பிரச்னைக்குரிய பதவி விலகல்!

இந்திய ரிசர்வ் வங்கியின்

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியிருக்கிறார். ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக, பொருளாதாரச் செயலாளராகவும், நிதி ஆணையச் செயலாளராகவும் இருந்த சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். உர்ஜித் படேல் பதவி விலகியதற்கான தனிப்பட்ட காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், மகிழ்ச்சியுடன் அவர் பதவி விலகவில்லை என்பது மட்டும் உறுதி. 

கடந்த சில மாதங்களாகவே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்று வரும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, உர்ஜித் படேலின் பதவி விலகல் வியப்பை ஏற்படுத்தவில்லை. ரிசர்வ் வங்கியின் சுதந்திர செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பொதுவெளியில் பேசப்படும் அளவுக்கு மத்திய நிதி அமைச்சகத்துடன் உர்ஜித் படேலுக்கு சுமுகமான உறவு இருக்கவில்லை என்பது தெளிவு. 

முந்தைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் நீட்டிக்கப்படவில்லை என்பதால், அவர் பதவி விலகி தனது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. ஆனால், ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து மத்திய நிதியமைச்சகத்துடன் அவருக்கு கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன. 

கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசுக்கும் முக்கியமான சில மூத்த அதிகாரிகளுக்கும், துறைகளுக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை. சுதந்திர சிந்தனை உள்ள அதிகாரிகளும், பொருளாதார நிபுணர்களும் இப்போதைய மத்திய அரசுடன் இணக்கமாகப் பணியாற்ற முடியாது என்கிற கருத்து உர்ஜித் படேலின் பதவி விலகலால் மேலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. 

முந்தைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படாதது, நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா பதவி விலகியது, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் விடை பெற்றுக் கொண்டது ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது உர்ஜித் படேலும் விலகியிருப்பது மத்திய அரசின் மீது பொருளாதார, வணிக, நிதித்துறையினர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைக்கிறது என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை. 

உர்ஜித் படேல் பதவி விலகலின் பின்னணியில் சில நிகழ்வுகள் காணப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் மேல்மட்டக் குழு, அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான முக்கியமான கருத்துவேறுபாடுகள் குறித்து சிந்திப்பதற்காகக் கூடுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு உர்ஜித் படேல் பதவி விலகியிருக்கிறார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி இந்தக் குழு கூடி, இருதரப்புக்கும் இடையேயான விஷயங்களை விவாதித்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்தக் கூட்டம் சுமுகமாக முடிந்தது. ஆனால், வெளிப்படையான சமாதானத்துக்குப் பின்னால் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படாமல் இருந்தன என்பதைத்தான் ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொறுப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தெரிவிக்கிறது. 

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான உறவில், சில முக்கியமான பிரச்னைகள் தலைதூக்கி இருக்கின்றன. இதுவரை இல்லாத முறையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சில பிரிவுகளைப் பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் குறித்த பிரச்னையில் விதிமுறைத் தளர்வுகளை ஏற்படுத்த முற்பட்டது. அதன் மூலம் சிறு, குறு தொழில்துறையினருக்கு கூடுதல் கடன் வழங்குவதற்கு வழிகோல முற்பட்டது மத்திய அரசின் வங்கித் துறை. அதிகரித்து வரும் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனை கட்டுப்படுத்தி, செயல்பாட்டை முறைப்படுத்த முற்பட்டிருக்கும் ரிசர்வ் வங்கியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக அமைந்தது மத்திய அரசின் இந்த முடிவு.

இரண்டாவதாக, ரிசர்வ் வங்கியிடம் அளவுக்கு அதிகமாகக் காணப்படும் இருப்பு நிதியை மத்திய அரசு பயன்படுத்திக்கொள்ள விரும்பியது. இதை உர்ஜித் படேலும் ரிசர்வ் வங்கியும் ஏற்றுக்கொள்ளத் தயங்கின. இதுகுறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்த அளவிலான இருப்பு நிதி ரிசர்வ் வங்கியிடம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பல வெளிநாடுகளில் இருப்பதைவிட இந்திய ரிசர்வ் வங்கி அளவுக்கு அதிகமான இருப்பு நிதியை வைத்திருக்கிறது என்றும் அரசு தரப்பு இதற்கு விளக்கம் கூறுகிறது. உர்ஜித் படேல் தலைமையிலான ரிசர்வ் வங்கியோ, அரசின் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. 

இப்போது இந்தியப் பொருளாதாரம் பெரிய பிரச்னைகள் எதையும் எதிர்கொள்ளவில்லை. விலைவாசி ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கிறது. சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் மாத விலையுடன் ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சுமார் ரூ.71-இல் ஸ்திரப்பட்டிருக்கிறது. வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டாலும், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிலைமை சீராகவே இருக்கிறது. அந்நிய முதலீட்டிலும்கூட முன்னேற்றம் காணப்படுகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொறுப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் சில எதிர்வினைத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் 
என்பதுதான் நமது அச்சம்.

தனது மூன்றாண்டுப் பதவிக்காலம் முடிவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னால் பதவி விலகியிருக்கும் உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சில அடிப்படைப் பங்களிப்புகளை செய்திருக்கிறார். விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் முனைப்பு காட்டியதும், வட்டி  விகிதத்தை நிர்ணயிக்க நிதிக்கொள்கைக் குழு ஒன்றை அமைத்ததும், வாராக்கடன் பிரச்னையை எதிர்கொள்வதில் தீவிரம் காட்டியதும், ரிசர்வ் வங்கியின் சுதந்திர செயல்பாட்டை வலியுறுத்தியதும் அவரது மறக்க முடியாத பங்களிப்புகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com