புதையல் 32

தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வது எப்படி என அறிவொளி
புதையல் 32

உலகம் உய்ய  ஒரே வழி...!

(தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வது எப்படி என அறிவொளி விளக்குவதை ஆர்வமுடன் கவனித்து உள்வாங்கிக் கொண்டிருந்தனர் சந்தோஷ், கார்த்திக், விஷ்ணு ஆகிய மூவரும்.)

சந்தோஷ் :  சார், நிறைய பேர்  வயசானப் பிறகும்கூட இந்த உலகத்தைப் புரிஞ்சுக்கவே முடியலைன்னு புலம்புறாங்களே! சரியானபடி உலகத்தைப் புரிஞ்சுக்குறதுன்னா என்ன?

அறிவொளி : தன்னைப் பற்றி முழுமையா புரிஞ்சுக்கிட்டவங்களால தான் இந்த உலகத்தைப் பத்தியும் புரிஞ்சுக்க முடியும். அதைத்தான் சுய விழிப்புணர்வுன்னு சொல்வோம். மனிதன் இந்தத் திறனை வளர்த்துக் கொண்டதன் பலன் தான் அறிவு, மனம், ஆன்மிக வளர்ச்சி தொடர்பானத் தத்துவங்கள் எல்லாம். மனிதரில் சுயவிழிப்புணர்வுடன் வாழ்ந்து மறைந்த யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?

சந்தோஷ் :  புத்தரைத் தானே சார் அப்படி சொல்வாங்க?

அறிவொளி :  சரியா சொல்லிடீங்க சந்தோஷ்! புத்தர்கிட்ட  ஒருத்தர், 'அய்யா! நீங்க யாரு? நீங்க தான் கடவுளா ?' அப்படின்னு கேட்டார். அதுக்கு புத்தர் என்ன சொல்லியிருப்பாருன்னு சொல்லுங்க பாக்கலாம்?

சந்தோஷ் :  இன்னைக்கு இருக்குற சாமியார்களா இருந்தா  

ஆமா நான்தான் கடவுள்ன்னு, எல்லாரையும் தன் கால்ல  விழ வெச்சு அதுக்கு தனியா பணம்  வாங்கிட்டிருப்பாங்க.  புத்தர் என்ன சொல்லியிருப்பார்னு தெரியலையே சார்!

அறிவொளி : (சிரித்தவாறே)  புத்தர் நான் கடவுள் இல்லைனு தான் சொன்னார். கேட்டவர் நீங்க கடவுள் இல்லைனா அப்ப வேற யாரு? தீர்க்கதரிசியா, புனிதரா தயவு செய்து சொல்லுங்கன்னு சொன்னாராம். அதுக்கு புத்தர் நான் சுய விழிப்புணர்வு பெற்ற மனிதன், அப்படின்னு சொன்னாராம். அதனால் தான் அவரால் இந்த உலகத்தைப் புரிந்து கொண்டு அதன் மாயைகளிலிருந்து விடுபட என்ன வழி என்பதை உணர்ந்து, மக்களுக்கு வழிகாட்ட முடிந்தது. இது எல்லோருக்கும் எளிதல்ல.

சந்தோஷ் : உண்மைதான் சார், மூளையின் செயல்பாடுகளையும் அதன் திறன்களையும்  புரிந்து கொள்வது எவ்வளவு சிக்கலான காரியமோ  அதைவிட சிக்கலானது மனத்தைப்பற்றி புரிந்து கொள்வது.

