விழுப்புரம் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதச் சம்பவங்களின்றி, கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதச் சம்பவங்களின்றி, கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
 விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. 3,227 வாக்குச் சாவடிகளில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 828 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 15, 673 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப் பதிவை நடத்தினர். தேர்தலுக்காக 3,250 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரை பயன்படுத்தப்பட்டன.
 விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திண்டிவனம் சட்டப் பேரவைத் தொகுதியில் 264 வாக்குச் சாவடிகளிலும், வானூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 277 வாக்குச் சாவடிகள், விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 284 வாக்குச் சாவடிகள், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 275 வாக்குச் சாவடிகள், திருக்கோவிலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 286 வாக்குச் சாவடிகள், உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் 337 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது.
 விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 1,723 வாக்குச் சாவடிகளில் 1,800 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 1,750 வாக்குப் பதிவை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
 காலையில் விறுவிறுப்பு: மக்களவைத் தேர்தல் காலை 6 மணிக்கு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில், மாதிரி வாக்குப் பதிவுடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆர்வத்தோடு திரண்டு வந்த மக்கள், வரிசையில் நின்று வாக்களித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.6 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து, காலை 11 மணிக்கு 23.12 சதவீதமும், பகல் 12 மணிக்கு 33.2 சதவீதமும், பிற்பகல் ஒரு மணிக்கு 49.33 சதவீதமும், மாலை 3 மணிக்கு 59.78 சதவீதமும், மாலை 5 மணிக்கு 64.53 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
 மாலையில் வெறிச்சோடியது: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வந்த நிலையில், வெயில் காரணமாக பிற்பகல் ஒரு மணிக்குப் பிறகு வாக்குச் சாவடிகளில் கூட்டம் குறைந்தது. இதன்பிறகு, மாலை 3 மணிக்கு மீண்டும் மக்கள் வாக்களிக்க வந்தனர். எனினும், மாலை 5 மணிக்குப் பிறகு எதிர்பார்த்த அளவில், குறிப்பாக விழுப்புரம், திண்டிவனம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட நகரங்களில் வாக்குச் சாவடிகள் வாக்களர்களின் வருகையின்றி வெறிச்சோடின.
 விழுப்புரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிகள் மாலையில் வாக்காளர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. வாக்காளர்களின் வருகை இல்லாததால், மாலை 6 மணிக்கு தேர்தலை முடித்து, வாக்கு இயந்திரங்களுக்கு "சீல்' வைத்தனர். இந்த வாக்குச் சாவடிகளில் 70 சதவீத அளவில் மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றது.
 டோக்கன்: விழுப்புரத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் கூட்டம் அதிகரித்ததால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, 20-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் டோக்கன் வழங்கப்பட்டு, இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
 மகளிர் வாக்குச் சாவடிகள்: பெண்கள் வாக்களிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா 11 இடங்களில் மகளிருக்கான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச் சாவடிகளில் அலுவலர்கள், காவலர்கள் என அனைவரும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். இவற்றில், அந்தந்த வாக்குச் சாவடிக்கு உள்பட்ட பெண்கள் மட்டுமே பங்கேற்று வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 மாவட்டம் முழுவதும் காலை 7 மணிக்குத் தொடங்கிய தேர்தல், இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர்த்து, பெரிய மோதல்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவடைந்ததால், காவல் துறையினரும், தேர்தல் அலுவலர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com