தலைமுறை மாற்றத்தின் அறிகுறி!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பாரதிய ஜனதா கட்சி முன்மாதிரியான அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பாரதிய ஜனதா கட்சி முன்மாதிரியான அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறது. 80 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர்த்திருக்கும் பாஜகவின் முடிவு வரவேற்புக்குரியது. உலகிலுள்ள ஏனைய நாடுகளிலெல்லாம் இளைய தலைமுறையினர் ஆட்சி அதிகாரத்தில் செயல்படும்போது, இந்தியாவில் மட்டும்தான் இன்னும் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் நிலைமை தொடர்கிறது. 
இன்றைய பாஜக தலைமையின் முடிவு அந்தக்  கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியையும், பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறது என்றாலும்கூட, காலமாற்றத்தை இன்றைய பாஜக தலைமை உணர்ந்து செயல்பட முற்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பாஜகவின் அணுகுமுறையைக் கையாண்டிருக்க வேண்டும். மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அங்கலாய்ப்பதை விட்டுவிட்டு, அடுத்தகட்ட மாற்றத்துக்கு அரசியல் கட்சிகள் தயாராக வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம்.
கடந்த 16-ஆவது மக்களவைதான் இதுவரை இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைகளிலேயே உறுப்பினர்களின் சராசரி வயது மிக அதிகமாகக் காணப்பட்ட அவை. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 30 வயதுக்குட்பட்ட வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தனர். இத்தனைக்கும் இந்தியாவின் மக்கள்தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்குட்பட்டவர்கள். 
16-ஆவது மக்களவையின் 543 உறுப்பினர்களில் 204 பேர் 30 முதல் 55 வரையிலான வயதுப் பிரிவினர்; 212 பேர் 56 முதல் 70 வரையிலான வயதினர்; உறுப்பினர்களில் 41 பேர் 70 வயதுக்கும் அதிகமானவர்கள்; 30 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவினர் பாதிக்கும் மேல் இருக்கும் தேசத்தில், அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மக்களவை இருக்க வேண்டியது மிக மிக அவசியம். 
கடந்த பொதுத் தேர்தலில் 2.3 கோடி புதிய இளைய தலைமுறை வாக்காளர்கள் இணைந்தனர். மொத்த வாக்காளர்களில் அவர்கள் 3%. இந்த முறை 18-19 வயதுப் பிரிவு முதல் முறை வாக்காளர்
களின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது. மொத்த வாக்காளர்களில் 1.7% காணப்படும் இந்தப் புதிய வாக்காளர்கள் 1.5 கோடி பேர், 17-ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் களமிறங்க இருக்கிறார்கள். 
வளர்ச்சியடைந்த மேலை நாடுகளின் ஜனநாயகங்களுடன் ஒப்பிடும்போது இந்திய இளைஞர்களுக்குத் தேர்தல்களின் மீதான நாட்டமும், ஈர்ப்பும் அதிகம் என்றுதான் கூற வேண்டும். மேலை நாடுகளில் வாக்களிப்பில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொள்வதில்லை என்றாலும், வேட்பாளர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாக இருக்கிறார்கள். 
கடந்த 2014 தேர்தலின்போது, 18 முதல் 25 வயதுப் பிரிவினரில் 68% வாக்களித்தனர். 2009 மக்களவைத் தேர்தலைவிட 2014-இல் இளைஞர்களின் வாக்களிப்பு விகிதம் 14% அதிகரித்தது. அதுமட்டுமல்ல, மொத்த வாக்காளர்களின் விகிதத்தைவிட இளைய தலைமுறை வாக்காளர்களின் வாக்களிப்பு விகிதம் கடந்த தேர்தலில் 2% அதிகமாகவே காணப்பட்டது. 25 வயதானால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தகுதி இளைஞர்களுக்கு கிடைத்து விடுகிறது எனும்போது, அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் வேட்பாளர்கள் பட்டியலில் அவர்களுக்குக் கூடுதலான இடங்களை ஒதுக்க வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கு உண்டு. 
ஐந்தாண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி தேர்தல் களத்தில் இறங்கியபோது அவரது வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது முதல் முறை வாக்காளர்களின் ஆதரவு. இந்த முறை 1997-க்கும் 2001-க்கும் இடையே பிறந்த முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 8.4 கோடியாக இருக்கப் போகிறது. இந்த வாக்காளர்களை குறிவைத்துத்தான் அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களது தேர்தல் வியூகங்களை வகுக்க முற்பட்டிருக்கின்றன. 
கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்த இந்த இளைய தலைமுறை வாக்காளர்களைக் குறிவைத்து, பல அறிவிப்புகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. இளைய தலைமுறை வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் நரேந்திர மோடி அரசு தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்பதற்குத்தான் தனது பிரசாரத்தில்  காங்கிரஸ் கட்சி  முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கடந்த 2014 தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள், 30 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினர் ஆகியோருக்கு அனைவருடனும் அனைவருக்காகவும் வளர்ச்சி என்கிற கவர்ச்சிக் கனவை விதைத்த பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் ஏனைய எதிர்க்கட்சிகளும் முன்னிறுத்தும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரசாரங்களை எதிர்கொள்ளக் கையாண்டிருக்கும் உத்திதான், 80 வயதைக்  கடந்த தலைவர்களுக்கு விடை கொடுத்து இளைஞர்கள் பலரை வேட்பாளர்களாக அறிவித்திருப்பது. அரசியல் காரணங்களுக்காக மக்களவைத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு பாஜக வாய்ப்பளித்திருக்கிறது என்றாலும்கூட, அந்த முடிவு தலைமுறை மாற்றத்திற்கும் அரசியல் மாற்றத்திற்கும்கூட வழிகோலும் என்பதால் அதை வரவேற்க வேண்டும். 
தேசப்பற்றும், சேவை உணர்வும் உள்ள படித்த இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். தலைமுறை மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com