2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்!

வழக்கமாகத் தமிழ்த் திரைப்படங்களில் 5 பாடல்கள், 4 சண்டைக்காட்சிகள், கடி சிரிப்புகள் நிச்சயமாக இருக்க வேண்டும்
2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்!

வழக்கமாகத் தமிழ்த் திரைப்படங்களில் 5 பாடல்கள், 4 சண்டைக்காட்சிகள், கடி சிரிப்புகள் நிச்சயமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் வணிக நுட்பத்திலும், மக்கள் பார்வையிலும் எடுபடாது என்கிற நிலையே தொடர்ந்து வந்த சூழலில், நல்ல கதைகளைத் தேடிப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் 2018-ம் ஆண்டுத் தமிழ்த் திரைப்படப்படங்கள் வெளிபடுத்தியுள்ளன.

முன்னணி நட்சத்திரங்களிலிருந்து சிறிய படத் தயாரிப்பு நிறுவனங்கள் வரை நல்ல கதைகளைத் தேர்வு செய்ய முனைந்திருப்பதும், ரசிகர்களும் நல்ல கதைகளைப் போட்டி போட்டு பார்த்ததும், தமிழ்த் திரையுலகத்திற்கு சிறந்த திருப்புமுனை என்று பெருமையாகச் சொல்லலாம்.

அதிக செலவில் உருவான படம், அதிக மக்களால் பார்க்கப்பட்ட படம், சிறந்த தொழில்நுட்பம் போன்ற பிம்பங்களைத் தாண்டி ஊழல் ஒழிப்பு, இயற்கைப் பாதுகாப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயம் ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பத்து சிறந்த திரைப்படங்களே இங்கு வரிசைபடுத்தப்படுகின்றன.

விஸ்வரூபம்2, அண்ணனுக்கு ஜே, இமைக்காநொடிகள், இரவுக்கு ஆயிரம் கண்கள், காற்றின் மொழி, நடிகையர்திலகம், கடைக்குட்டி சிங்கம், சவரக்கத்தி, இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, அடங்க மறு, பியார் பிரேமா காதல், டிக்டிக், சீதக்காதி போன்ற படங்களை இந்தப் பத்துப் படங்களுக்குள் பட்டியலிட முடியாமல் போனதற்கு அந்தப் படங்களின் வெற்றியை விட, மைய கதைக்கருவைச் சிறந்த திரைப்படமாக மாற்றியதில் வெற்றிபெற்ற சிறந்த பத்துப் படங்களே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவான வடசென்னை நல்ல திரைக்கதை, நல்ல இயக்கம், சிறந்த தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் கதை உருவாக்கத்திலும் வசனத்திலும் எதிர்மறையைத் திரைமொழியாகக் கொண்டிருப்பதாகவே தோன்றுவதால் சிறந்த பத்துப் படங்களுக்குள் கொண்டு வர முடியவில்லை. வடசென்னை வாழ் மக்களின் கல்வி, விளையாட்டு, போன்றவற்றைப் புறந்தள்ளி இருப்பதால் “எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் பேர் ரௌடிசம்னா, ரௌடிசம் பண்ணுவோம் “, என்ற வசனத்தின் வீரியம் அடிபட்டு போகிறது.  ஒரு சமூகத்தின் வீழ்ச்சிக்குச் சுயநலமிக்க, துரோகச் சிந்தனை மிக்க குழுமங்கள்  முக்கிய காரணமாகத் திகழ்கின்றன என்பதை அழுத்தமாகப் பதிவிட்ட வகையில் இந்தத் திரைப்படத்தைப் பாராட்டலாம்.

விஜய்சேதுபதி த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கௌரிஜிகிஷன் உள்ளிட்டோரின் இயல்பான வாழ்வியல் கதாபாத்திரங்களும் பிரேம்குமாரின் திரைக்கதையும் எழிலான காதல் ஓவியத்தை வரைந்திருக்கிறது. பள்ளிகால நினைவுகளையும் மறக்க முடியாத இழப்புகளையும் அழகாகக் காண்பித்தற்கான மகிழ்ச்சியை 96 தந்தது. அதிரடிக்குப் பேர் போன திரையுலகில் மென்மையான ஒரு கதையை பொலிவான தொழில்நட்பத்தில் உருவாக்க முடியும் என்பதற்கு இப்படம் சான்றாகத் திகழ்கிறது.  எனினும் நல்ல கருத்து சொல்வதில் தவறிய காரணமாக இந்தப் பத்துப் படப் பட்டியலுக்குள் 96ஐ கொண்டு வர முடியவில்லை.

