இடைத்தேர்தல் சொல்லும் செய்தி!

ஒன்பது மாநிலங்களில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில், ஒரேயொரு சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதியில்தான்

ஒன்பது மாநிலங்களில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில், ஒரேயொரு சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதியில்தான் மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற முடிந்திருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் கைரானா தொகுதியில் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எந்த அளவுக்கு அந்தக் கட்சியின் வெற்றியை பாதித்திருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகிறது.
 இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து சட்டப்பேரவை, மக்களவைக்கான பொதுத்தேர்தலைக் கணிக்க முடியாது. உள்ளூர் பிரச்னைகள், வேட்பாளர் தேர்வு, அந்தந்தத் தொகுதி சார்ந்த பொருளாதாதாரச் சூழல், கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை உள்ளிட்ட பல காரணிகள் இடைத்தேர்தல் வெற்றி - தோல்விகளைத் தீர்மானிக்கின்றன. அதே நேரத்தில், பாஜகவைப் பொருத்தவரை, அது அசைக்க முடியாத அரசியல் சக்தி என்கிற நிலையிலிருந்து, தனது ஆதரவாளர்களையும், வாக்கு வங்கியையும் தக்கவைத்துக் கொள்ள கடுமையாகப் போராடியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைத்தான் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
 கடந்த 2014 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு நடந்த மக்களவைக்கான 27 இடைத்தேர்தல்களில், பாஜகவால் வெறும் ஐந்தே ஐந்து தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இந்த முறையும் நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் மகாராஷ்டிரத்தில் பால்கர் தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறது. நாகாலாந்தில் அதன் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்களில், 10 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றிபெற முடிந்திருக்கிறது.
 உத்தரப் பிரதேசத்தில், ஏற்கெனவே முதல்வர் ஆதித்யநாத் 2014-இல் வெற்றி பெற்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதிக்கும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெüரியா வெற்றி பெற்ற பூல்பூர் மக்களவைத் தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தல்களில், அந்த இரண்டு தொகுதிகளையுமே பாஜக இழக்க நேர்ந்தது. இப்போது அந்த வரிசையில் கைரானா மக்களவைத் தொகுதியும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
 இதற்கு முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசின் மீதான அதிருப்தி மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோகதளம் என எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்தன என்பதைவிட, பாஜக எதிர்பாராத விதத்தில் ஜாட்களும் முஸ்லிம்களும் இணைந்ததுதான் பாஜகவின் கைரானா தோல்விக்கு முக்கிய காரணம். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய பணத்தை வழங்காததும் கூட பாஜகவின் மீதான அதிருப்திக்குக் காரணம்.
 உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, மகாராஷ்டிரத்தில் பந்தாரா - கோந்தியா மக்களவைத் தொகுதியிலும், பிரிந்திருந்த காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதன் விளைவாக, பாஜக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. பால்கர் மக்களவைத் தொகுதியில் தனது கூட்டணிக் கட்சியான சிவசேனையை பாஜக தோற்கடித்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே, ஆளும் கட்சிகளுக்குச் சாதகமாக பஞ்சாபிலும், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும், உத்தரகண்டிலும் அமைந்திருக்கின்றன. பிகாரில் லாலு பிரசாத் யாதவ் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவரது செல்வாக்கு சரியவில்லை என்பதை நிரூபிக்கிறது ஜோகிஹாட் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவு.
 இடைத்தேர்தல் முடிவுகளில் அனைத்து அரசியல் நோக்கர்களின் கவனமும் உத்தரப் பிரதேசத்தின் மீது குவிந்திருப்பதற்குக் காரணம் இருக்கிறது. மக்களவைக்கு 80 உறுப்பினர்களை அனுப்பும் உத்தரப் பிரதேசம்தான் மத்தியில் ஆட்சி அமைவதற்கு முக்கியக் காரணியாக இருந்து வந்திருக்கிறது. கடந்த 2014-இல் 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை பாஜக அணி கைப்பற்றியது. கோரக்பூர், பூல்பூர், கைரானாவில் எதிர்க்கட்சிகள் கடைப்பிடித்த கூட்டணி உத்தியை மேற்கொண்டால் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் பாதியில்கூட வெற்றி பெற முடியாது என்பது தெளிவு.
 இடைத்தேர்தலில் கூட்டணி அமைப்பது என்பது வேறு, பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது முற்றிலும் மாறுபட்டது. யாருக்கு எத்தனை இடங்கள், என்னென்ன தொகுதிகள் உள்ளிட்ட பிரச்னைகளில் சமாஜவாதி கட்சியும்,
 பகுஜன் சமாஜ் கட்சியும் எந்த அளவுக்கு ஒருங்கிணைய முடியும் என்பது கேள்விக்குறி. ஜாட் வாக்கு வங்கியை உடைய ராஷ்ட்ரீய லோக தளமும், காங்கிரஸும் எந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் பெறும் என்பதும் பிரச்னையாகக்கூடும்.
 1977-இல் ஜனதா ஆட்சி, 1989-இல் தேசிய முன்னணி ஆட்சி, 1996-இல் ஐக்கிய முன்னணி ஆட்சி என்று கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியைப் பார்த்து வெறுப்படைந்திருக்கும் மக்கள், 2019-இல் மீண்டும் கூட்டணிக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில்தான் பாஜக தேர்தலை சந்திக்கும். காங்கிரஸின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பது மட்டும்தான் பாஜகவுக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல்!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com