அமீர்கான், ராஜமெளலி, முகேஷ் அம்பானி மெகா கூட்டணியில் மெகா பட்ஜெட் ‘மகாபாரதம்’!

மகாபாரதக் கதையை மூன்று முதல் ஐந்து பாகங்களாக எடுத்து முடிக்க குறைந்த பட்சம் 10 முதல் 15 வருடங்களாவது தேவைப்படலாம்.
அமீர்கான், ராஜமெளலி, முகேஷ் அம்பானி மெகா கூட்டணியில் மெகா பட்ஜெட் ‘மகாபாரதம்’!

அமீர்கானின் நீண்ட நாள் கனவுத் திரைப்படங்களில் ஒன்றாகக் கூறப்படும் ‘மகாபாரதம்’ வெகு விரைவில் மெய்யாகப் போகிறது.

ஏனென்றால் படத்தை தயாரிக்கவிருப்பதும், இயக்கவிருப்பதும் அவரவர் துறையில் பலே தலைகள். படத்தை தயாரிக்கவிருப்பது ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி என்ற பேச்சு அடிபடத் தொடங்கியதுமே இயக்குனராக பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பெயரும் அடிபடத் தொடங்கி விட்டது. காவியக் கதைகளை, இதிகாச டச்சுடன் பிரமாண்டமாக இயக்குவதில் பெயர் போனவர் ராஜமெளலி. அதற்கு  உதாரணமாக அவரது பாகுபலி 1& 2 திரைப்படங்கள் போதும். வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும் இந்திய சினிமாவை உலக அரங்கில் திரும்பிப் பார்த்து வியந்து நோக்கச் செய்த திரைப்படங்களில் இவை இரண்டுக்கும் பிரதான இடமுண்டு.

ராஜமெளலிக்கும் மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அதை அவர் தனது பல நேர்காணலில் வெளிப்படையாகவே தெரிவித்திருப்பார். ஆனால், இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கால அவகாசம் தான். ராஜமெளலி யோசிப்பது அதற்காக மட்டுமல்ல, மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டுமெனில் மிகப்பெரும் பொருட்செலவு ஆகும். அதற்கான தயாரிப்பாளரைத் தேடுவதும் இதில் இன்னொரு கஷ்டம். ஆனால், இந்த இரண்டாவது கஷ்டத்தை தீர்க்கும் முகமாக முகேஷ் அம்பானி மாதிரியான தயாரிப்பாளர் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கத் தயாரானால் ஒருவேளை ராஜமெளலி தனது கனவுத் திரைப்படத்தை இயக்க முன் வரலாம். 

ராஜமெளலியைப் போலவே அமீர்கானும் மகாபாரதத்தை திரைப்படமாக்குவதில் உள்ள முதல் கஷ்டமாகப் பட்டியலிட்டிருப்பது கால அவகாசத்தைத் தான். மகாபாரதக் கதையை மூன்று முதல் ஐந்து பாகங்களாக எடுத்து முடிக்க குறைந்த பட்சம் 10 முதல் 15 வருடங்களாவது தேவைப்படலாம். அத்தனை பணத்தையும், நேரத்தையும் போட்டு இத்திரைப்படத்தை உருவாக்க அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர், நடிகைகளை வேறு தேர்வு செய்ய வேண்டும். மகாபாரதத்தை திரைப்படமாக்குவதில் இப்படிப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

எல்லாம் சரியாக அமைந்து மகாபாரதம் திரைப்படமானால் அமீர்கான் முன்னதாக ஒரு பேட்டியில் சொன்னபடி ஸ்ரீகிருஷ்ணராக ராஜமெளலியின் இயக்கத்தில் உருவாகும் மகாபாரதத்தில் நடிக்கலாம்.

பாலிவுட்டில் சமீபகாலமாக முகேஷ் அம்பானி தயாரிக்க, ராஜமெளலி இயக்க, அமீர்கான் நடிக்க மகாபாரதம் திரைப்படமாகவிருக்கிறது என்று ஒரு வதந்தி உலவிக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com