வேளாண் இடர்களும் தற்கொலைகளும்!

நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தாக்கல் செய்திருக்கும் விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிவரத்தின்படி


நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தாக்கல் செய்திருக்கும் விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிவரத்தின்படி 2015-ஆம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை 22 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. 
2015-க்கும், 2016-க்கும் இடையில் விவசாயிகள் தற்கொலையில் 21% சதவீதம் குறைவு ஏற்பட்டிருப்பது மேலெழுந்தவாரியான புள்ளிவிவரம் மட்டுமே. 2015-இல் 8,007 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால், 2016-இல் அதுவே 6,351-ஆகக் குறைந்திருக்கிறது. 2014-இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,650 தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த அளவுக்கு குறையவில்லை என்றாலும் 2015 அளவுக்கு விவசாயிகள் தற்கொலை இல்லை என்று நிர்வாகம் ஆறுதல் அடையலாம், அவ்வளவே. விவசாயிகள் தற்கொலை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டும்கூட கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம்மால் அதற்குத் தீர்வு காண முடியவில்லை என்பது அரசு நிர்வாகத்தில் இது குறித்த சரியான புரிதலும் முனைப்பும் இல்லாமல் இருப்பதைத்தான் காட்டுகிறது. 
விவசாயிகள் தற்கொலை அதிகரிக்காமல் குறைந்திருப்பது கடந்த சில ஆண்டுகளில் இதுதான் முதல் முறை. அதனால், இது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் மகிழ்ச்சி அடைவதில் தவறில்லை. இந்த முறை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சில புதிய வழிமுறைகளைக் கையாண்டு புள்ளிவிவரங்களை திரட்டியிருக்கிறது. அதைப் பொதுவெளியில் மக்களின் பார்வைக்கு இணையத்திலும் துணிந்து பதிவேற்றம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
2014 வரை விவசாயிகள் தற்கொலை என்று பொதுவாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இதில் மாற்றம் ஏற்படுத்தி, நிலம் வைத்திருக்கும் விவசாயிகளையும், நிலத்தில் வேலை பார்க்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் வெவ்வேறாகப் பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி பார்த்தால், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் தற்கொலை 10% சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவருகிறது. 2014-இல் மிக அதிகமான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. 
2014 வரை வேளாண் இடர் குறித்த எல்லா ஆய்வுகளிலும் விவசாயிகள் தற்கொலை என்று பொதுவாக விவசாயம் சார்ந்தவர்களின் தற்கொலையைக் கணக்கில் எடுப்பது வழக்கமாக இருந்து வந்ததால் பிரச்னையின் தீவிரம் தெரியாமல் இருந்தது. நில உடைமையாளர்கள் தற்கொலை செய்து கொள்வதும், நிலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்வதும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டக் காரணங்கள் சார்ந்தவை. 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வைத்திருப்பவர்களையும், குறைந்த அளவு நிலம் வைத்திருப்பவர்களையும் எப்படி ஒன்றுபோல ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பதற்குப் பருவமழை நன்றாக இருந்தது காரணமாக இருக்கக்கூடும். அதே நேரத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் தற்கொலை விகிதம் அதிகரித்ததற்கு காரணம், முதல் ஆறு மாதங்களில் அவர்களுக்கு வேலை இல்லாமல் இருந்தது என்று கருத இடமிருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2015-இல் தற்கொலை செய்துகொண்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டதாலோ, குடும்பப் பிரச்னைகளாலோ தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் அதிகம் என்று குறிப்பிடுகிறது. அதேபோல, போதைப் பழக்கம், மதுப் பழக்கம் ஆகியவை விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வறுமைக்கு முக்கியமான காரணங்களாகக் கூறப்படுகிறது. இதனால் பலரும் வேலைவாய்ப்பு இழந்திருப்பதாகவும், அதன் தொடர் விளைவாக தற்கொலை செய்து கொள்வதாகவும் புள்ளிவிவர ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 
இந்தியாவில் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தற்கொலையைப் பொருத்தவரை தெலங்கானா மட்டும்தான் விதிவிலக்காகக் காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் பெருமளவில் வேளாண் இடர், மாநில அரசால் எதிர்கொள்ளப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தற்கொலையில் இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம்தான் முன்னிலை வகிக்கிறது. விவசாயம் சார்ந்த பணக்கார மாநிலங்களான ஹரியாணாவிலும் பஞ்சாபிலும் விவசாயிகள் தற்கொலைதான் காணப்படுகின்றனவே தவிர, குடியானவர்கள் தற்கொலை எதுவும் பதிவாகவில்லை. 
கேரளம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் தற்கொலை குறிப்பிடும்படியாக அதிகரித்திருக்கிறது. 
கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை இவையெல்லாம் பெரும் நிலச்சுவான்தார்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றனவே தவிர, சாதாரண விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் பெரிய அளவில் பயன் அளிப்பதாகத் தெரியவில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரில் பல லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும்கூட, விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் இது குறித்து அரசு தீவிரமாக சிந்தித்து அவர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் அளிப்பது உடனடி அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com