அறிவொளி : ஆமாம் சந்தோஷ் மனத்தை நீரில் மிதக்கும் பனிக்கட்டிக்கு ஒப்பிடுறாங்க. ஏன்னா பனிக்கட்டியோட பெரும்பகுதி தண்ணீருக்குள் மூழ்கியே இருக்கும். ஒரு சிறு பகுதிதான் வெளியே பார்ப்பவருக்குத் தெரியும். அது போலவேதான் மனமும் நாம் விழித்திருக்கும் போது நம் நினைவு மனம் (conscious mind ) செயல்படுது இதைத் தவிர நினைவு நிலை தாண்டிய மனம் (sub conscious mind ) அப்படின்னு ஒன்னு இருக்கு . இதில் நாம மறக்க நினைக்கும் எண்ணங்கள் கூட மறைந்திருக்கும். நாம செய்ய விரும்பாத பல காரியங்களைச் செய்யத் தூண்டும் சக்தியும் இந்த மனதிற்கு உண்டு. தீய நினைவுகளையோ, கசப்பான அனுபவங்களையோ நாம மறக்க நினைக்கும்போது அது நினைவு தாண்டிய மனதில் போய் ஒளிந்து கொண்டு அதற்கு  ஏற்ற சரியான சந்தர்ப்பம் அமையும் போது வெளியே வந்து தொல்லை  கொடுக்கும்.

சந்தோஷ் : ஓ! அதனாலதான் சில நேரம் உணர்ச்சிவசப்பட்டு ஏன்  இப்படி மோசமா நடந்துக்கிட்டேன்னு தெரியலைன்னு வருத்தப்படுவோம் இல்லையா சார் .

அறிவொளி :  ஆமா , அப்படி யோசிக்கும் போது வெளிப்படையா காரணம் தோணலைன்னாலும் இது எப்போதோ மனதில் ஏற்பட்ட வடுவின் விளைவுதான் என்பதை நாம உணர்ந்து விழிப்புணர்வோட இருந்தா, திரும்பவும் அது மாதிரியோ, அதைவிடப் பெரிய தவறுகளோ ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கலாம் சின்ன வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மனத்தை விகாரப்படுத்த அனுமதிக்காமல் மனத்தை வலுப்படுத்த உதவும் ஆயுதமாக்கலாம். சூழ்நிலை நம்மை உருவாக்குவது என்பது உண்மைதான் ஆனா அதைவிட மேம்பட்ட நிலை நமக்குத் தகுந்த சூழ்நிலையை நாமே   உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதுதான் நம் நினைவு கடந்த மனதில் பதிய வைக்கப்படும் நேர்மறையான எண்ணங்களுக்கு அவ்வளவு வலிமை உண்டு.

கார்த்திக் :  அப்ப ஒருத்தரோட சின்ன வயசுல ஏற்படக் கூடிய அனுபவங்கள் நல்லதா, கெட்டதா என்பதைப் பொறுத்து அவங்களோட நடத்தையும் மாறும் இல்லையா சார்?

அறிவொளி :  ஆமா கார்த்திக், ஒரு குழந்தை முழுமையான ஆளுமைத் திறனுடன் வளர்வதில் பெற்றோரின் பங்கு ரொம்ப முக்கியம். அதிகப்படியான செல்லமோ, கண்டிப்போ குழந்தையோட மனவளர்ச்சியை பாதிக்கும். அதிக தண்டனையை அனுபவிக்கும் குழந்தை கண்டிக்கும் பெற்றோரை வெறுக்கும். பிடிவாதமும், முரட்டுத்தனமும் கொண்டதா இருக்கும். எப்போதோ அனுபவிச்ச தண்டனைக்கு  வேறு யாரையோ பழி வாங்குவாங்க. ஹிட்லர் சின்ன வயசில் அவங்க அப்பாவிடம் அனுபவிச்ச சித்ரவதைகள் தான் அவர் சர்வாதிகாரியா, ஒரு கொடுங்கோலனா இருந்ததுக்குக் காரணம்னு உளவியலாளர்கள் சொல்றாங்க. அதுமட்டுமில்ல குழந்தைங்க கை சப்புவது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது , தூக்கத்தில் உளறுவது, பல் கடிப்பது இதெல்லாம் கூட மன அழுத்தம், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால்தான்.

விஷ்ணு :  அம்மா, அப்பா பசங்களுக்கு செல்லமும் கொடுக்கக் கூடாது, கண்டிக்கவும் கூடாதுன்னா, வேற என்னதான் செய்யணும்?

