அணுகுமுறை தவறு!

கடந்த 2016 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்கிற பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உலகிலேயே இல்லாத அளவிலான

கடந்த 2016 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்கிற பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் உலகிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய விவசாயக் காப்பீட்டுத் திட்டம். பயிரிடுவதற்கு முந்தைய நிலையிலிருந்து, அறுவடைக்குப் பிறகு விளைபொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வது வரையிலான எல்லா இடர்ப்பாடுகளுக்கும் (ரிஸ்க்) பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வேளாண் இடரை அகற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் விவசாயிகளுக்குப் பயனளிப்பதைவிட, காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுவதற்கு உதவுவதாக அமைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
விவசாயிகளிடமிருந்து குறைவான தொகை காப்பீட்டுக் கட்டணமாகப் பெறப்படுகிறது. மீதமுள்ள தொகையை மத்திய-மாநில அரசுகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. 2016-17 நிதியாண்டில் ரூ.22,362 கோடியும், 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.24,454 கோடியும் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும் கட்டணமாக வசூலித்திருக்கின்றன. ஆனால், அவர்கள் வழங்கியிருக்கும் இழப்பீட்டுத் தொகையோ மிக மிகக் குறைவு. 
2016-17-இல் ரூ.22,362 கோடி காப்பீட்டுத் தொகையாக வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியிருக்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.15, 902 கோடி மட்டுமே. கடந்த ஆண்டுக்கான காரீஃப் சாகுபடி பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையான ரூ.13, 655 கோடியில் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.1,759 கோடியை மட்டுமே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதுவும் கூட முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. 2016-17 சாகுபடி பருவத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதற்கும் வழங்கியதற்கும் இடையேயான வித்தியாசம் ரூ.1,474 கோடி. ஒப்புக்கொண்ட தொகையைக் கூட காப்பீட்டு நிறுவனங்கள் தர முன்வராத நிலையில், விவசாயிகள் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறுவதில் வியப்பொன்றுமில்லை.
வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, 2016-17-இல் 5.72 கோடியாக இருந்த காப்பீடு கோரிய விவசாயிகளின் எண்ணிக்கை, 2017-18-இல் 4.87 கோடியாகக் குறைந்திருக்கிறது. 85 லட்சம் விவசாயிகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தை நிராகரித்திருக்கிறார்கள் என்று சொன்னால், இந்தத் திட்டத்தில் ஏதோ குறையிருக்கிறது என்பது வெளிப்படை.
2016-17 நிதியாண்டில் காப்பீட்டு நிறுவனங்கள் வசூலித்த மொத்த காப்பீட்டுத் தொகை ரூ.22, 362 கோடி என்றால், அவை 3.01 கோடி விவசாயிகளின் கோரலுக்கு வழங்கிய இழப்பீடு ரூ.15,902 கோடி. 2017-18-ஆம் நிதியாண்டில், காப்பீட்டுத் தொகைக்கும் இழப்பீட்டுத் தொகைக்கும் இடையேயான இடைவெளி ரூ.9,335 கோடியாக உயர்ந்து காப்பீட்டு நிறுவனங்களுக்கு லாபம் மேலும் அதிகரித்தது. இதற்கு விவசாயிகளின் கோரல் 3.01 கோடியிலிருந்து 1.26 கோடியாகக் குறைந்தது ஒரு முக்கியமான காரணம். கோரல் குறைந்ததற்குக் காரணம், விவசாயிகளின் நியாயமான இழப்பீட்டு உரிமைகளை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான். 
காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீடு பல நிகழ்வுகளில் மூன்று இலக்கத் தொகைக்கும் குறைவாகவே இருக்கின்றன. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் காப்பீட்டு நிறுனங்களால் மறுக்கப்படுகின்றன. அதிகம் படிப்பறிவில்லா விவசாயிகள் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் சொற்ப தொகைகளை ஏற்றுக்கொண்டு கடனாளியாகின்றனர். விவரம் தெரிந்த விவசாயிகள் காப்பீட்டினால் பயனில்லை என்பதை உணர்ந்து இழப்பீடு கோராமல் இருந்து விடுகின்றனர். மேலும் சிலர் காப்பீட்டுத் திட்டத்திலிருந்தே விலகி விடுகின்றனர். 
இதுபோன்ற பெரிய அளவிலான பொதுக்காப்பீட்டுத் திட்டங்களில் காப்பீட்டுக் கட்டணத்தை அரசு நிர்ணயிப்பதுதான் வழக்கம். காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி மூலம் கட்டணம் கோரும் முறை உலகில் வேறு எங்கும் கிடையாது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொண்டதால்தான், இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டது. அதனால், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டமுடிகிறது என்பது மட்டுமல்லாமல், அவை முறையாக இழப்பீடு வழங்குகிறதா என்பதை அரசால் கண்காணிக்கவோ, தட்டிக்கேட்கவோ முடியவில்லை. 
காப்பீடு என்பது பேரிடர் வணிகம் என்பதில் சந்தேகமில்லை. இழப்பீட்டுக்கான கோரல்கள் இல்லாமல் இருக்கும் ஆண்டுகளில் காப்பீட்டு நிறுவனங்கள் பெறும் லாபம் ஈட்டுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், நியாயமான கோரல்கள் கூட ஏற்றுக்கொள்ளப் படாமல், இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்படாமல் காப்பீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைவதை ஏற்றுக்கொள்வது எங்ஙனம்? இதுகுறித்து முறையான விசாரணை நடத்துவதும் காப்பீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளையும், முடிவுகளையும் தணிக்கைக்கு உட்படுத்துவதும் அவசியம். 
மக்கள் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை வஞ்சித்து பெரும் லாபம் ஈட்டுவதைத் தடுத்தாக வேண்டும். அரசே காப்பீட்டுக் கட்டணத்தை நிர்ணயித்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதும், நடைமுறைப்படுத்துவதும்தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அப்படிச் செய்தால்தான், விவசாயிகளும் பயன் பெறுவர், அரசுக்கும் வேளாண் பெருமக்களின் ஆதரவு கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com