10.கேஜிஎப்

இந்தப் படத்தின் கதையை வழக்கமான கேங்ஸ்டார் கதை என்று ஒதுக்கி விட முடியாதவாறு கொத்தடிமைக் கொடுமைகளுக்கு எதிரான கதைக் கருவை உள்ளடக்கியதாக இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வீதிநாடகத்தில் தொடங்கி தொலைக்காட்சி நாடகங்களில் தொடர்ந்து  கன்னடத் திரையுலகில் கதாநாயகனாக நுழைந்திருக்கும் யஷ் தன்னுடைய ஆவேசமான நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். கன்னட மொழிப் பெயர்ப்புத் திரைப்படமாக இருந்தாலும் தமிழ்த் திரையுலகிற்குப் புது இலக்கணத்தை அடையாளம் காட்டிய வகையில் கேஜிஎப் திரைப்படம் இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடிக்கிறது.

09.தானா சேர்ந்த கூட்டம்

இலஞ்சம் கொடுக்க முடியாததால் தான் விரும்பிய காவல்துறை பணியில் சேர முடியாததால் தற்கொலை செய்து கொள்ளும் நண்பனுக்காக நாயகன் பழி வாங்குகிற கதை. வழக்கமாக எதிரிகளைப் பழிவாங்குவதற்காக கொல்லுதல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் இலஞ்ச ஒழிப்புக்கான வித்தியாசமான கதாநாயகன் எடுக்கும் முயற்சிகள் இப்படத்தை வெற்றி பெற வைத்தது.  ஆனால் எதார்த்தத்தை மீறிய காட்சிகளும் நடைமுறையில் சாத்தியமில்லாத திரைக்கதை நிகழ்வுகளும் இப்படத்தை இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலேய நிற்க வைக்கிறது.

08.காலா

நிலம் எங்கள் உரிமை என்ற முழக்கமே பூமியில் மனிதப் பிறவியின் அடிப்படைப் போர்க் குணமாகும். இறந்தகால வரலாறு முதல் எதிர்கால வரலாறு வரை நில உரிமை பற்றிய நிகழ்வுகளைப் பேசப்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த நில உரிமை தொடபான நல்ல கதைக்கருவைச் சிறந்த திரைப்படமாக உருவாகி இருக்கிறது. தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் கையில் இருக்கும்போது திரைக்கதை உருவாக்கத்தில் முழுக்கவனம் செலுத்த ரஞ்சித் தவறி இருக்கிறார். மக்களின் உரிமைக் குரலை ரஜினிக்கு ஏற்ற வகையில் கொடுத்திருக்க வேண்டும் என்பதே ரஜினி ரசிர்கள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் அனைவரும் விரும்பியது. ஏழ்மை நிலை மக்களின் நிலங்களைப் பறித்து முதலாளித்துவத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்த இந்தத் திரைப்படம் நில உரிமை வரலாறைப் பேசிய இந்தியத் திரைப்படங்களில் நிலையான இடம் பிடிக்கும் என்பதால் இந்தப் பத்துப்படங்கள் வரிசையில் எட்டாவது இடம் பிடிக்கிறது.

7.எந்திரன் 2.0

பறவைகள் அழிவிற்கான காரணத்தைப் பற்றி பேசிய 2.0 உலத்தரமான நவீன தொழில்நுட்பத்தில் உச்சத்தைத் தொட்டிருந்தாலும் நல்ல கதைக்கருவைச் சிறந்த திரைக்கதையாக மாற்றிக் கொள்வதில் தடுமாற்றத்தைச் சந்தித்து இருக்கிறது. ஆன்மீகச் சிந்தனையை அறிவியல் என்று சொன்னதும் பார்வையாளர்களுக்கு உறுத்தலைத் தந்தது. எனினும் பறவைகளின் அழிவைத் தடுக்க போராடும் அக்ஷய்குமாரின் 15 நிமிடக் காட்சிகள் பார்ப்பவரைச் சிந்திக்கத் தூண்டியது. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று ரஜினிகாந்த் சொல்லும் கடைசி 10 நொடி வசனத்தைப் படம் முழுக்க பரவச் செய்வதில் இந்தப் படம் முழுமை பெற்றிருந்தால் நிச்சயம் முதல் இடத்தைப் பிடித்து இருக்கலாம். இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான திரைப்படங்கள் தயாரிக்கப் படுவது அரிதாக நிகழ்கிற காலக்கட்டத்தில் பல நூறு கோடிகள் செலவு செய்து இந்த நல்ல கதைக்கருவைத் திரைப்படமாக்க முயற்சி செய்தமைக்காக இந்தப் படம் சிறந்த 10 படங்களின் வரிசையில் ஏழாவது இடம் பிடிக்கிறது.