அறிவொளி :  சின்னப் பசங்க தப்பு பண்றது சகஜம். அதுக்கு தண்டனை ஒரு பரிகாரம் கிடையாது. அப்படியே கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், ' ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்தே?', என்று அவன் செய்த செயலைக் கண்டித்தால் அடுத்த முறை அதே செயலை செய்யும் போது கவனமா செய்வான்.. ஆனா ஏன்டா இப்படி முட்டாள் மாதிரி நடந்துக்குறேன்னு அவனைத் திட்டினா,  தான் ஒரு முட்டாள் என்ற தாழ்வு மனப்பான்மைதான் வரும். அப்பா எதுக்காக இந்த தண்டனையை எனக்குக் கொடுத்தாருன்னு குழந்தை புரிஞ்சுக்கிட்டுத் திரும்ப அதே தவறை செய்யாம இருக்கும்படியா எடுத்து சொல்ல வேண்டியது ரொம்ப அவசியம். பெற்றோர்களின் அன்பால் வழி நடத்தப்படாத குழந்தைகள் மனதளவில் குறைபாடு  உடையவர்களாகவே வளர்வாங்க. அப்படி என் குறைபாடுகளுக்கு என் அப்பா அல்லது அம்மாதான் காரணம்னு நான் நினைச்சா, இதே குறைபாடு என் பிள்ளைக்கு ஏற்படாம பாதுகாக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.

சந்தோஷ் : எவ்வளவுதான் நான் அன்பா சொன்னாலும் இல்லை கண்டிச்சாலும் சில விஷயங்களை என் குழந்தையிடம் மாற்றவே முடியலைன்னு பெற்றோர்கள் ஒரு பட்டியலே வைச்சிருப்பாங்க . அதெல்லாம் எப்படி சரி செய்யறது சார் ?

அறிவொளி : உண்மைதான், கை விரல் சப்புவது, படுக்கையிலேயே பாத்ரூம் போறது, கையெழுத்து சரியில்லை, தவறான பழக்கங்கள் உள்ள நண்பர்களோட சேருவது, பெரியவங்களை மதிக்காம எதிர்த்து பேசுவது இப்படி மாற்ற வேண்டிய விஷயம் எதுவாக இருந்தாலும் முழிச்சிட்டு இருக்கும் போது அறிவுரை சொல்லித் திருத்த முடியாத பிள்ளையை  தூங்க வைத்து திருத்த முடியும்.

சந்தோஷ் : அது எப்படி சார் ?

அறிவொளி : சொல்றேன், ஆனா அதை முதலில் நீங்க நம்பனும் . எப்படியெல்லாமோ முயற்சி செய்துட்டேன், அதிலெல்லாம் திருந்தாதவன் இதுல எங்கத்  திருந்தப் போறான்னு நினைச்சா இது பலிக்காது. உதாரணமா உங்க மகன் பத்து வயது அஸ்வின், படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டி. ஆனால் வீட்டிலும் வெளியிலும் பெரியவர்களிடம் மரியாதையில்லாமல் பேசுகிறான், ' எல்லாம் எனக்குத் தெரியும், எனக்கு நீங்க எதுவும் சொல்லத் தேவையில்லை என்ற ரீதியில் நடந்து கொள்வது உங்களுக்கு ரொம்ப கவலையா இருக்குது. இதனால் குடும்பத்தில் பெரும் பிரச்சனையே நடக்குதுன்னா  கவலையை விடுங்க. இன்னும் ஒரு வாரத்திற்குள் உங்கள் பிரச்னை தீர்ந்து விடும்.

சந்தோஷ் : எப்படி சார்?

