தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

எண்பதுகளில் வரும் இந்த அரதப்பழசான கதையை முந்தைய திரைப்படத்தின் வெற்றி மசாலாவில் முக்கி புதிய தின்பண்டமாகத் தர முயன்றிருக்கிறார்...
தனுஷின் ‘மாரி 2’ - திரை விமரிசனம்

ஒரு வெகுஜனத் திரைப்படம் வெற்றியடைந்து புகழ்பெற்று விட்டால் அதையொரு பிராண்ட் ஆக்கி விற்பனைச் சரக்காக்கும் ஹாலிவுட் வழக்கம் தமிழ் சினிமாவிலும் இப்போது பெருகி வருகிறது. முந்தைய சினிமா ஈட்டிய வெற்றியின் கதகதப்பில் குளிர்காய்ந்து வணிகத்தை ஈட்டுவதே இவற்றின் நோக்கம். இந்த வரிசையில் அரிதாகச் சில திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் பல முயற்சிகள் அபத்தமான கனவுகளாக முடிந்து விடுகின்றன. மாரி2 –ம் அப்படியொரு துர்கனவுதான்.

*

எதிரிகளின் கொலைமுயற்சிகளிலிருந்து நூறாவது முறையாக தப்பிக்கும் சாதனையை மாரி (தனுஷ்) கொண்டாடுவதோடு படம் துவங்குகிறது. ‘நான் லூஸூப் பொண்ணு இல்ல.. மாஸூப் பொண்ணு’ என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் ‘அராத்து ஆனந்தி” (சாய் பல்லவி) மாரியை ஒருதலையாகக் காதலித்து வழக்கமான நாயகிகளைப் போலவே அலைகிறார். மாரிக்கும் உள்ளூற விருப்பம் என்றாலும் தமிழ் சினிமாவின் ரெளடிகளுக்கேயுரிய தார்மீகச் சிந்தனை தடுக்கிறது. தலைக்கு மேல் எப்போதும் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் காதல் எதற்கு என்கிற உயர்ந்த நோக்கத்தில் காதலில் விருப்பமில்லாதது போல நடிக்கிறார்.

இன்னொரு பக்கம், மாரியைக் கொல்வதையே தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருக்கும் ‘பீஜா’ என்கிற ஆசாமி (டொவினோ தாமஸ்) அலைந்து கொண்டிருக்கிறார். ‘மரணத்தின் கடவுள்’ என்கிற பயங்கரமான அறிமுகத்துடன் வரும் இவர் படம் முழுவதும் எதுவுமே செய்யாமல் பேசிக்கொண்டே இருப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. தேவராஜ், சூர்யா பாணியில் மாரிக்கு கலை என்கிற (கிருஷ்ணா) நண்பனும் இருக்கிறான்.

தமிழ் சினிமாவின் வழக்கமான பாணியில், தவறான புரி்தல் காரணமாக நண்பர்கள் பிரிகிறார்கள். இந்தச் சதியின் பின்னணியில் இருப்பவன் பிரதான வில்லன். ஒருபுறம் நண்பனின் தவறான கோபம், இன்னொரு புறம் எதிரியின் காத்திருப்பு, மறுபக்கம் அரசு அதிகாரியின் (வரலட்சுமி சரத்குமார்) கண்காணிப்பு ஆகியவற்றுக்கு இடையில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நேரும் சிக்கல்களை மாரி எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதை.

எண்பதுகளில் வரும் இந்த அரதப்பழசான கதையை முந்தைய திரைப்படத்தின் வெற்றி மசாலாவில் முக்கி புதிய தின்பண்டமாகத் தர முயன்றிருக்கிறார் இயக்குநர். சிரிப்பு போலீஸ் மாதிரி ‘சிரிப்பு ரெளடியாக’ இருக்கிறார் தனுஷ். ஆனால் இன்னொரு பக்கம் ஆக்ரோஷமாகச் சண்டையும் போடுகிற விநோதமும் நிகழ்கிறது. ரோபோ ஷங்கர், வினோத் ஆகிய இரண்டு நகைச்சுவையாளர்களை மட்டும் பக்கத்தில் வைத்துக்கொண்டு இவர் எப்படி பெரிய ரெளடியாக இருக்கிறார் என்கிற மர்மம் கடைசி வரை விளங்கவில்லை. படத்தின் பிற்பகுதியில் ரஜினிகாந்த்தின் ‘பாட்ஷா’ திரைப்படத்தின் சாயலும் சற்று ஊடுருவுகிறது (பழைய ‘டான்கள்” எல்லாம் ஏன் ஆட்டோ ஓட்டுநர்களாக மாறுகிறார்கள்?).

ப்ரூஸ் லீ-யின் ‘எண்டர் தி டிராகன்’ கிளைமாக்ஸை நினைவுப்படுத்துவது போல் இறுதிக்காட்சியில் கண்ணாடி பிம்பங்களுக்கிடையில் சிக்ஸ் பேக் உடம்பைக் காட்டி சண்டை போடுகிறார் தனுஷ். (பாவம், ப்ரூஸ் லீ-யின் ஆன்மா அமைதி பெறட்டும்!)

சில அரிதான காட்சிகளில் மட்டும் நன்றாக நடிக்கக்கூடிய ‘தனுஷை’ பார்க்க முடிகிறது. அழுகையுடன் தன் காதலைச் சொல்லும் காட்சியில் சாய்பல்லவி கவர்கிறார். டொவினோ தாமஸின் பாத்திரம் இன்னமும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் முதல் பாகத்தின் சில பிரபலமான தருணங்கள் இதில் மீண்டும் நினைவுப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில வெற்றியும் பெறுகின்றன.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ரெளடி பேபி’ என்கிற பாடல் மட்டும் கவர்கிறது. முந்தைய வடிவத்தில் அனிருத் உருவாக்கிய அதே பின்னணி இசையை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயம். ஒரு வெகுஜனத் திரைப்படத்திற்குரிய உழைப்பை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.

‘காதலில் சொதப்புவது எப்படி?’ என்கிற ரொமாண்டிக் காமெடியில் கவர்ந்த இயக்குநர் பாலாஜி மோகன், மசாலா சினிமாவில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இரண்டாம் பாகத்தில் தடுமாறியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இன்னொரு தேய்வழக்கு மசாலா சினிமா. அவ்வளவே. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com