விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல்,

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
 தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் மற்றும் திண்டிவனம் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் காற்றுடன் மழை தொடர்ந்து பெய்தது. விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பிற பகுதிகளில் பிற்பகல் முதல் விட்டு, விட்டு மழை பெய்தது.
 கஜா புயலுக்குப் பிறகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு இரு தினங்கள் சென்றிருந்த நிலையில், மீண்டும் கடல் சீற்றம், புயல் எச்சரிக்கை காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்குச் செல்லவில்லை. புதன்கிழமை கடல் அலை அதிக உயரத்துடன் எழுந்து சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் படகுகளை பத்திரமாக நிறுத்தி வைத்தனர்.
 கஜா புயல் எதிர்பார்த்த மழையை தராததால் ஏமாற்றமடைந்திருந்த விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், தற்போது இரு தினங்களாக பெய்து வரும் மழையால் மகிழ்ச்சியடைந்தனர். புதன்கிழமை காலை வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்(மி.மீ.): திண்டிவனம் 37, மரக்காணம் 18, விழுப்புரம் 10, கெடார் 65, சூரப்பட்டு 42, தியாகதுருகம் 12, எறையூர் 15, முகையூர் 18. மொத்த மழையளவு 250 மி.மீ.
 கடலூரில்... தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே மழை பெய்து வருகிறது. இந்த மழை புதன்கிழமையும் மதியம் முதல் பெய்தது. அப்போது, சுமார் 35-45 கி.மீ. வரை காற்று வீசியது. இதனால், மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைபட்டது. கடல் வழக்கத்தை விட அதிகமான சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பின. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கஜா புயலுக்குப் பிறகு 2 நாள்களுக்கு மட்டுமே மீன்பிடித் தொழில் நடைபெற்ற நிலையில் மீன்பிடித் தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
 புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 51.3 மில்லி மீட்டர் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழை யளவு(மில்லி மீட்டரில்): பரங்கிப்பேட்டை 48. லால்பேட்டை 45, அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில் தலா 34, வானமாதேவி, புவனகிரி தலா 22, குறிஞ்சிப்பாடி 17, ஸ்ரீமுஷ்ணம், கொத்தவாச்சேரி, வடக்குத்து, பெலாந்துறை தலா 14, குடிதாங்கி 12, கடலூர் 11, சேத்தியாத்தோப்பு, வேப்பூர், குப்பநத்தம் தலா 8, காட்டுமயிலூர், பண்ருட்டி, விருத்தாசலம் தலா 7, லக்கூர் 6, கீழச்செருவாய், மேமாத்தூர் தலா 5 மில்லி மீட்டர் மழை பதிவானது.
 புதுச்சேரியில்... தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப் பெறும்போது, புதுச்சேரி, காரைக்காலில் 2 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, புதுச்சேரியில் புதன்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு மேல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் விட்டு, விட்டு பெய்தது.
 கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com