6.ராட்சஷன்

வெளிநாட்டுத் திரைப்படங்கள் மட்டுமே விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து சிறந்த திரில்லர் படங்களைக் கொடுக்க முடியும் என்ற மாயத்தோற்றத்தை ராட்சஷன் உடைத்து நொறுக்கி இருக்கிறது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சைக்கோ திரில்லர் படம் என்பதாக மட்டும் இந்தப் படத்தைத் தீர்மானித்துவிட முடியாது. ஏதும் அறியாப் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத துன்ப நிகழ்வுகளை, நெஞ்சம் பதறவைக்கும் காட்சிகளால் பெற்றோருக்கு விழிப்புணர்வு எற்படுத்தியமைக்காகவும் இந்தச் சிறந்த பத்துப் படங்களுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. இதே போன்று கல்லூரி மாணவிகளைப் பாலியல் கொடுமை செய்து கொல்லும் கொடியவர்களை வித்தியமான முறைகளில் பழிவாங்கும் கதையை அடங்கு மறு திரைப்படம் கொண்டிருக்கிறது. எனினும் எதார்த்தமும் நம்பகத் தன்மையும் மிகுந்திருப்பதால், அடங்குமறுவை மிஞ்சி ராட்சஷன் இந்தப் பத்துப்பட வரிசையில் ஆறாவது இடம் பிடிக்கிறது.

5.சர்க்கார்

முதல் அமைச்சர் பதவியைக் கைப்பற்றுவதற்காக கொலை செய்யவும் துணியும் வாரிசு பற்றிய கதையாக மட்டும் சர்க்கார் திரைப்படத்தை மதிப்பிட முடியவில்லை. அரசியல்வாதிகளின் சுயநலப் பண்புகளை வெளிபடுத்தியது மட்டுமின்றி சுயநலமற்ற சமூகசேவகர்களை அரசியல்வாதிகளாக்க வேண்டும். அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வைக் கொண்டு வர படக்குழு முயற்சி செய்திருக்கிறது. ஒரு விரல் புரட்சியின் முக்கியத்துவத்தைப் பேசத் தொடங்கிய நல்ல முயற்சிக்காகவும் அமைதிப்படைக்கு அடுத்து ஒரு வெளிப்படையான அரசியல் திரைப்படத்தைக் கொடுக்க முயற்சி செய்தமைக்காகவும் சர்கார் திரைப்படத்தை இந்தப் பட்டியலில்  ஐந்தாவது இடத்திற்குக் கொண்டு வரலாம்.

4.செக்கசிவந்த வானம்

ரௌடிகள் அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகத் தந்தையையே கொல்ல முயற்சி செய்து, தம்பிகளை ஒழிக்க நினைக்கும் வில்லத்தனத்தின் மொத்த உருவமாக அரவிந்த்சுவாமி வருகிறார். ஆனால் அண்ணனோ தம்பியோ வெற்றி பெறுவதற்கு எந்தப் பாசமும் பந்தமும் குறுக்கே நின்றுவிட முடியாது, வெற்றிக்காக யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்கிற இந்திய இதிகாசங்கள் சொல்வதை நவீனயுலகத்திற்கு ஏற்ற வகையில் திரைக்கதையாக்கியதில் மணிரத்னம் வெற்றி பெற்றிருக்கிறார். 'எனக்கு இந்த ரௌடிசம் சின்ன வயசிலே இருந்தே பிடிக்காது” என்ற ஒற்றை வாக்கிய வசனத்தை மட்டுமே நம்பி இப்படி ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தைத் தந்தமைக்காக  இந்தப் பத்துப்படப் பட்டியலுக்குள்  செக்க சிவந்த வானத்தை நான்காவது இடத்திற்குக் கொண்டு வரலாம்.

