி, குளம், நீர் நிலைகளுக்கு வரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், தூர்வாரப்படாமலும் உள்ளது. வீட்டுக்கு வீடு மழை நீரை அவசியம் சேமிக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி, அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்க வேண்டும். மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். செஞ்சி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏரிகளை நிரப்புவதற்காக நந்தன் கால்வாய் திட்டம், வராக நதி திட்டம், கூடப்பட்டு அணைத் திட்டம் ஆகியவை செயல்படாமல் உள்ளது.
மழைக் காலங்களில் இவற்றை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com