அறிவொளி :   உங்கள் மகன் தூங்க ஆரம்பித்து ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து அவனுக்குப் பக்கத்தில் இதமா அணைத்தபடி படுத்துக்கொண்டு அன்பான குரலில், 'அஸ்வின் நீ ரொம்ப நல்ல பையன், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அஸ்வின் செல்லப் பிள்ளை . நீ எங்களுக்கு கடவுள் தந்த பரிசு. எப்பவும் உனக்குத் துணையா நாங்க இருக்கோம். நீ நல்லா படிக்கிற, நல்லா விளையாடுற (என்னென்ன நல்ல குணங்கள் இருக்கிறதோ அவ்வளவும் சொல்லுங்கள்) ஆனா ஒரே ஒரு விஷயம் தான் உன்னிடம் எங்களுக்கு பிடிக்கவில்லை. பெரியவங்களை மரியாதை இல்லாம பேசிடறே. பெரியவர்களிடம் பணிவுடன் பேசி அவர்களது ஆசீர்வாதத்தைப் பெறுவது நல்லது. உன்னிடம் இவ்வளவு நல்ல குணங்கள் இருந்தும் உன்னைப் பற்றி மற்றவர்கள் தவறாக நினைப்பதற்கு இது ஒரு காரணமாகிவிடும்.

அஸ்வின் என் செல்லம்தானே! அப்பா  சொல்றதைக்  கேட்டு இப்பலேர்ந்து பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கப் போறான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு என நேர்மறையாக பேசுங்க. தூங்கும் போது நினைவு மனம் ஓய்வாகவும், நினைவு தாண்டிய மனம் செயல்பட்டுக் கொண்டும் இருக்கும். மனம் ஆல்பா நிலையிலிருந்து தீட்டா நிலைக்கு மாறியிருக்கும் இந்நேரத்தில் நீங்கள் சொல்லும் எந்த விஷயமும் மனதின் அடித்தளத்தில் பதிவாகி செயலாக்கம் பெறும். ஓரிரு தினங்களில் உங்கள் மகனின் நடவடிக்கையில் நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம். அப்போது அவனது மாற்றத்தையும் அதன் பலன்களையும் சுட்டிக்காட்டி உற்சாகப்படுத்த மறக்காதீங்க.

உங்கள் பிள்ளை எந்த வயதைச் சார்ந்தவராக இருந்தாலும் நடத்தை மாற்றம் பெற்று தன் ஆற்றலை முழுவதும் உணர்ந்து சுயவிழிப்புணர்வு பெற இந்தப் பயிற்சி  உதவும். ஒவ்வொரு தனிமனிதனும் சரியான முறையில் வளர்க்கப்படும் போது வீடும், நாடும், உலகமும் வளமடையும். மறுபடியும் ஞாபகப்படுத்துறேன், இந்தப் பயிற்சியால்  பலன் இருக்குமா என்ற கேள்வி உங்கள் மனத்தில் இருந்தால் நேர்மறை எண்ணங்களால் உங்கள் மனதை முதலில் பக்குவப்படுத்திக் கொண்டு அதுக்கப்புறம்  இப்பயிற்சியைத் தொடங்குங்கள். ஏனெனில் பெற்றோரின் எதிர்மறை எண்ணங்கள் குழந்தையை அதிகம் தாக்கும்.

சந்தோஷ் : நிறைய பேருக்கு ரொம்ப அவசியமான பயனுள்ளப் பயிற்சி இது. கண்டிப்பா நீங்க சொல்றபடியே செய்யறோம் சார்.

அறிவொளி :  தனது நிறைகுறைகளையும், இவ்வுலகில் தனது கடமைகளையும் பற்றி ஒரு மனிதன் சிந்திக்கத் தொடங்கும் போது இறைவனின் மிகப் பெரிய திட்டத்தில் தான் ஒரு சிறு  கருவி என்பது புலப்படும். இந்த ஞானம் வரும் போது மனிதன் சுயநலத்தை விட்டு, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு பொதுநலவாதியாகிறான். நம்மை நாம் புரிந்து கொள்ளும் போது மற்றவர்களைப் புரிந்து கொள்வதும் எளிதாகிறது. அப்போது மற்றவர்களும் நம்மைப் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். உனக்குள்ளும் எனக்குள்ளும் இருப்பது ஒரே இறைவனின் உயிர் மூச்சுதான் என்பதை யாவரும் உணர்ந்தால் பிரிவினை பேதங்களுக்கு இடமே இல்லை. உலகம் உய்ய ஒரே வழி தன்னைத்தான் அறிதலே!

தொடரும்....

பிரியசகி 

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com