தகர்ந்தது மனத்தடை!

சீனாவின் குவாங்சௌ நகரில் நடந்த உலக டூர் ஃபைனல்ஸ் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறார் இறகுப்பந்தாட்டத் தாரகை பி.வி. சிந்து.

சீனாவின் குவாங்சௌ நகரில் நடந்த உலக டூர் ஃபைனல்ஸ் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றிருக்கிறார் இறகுப்பந்தாட்டத் தாரகை பி.வி. சிந்து. இதன் மூலம் இந்தப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தொடர்ந்து பல சர்வதேசப் போட்டிகளில் சாதனை படைத்து வந்தாலும்கூட, இறுதிச் சுற்றில் மயிரிழையில் கோப்பையை நழுவவிட்டு வந்த பி.வி. சிந்துவின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது 2018 குவாங்சௌ உலக டூர் ஃபைனல்ஸ் போட்டி.
இறுதிச் சுற்றுவரை தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் வெற்றிப் பயணத்தை நடத்தி கடைசி நேரத்தில் சாம்பியன் பட்டத்தை பி.வி. சிந்து நழுவவிடுவது அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்து வந்தது. வேடிக்கை என்னவென்றால், இறுதிச் சுற்றில் பி.வி. சிந்துவை தோற்கடிக்கும் சர்வதேச வீரர்கள் பலரும், பல போட்டிகளில் இறுதிச் சுற்றை அடையாமல் பாதியிலேயே தோல்வியைத் தழுவியவர்கள் என்பதுதான். பி.வி. சிந்துவின் இறகுப்பந்தாட்ட வரலாறு அப்படிப்பட்டதல்ல. அவர் கலந்துகொள்ளும் பெரும்பாலான சர்வதேசப் போட்டிகளில் அவரால் இறுதிச் சுற்றை எந்தவிதப் பின்னடைவும் இல்லாமல் சென்றடைய முடிந்திருக்கிறது. 
2016 ஒலிம்பிக் பந்தயத்தின் இறுதிச் சுற்றை அடைந்தபோது இந்திய மக்களின் இதயத்தில் இடம்பிடித்த இறகுப்பந்தாட்டத் தாரகையாக பி.வி. சிந்து உயர்ந்தார். சர்வதேச இறகுப்பந்தாட்ட வீராங்கனையான பி.வி. சிந்துவின் திறமை குறித்து யாருக்குமே எந்தவித சந்தேகமும் கிடையாது. அதனால் 2016 ஒலிம்பிக் பந்தயத்தில் மட்டுமல்ல, 2017, 2018 உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களிலும் அவர் இறுதிச் சுற்றில் தங்கப் பதக்கத்தை நழுவவிட்டது சர்வதேச அளவில் விவாதப் பொருளானதில் வியப்பில்லை.
இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவருக்குமே வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற கொலைவெறி மனோபாவம் இல்லாமல் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே நிலவிவருகிறது. இந்த மனோபாவத்துக்கு பி.வி. சிந்துவும் விதிவிலக்கல்ல என்று விமர்சகர்கள் அவர் குறித்து எழுதினார்கள். 2016, 2017-இல் பி.வி. சிந்துவை எதிர்கொண்ட அந்த மனத்தடை இப்போது தகர்ந்திருக்கிறது. 
சீனாவின் குவாங்சௌ நகரத்தில் நடைபெற்ற 2018 உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் பி.வி. சிந்து. உலகின் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் தை-சூ-யிங்கை வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், ஜப்பானின் நஜோமி ஒகுராவை நேர் செட்களில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருப்பது அதனினும் சிறப்பு. 
இந்த வெற்றியைத் தொடர்ந்து, தனக்கு இருந்த மனத்தடை குறித்தும், பிரச்னைகள் குறித்தும் பி.வி. சிந்துவே மனந்திறந்து ஒப்புக் கொண்டிருக்கிறார். இறுதிச் சுற்றுவரை வந்து வெற்றி பெறாமல் கோப்பையை நழுவ விடுவதன் பின்னணியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், தனக்கே இருக்கும் ஐயப்பாடும்தான் காரணம் என்று ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்திருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல, இந்திய விளையாட்டு வீரர்கள் பலருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். நமது விளையாட்டு வீரர்களுக்கும் அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, விளையாட்டுக் களத்தில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை பயிற்சியாளர்களுக்கும், ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் உண்டு என்பதைத்தான் அவரது வாக்கு மூலம் உணர்த்துகிறது. 
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளில் பி.வி. சிந்துவும் ஒருவர். புதிய நூற்றாண்டின் விளையாட்டுத் தாரகைகள் என்று பட்டியலிட்டால் அவர்களில் மேரிகோம், சாய்னா நெவால் ஆகியோருடன் 23 வயது பி.வி. சிந்துவும் இடம் பெறுகிறார். இறகுப்பந்தாட்டக் களத்தில் அவருடைய ஸ்ட்ரோக்குகளும், எந்தவிதத் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் தந்திரபூர்வமான விழிப்புணர்வும், சரசரவென்று பூப்பந்தாட்டக் களத்தில் இயங்கும் சுறுசுறுப்பான கால்களும், வலிமையும் திறமையும் கொண்ட எதிரிகளேயானாலும்கூட சற்றும் கலங்காமல் அவர்களது இறகுப்பந்தை எதிர்கொள்ளும் சாதுர்யமும் பி.வி. சிந்துவின் தனித்துவங்கள். 
இன்றைய இந்தியாவின் சர்வதேச விளையாட்டு வீரர்கள் ஏனைய நாடுகளின் வீரர்களைப் போலவே எல்லா சூழலிலும் விளையாடும் திறமையும், எதிர்கொள்ளும் அனுபவமும் கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள். அரசுத் தரப்பு முயற்சிகளும் அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சித் திட்டங்களும் சர்வதேச போட்டி அனுபவங்களும் அவர்களை உலகளாவிய பந்தயங்களுக்குத் தயார்படுத்தியிருக்கின்றன. அதேபோல, இந்திய உணவு முறைகள் குறித்த பிடிவாதங்கள் அகற்றப்பட்டு சர்வதேசப் போட்டிகளுக்கு முற்றிலும் தகுதி பெற்றவர்களாக இன்றைய முன்னணி விளையாட்டு வீரர்கள் மாறியிருக்கிறார்கள். எந்தச் சூழலிலும் பங்கு பெற்று விளையாடும் திறமைசாலிகள் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், எல்லா விளையாட்டுகளிலும் உருவாகியிருப்பது இந்தியாவின் சர்வதேச தங்கப் பதக்கக் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. 
பி.வி. சிந்து கடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை நான்கு பதக்கங்களை சிந்து வென்றிருக்கிறார். இப்போது உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் தங்கப் பதக்கம் வென்று வெற்றியை நிலைநாட்டியிருக்கிறார். இந்த வெற்றியால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உற்சாகம் அவரது மனத்தடையை உடைத்தெறிந்து புதியதொரு சக்தியை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்பலாம். அடுத்த ஒலிம்பிக் பந்தயத்தில் இறகுப்பந்தாட்டத்துக்கான தங்கப் பதக்கம் இந்தியாவுக்குக் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது பி.வி. சிந்துவின் குவாங்சௌ வெற்றி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com