ஊழலுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட மார்க்சிஸ்ட் கம்யூ. முடிவு

தமிழகத்தில் ஊழல், முறைகேடுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என

தமிழகத்தில் ஊழல், முறைகேடுகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது என மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் செப்.22-இல் தொடங்கி செப்.-24 வரை 3 நாள்கள் நடைபெற்றது.
 கூட்டத்தின் நிறைவாக, அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
 தமிழகத்தில் பாஜகவினர் சிலரை பேச விட்டு பதற்றமான சூழலை ஏற்படுத்துகின்றனர். அதுகுறித்து மாநில அதிமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. அதேவேளையில், பாஜகவை விமர்சிப்போர் மீது மட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கின்றனர். வன்முறையை தூண்டுவோருக்கு அதிமுக அரசு பாதுகாப்பு அளிக்கிறது. பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யாவிட்டால், நாங்களே பிடித்து வந்து காவல் துறையிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படும்.
 தமிழக அரசின் சுகாதாரத் துறை, மின் துறை, சத்துணவுத் துறை என அனைத்துத் துறைகளிலும் ஊழல் புகார்கள் கூறப்படுகின்றன. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் கூறப்பட்டும் நடவடிக்கை இல்லை. முதல்வர், துணை முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்றுள்ளது. ஆகவே, நேர்மையான விசாரணைக்கு ஒத்துழைத்து தமிழக அரசு பதவி விலக வேண்டும். ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது. எரிவாயு உருளை ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது. அரிசி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் தவிக்கின்றனர். ஆனால், இருக்கின்ற வேலையைப் பறிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வருகின்றன. நடத்துநர் இல்லாத பேருந்துகள் தமிழகத்துக்கு தேவையில்லை. அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
 அவுட்சோர்ஸிங் முறையில் வேலைவாய்ப்புகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
 விவசாயம், கட்டுமானத் தொழில் பாதித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு சுய நலத் தேவைகளை மட்டுமே நிறைவேற்றி வருகிறது என்றார்.
 அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, விழுப்புரம் மாவட்டச் செயலர்கள் என்.சுப்பிரமணியன், ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com