பயணிகள் மறியலால் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலத்துக்குச் செல்ல ரயில் இல்லாததால் பயணிகள் வியாழக்கிழமை இரவு ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலத்துக்குச் செல்ல ரயில் இல்லாததால் பயணிகள் வியாழக்கிழமை இரவு ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
 சித்திரை பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் கிரிவலத்துக்குச் செல்வதற்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு பெற்று, நடைமேடையில் காத்திருந்தனர்.
 மாலையில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக காட்பாடிக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயிலிலும், மயிலாடுதுறையிலிருந்து திருவண்ணாமலை வழியாக காட்பாடிக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயிலிலும் கூட்டம் அலைமோதியதால், விழுப்புரத்தில் காத்திருந்த பயணிகளுக்கு அந்த ரயில்களில் இடம் கிடைக்கவில்லை.
 இந்த நிலையில், மயிலாடுதுறையிலிருந்து வந்த ரயிலின் கார்டு பெட்டியில் பயணிகள் சிலர் ஏறிக்கொண்டனர். இதனால், அந்த ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
 இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் அந்தப் பெட்டியில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டனர்.
 பின்னர், ரயிலை இயக்க முயன்றபோது, ரயிலில் இடம் கிடைக்காததால் அதிருப்தியடைந்த பயணிகள், ரயில் முன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
 இதனால், அந்த ரயில் புறப்பட்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தினர்.
 இதையடுத்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கக் கோரி, விழுப்புரம் ரயில் நிலைய உதவி மேலாளர் அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டனர். மேலும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களையும் மறித்து, போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எச்சரித்தனர்.
 இதையடுத்து, விழுப்புரம் ரயில்வே அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்க ஒப்புதல் பெற்றனர். இதன்பிறகு, புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்துக்கு வந்த பயணிகள் ரயில், திருவண்ணாமலை வரையில் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், பயணிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு, அந்த ரயிலில் ஏறி திருவண்ணாமலைக்குச் சென்றனர்.
 சாலை மறியல்: இதேபோல, மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்காக, விழுப்புரம் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை அதிகாலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளுக்காக காத்திருந்தனர். ஆனால், விழுப்புரத்திலிருந்து திருச்சி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்கு போதிய அளவில் பேருந்துக்கள் இயக்கப்படாததாலும், பிற ஊர்களில் இருந்து விழுப்புரத்துக்கு வந்த பேருந்துகளில் கூட்டம் அலைமோதியதாலும், வேறு வழியில்லாமல், பேருந்துகளின் மேல்கூரையின் மீது ஏறி ஆபத்தான முறையில் பயணிகள் சென்றனர். எனினும், பேருந்துக்காக 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், விழுப்புரம் பேருந்து நிலையம் முன் காலை 8 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து வந்த விழுப்புரம் டி.எஸ்.பி. திருமால் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com