அங்கன்வாடியில் சிறுமியின் பார்வை பாதிப்பு: அரசு உதவியை கோரும் பெற்றோர்

உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் விளையாடியபோது, கண்ணில் மூங்கில் கொம்பு குத்தியதில் பார்வை பாதித்த சிறுமிக்கு,  இயல்பான பார்வை திரும்ப அரசு உதவக் கோரி, பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம்

உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் விளையாடியபோது, கண்ணில் மூங்கில் கொம்பு குத்தியதில் பார்வை பாதித்த சிறுமிக்கு,  இயல்பான பார்வை திரும்ப அரசு உதவக் கோரி, பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பெரும்பட்டு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர், உரிய பணி கிடைக்காமல் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் காயத்ரி(4).  அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்கிறார்.
கடந்த புதன்கிழமை (பிப்.13)  வீட்டிலிருந்து அங்கன்வாடிக்குச் சென்ற காயத்ரி, அங்கு விளையாடியபோது, வேலியிலிருந்த மூங்கில் கொம்பு கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டது.  உடனே,  காயத்ரியை அழைத்து வந்த அங்கன்வாடி ஊழியர் வேம்பரசி,  பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்காமல் விட்டுச் சென்றுள்ளார்.
எனினும், காயத்தால் அவதிப்பட்ட சிறுமியை புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்து பரிசோதித்தபோது,  கண்ணில் மூங்கில் குச்சி குத்திய நிலையில் பார்வை பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அறுவைச் சிகிச்சை செய்து குச்சி அகற்றப்பட்டது.
இதனிடையே,  அங்கன்வாடியில் குழந்தை பாதித்தது குறித்து, தெளிவாகக் கூறாமலும், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில்,  அங்கன்வாடி பணியாளர் வேம்பரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
காயத்ரிக்கு தீவிர சிகிச்சை அளித்து, பார்வை பாதிப்பை சரி செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்று, பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், மகேஷ், அவரது மனைவி,  குழந்தை காயத்ரி ஆகியோர்,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்து மேலும் கூறியதாவது:  அறுவை சிகிச்சை செய்தும் காயத்ரி கண் பார்வையின்றி உள்ளார்.  
இது தொடர்பாக, நேரில் வந்து விசாரித்த சமூக நலத் துறையினர் குழந்தை கண் பார்வை திரும்ப வேண்டிய உதவியை செய்வதாகக் கூறிச் சென்றனர். ஆனால், எந்த உதவியையும் செய்யவில்லை. நாங்கள் ஏழ்மை நிலையில் உள்ளதால்,  எங்களது குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவர் கண்பார்வை பெற, தீவிர சிகிச்சைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
மனுவைப் பெற்று விசாரித்த ஆட்சியர் இல.சுப்பிரமணியன், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com