3.மேற்குத் தொடர்ச்சி மலை

உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற உரிமை முழக்கம் எப்போதுமே சொல்லாடல் மட்டுமே. இந்தக் கோட்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வர எந்த அரசியலும் துணைக்கு வராது. எவ்வாறான முயற்சிகள் இருப்பினும் முதலாளித்துவத்தின் அழுத்தப் பிடிக்குள் இருந்து விளிம்பு நிலை மக்கள் வெளியே வர என்ற ஏக்கத்தை, எதார்த்தமல் மீறாமல் சொல்வதற்கு லெனின் பாரதியால் மட்டுமே முடிந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் தமிழ்த் தயாரிப்பாளர்களில் உச்சகதாநாயாகன் தகுதியைத் தானாகப் பெறுகிறார் விஜய்சேதுபதி.  இயற்கையின் அழகியலோடு துல்லியமாகக் கதை சொல்லியமைக்காக இந்தத் திரைப்படம் 2018-ம் ஆண்டின் சிறந்த பத்துப்படப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடிக்கிறது.

2.கனா

விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த ஏழைச் சிறுமியாலும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற முடியும் என்பதை எளிமையான திரைக்கதையின் மூலம் சொல்லியதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் அருண்ராஜா காமராஜும் சிவ கார்த்திகேயனும். 13 வயது சிறுமி தோற்றமாக இருந்தாலும் 18 வயது தோற்றமாக இருந்தாலும் ஐஸ்வராய் ராஜேஷிற்குச் சரியாகப் பொருந்துகிறது. கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த கிரிக்கெட் கதாநாயகியாகிய உயர்வதற்கான இவரின் உழைப்பு தமிழ்த் திரையுலகிற்குப் பெருமையைச் சேர்த்துத் தந்துள்ளது. சத்யராஜிடம் என்ன வேலையைக் கொடுக்க வேண்டும் என்று சரியாகக் கொடுத்திருக்கிறார்கள். மகளின் கனவை நிறைவேற்ற ஆசைப்படும் அப்பாவாக, விவசாயத்திற்குப் போராடும் மெய் மனிதனாக வாழ்ந்திருக்கிறார். திரைப்படத்தில் உள்ள முதுபெரும் நடிகர் இளவரசு மட்டும் அல்லாமல், தர்ஷன் உள்ளிட்ட அனைத்துப் புது முக நடிகர்களும் தங்களின் நடிப்புப் பங்களிப்பைக் குறைவில்லாமல் வழங்கியிருக்கிறார்கள். படம் தொடங்குவது முதல் முடியும் வரை விறுவிறுப்புப் பஞ்சமில்லாமல் குடும்பத் திரைப்படமாக இத்திரைப்படத்தை வழங்கியிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் விடா முயற்சி, ஆண்களின் இழிபேச்சுகளைத் தாண்டி சாதிக்கத் துடிக்கும் கோபம், பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பெற்றோர் போன்ற நல்ல கருத்துக்களைப் பேசியுள்ள கனா இரண்டாவது இடம் பெறுவதில் வியப்பு ஏதுமில்லை.

1.பரியேறும் பெருமாள்

இந்தியா விடுதலை பெற்று 71 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் ஜாதி ஆதிக்கமும் ஜாதி ஆணவமும் முடிவுக்கு வரவில்லை. இந்த ஜாதிச் சிந்தனையால் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படும் உயிர்களின் வலியை உணரக்கூடிய மனநிலையை இந்தியச் சமூகம் இன்னும் பெறவில்லை. பெரியார் பூமி என்று சொல்லப்படும் தமிழ்நாட்டிலும் ஜாதி ஆவணக் கொலைகள் அதிர்ச்சியைத் தருகின்றன. பிராமணர் மற்றும் பிரமாணர் அல்லாதவருக்குமான பிரச்சினையே ஜாதி என்று பெரியாரியவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பிராமணர் அல்லாதவர்களில் உள்ள ஆதிக்க ஜாதியினரின் அடக்குமுறைகளையும் இழிஜாதிப் பற்றையும் துணிச்சலாகப் பேசி இருக்கிறார் மாரி செல்வராஜ். எத்தனை தடைகள் வந்தாலும் பொறுமை காத்து, அறிவு வளர்ச்சியிலும் திறன் மேம்பாட்டிலும் கல்வியிலும் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் ஒடுக்கப்பட்டத் தாழ்த்தப்பட்ட சமூகம் வளர்ச்சியையும் சுயமரியாதையையும் பெற முடியும் என்கிற அண்ணல் அம்பேத்கரின் கருத்தை ஆழமாகச் சொல்வதற்காக இப்படத்தைத் தயாரித்து இருக்கிறார் பா.ரஞ்சித். இவர்களின் நேர்மறையான முயற்சிகளுக்காக 2018ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பரியேறும் பெருமாள் பெறுகிறது.

- சி.சரவணன் 9360534055 senthamizhsaravanan@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com