வேண்டவே வேண்டாம்! இனி ஒருபோதும் சொல்லாதீர்கள் அந்த வார்த்தையை!

சமீப காலத்தில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று சொல்வது ஒரு ஃபாஷன்  வார்த்தையாக மாறிவிட்டது.
வேண்டவே வேண்டாம்! இனி ஒருபோதும் சொல்லாதீர்கள் அந்த வார்த்தையை!

அப்படி என்ன வார்த்தை அது?

சமீப காலத்தில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று சொல்வது ஒரு ஃபாஷன்  வார்த்தையாக மாறிவிட்டது. அதுவும், ஒரு வயது வரம்பு இல்லாமல், இப்பொழுது எல்லா வயதினரும் தங்கள் நிலையை வர்ணிப்பதே ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தையால்தான். ஸ்ட்ரெஸ் என்பது மன அழுத்தம், இதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

ஸ்ட்ரெஸ் நன்மையும் அளித்து, ஊக்கப் படுத்தவும் செய்கிறது. ஒரு வேலையை குறிப்பிட்ட கால வரையறைக்கும் செய்து முடித்தாக வேண்டும் எனும் போது நம்மில் பலருக்கு மன அழுத்தம் உருவாகிறது. எதிர்பார்த்த ஒன்று நடக்காத போது ஏமாற்றம் விளைகிறது. அதுவும் கூட ஸ்ட்ரெஸ்ஸுக்குக் காரணம். ஸ்ட்ரெஸ் ஏற்பட ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. மென்மையான மனது உடையவர்களுக்கு வசைச் சொற்கள் கூட ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும். சிலருக்கு இந்த சமூகத்தைப் பார்த்தும், சுற்றியிருக்கும் விஷயங்களை அவதானிக்கும் போதும் கடுமையான மன பாதிப்புக்கள் ஏற்படலாம். அல்லது வாழ்க்கை சூழல், குடும்பப் பிரச்னை, உடல் உபாதை என பல்வேறு வகையாக துயர்களாலும் அழுத்தங்களாலும், ஒருவரால் சமாளிக்க முடியாத அளவுக்கு ஒரு விஷயம் கைமீறிப் போகும் போதெல்லாம் ஸ்ட்ரெஸ் எனச் சொல்லப்படும் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.

சில சமயம் ஸ்ட்ரெஸ் நல்லதாகவும் பாசிட்டிவாகவும் இருக்கும். இதில், ‘நாம் செய்யப் போகிறோம்’ என்பது முன்னே நிற்பதால், ஸ்ட்ரெஸ் நன்மையைச் செய்யும். பரீட்சைக்கு நன்றாகத் தயாராக இருக்க, எழுதத் துடிக்கையிலும் நாம் அனுபவிப்பது ஸ்ட்ரெஸ் தான். இப்படி, செய்யத் தயார் படுத்தி வழிகளை அமைத்துக் கொடுப்பது, ‘யூஸ்ட்ரெஸ்’ (Eustress), அதாவது நலம் தரும் ஸ்ட்ரெஸ்!

அதற்கு நேர்மாறாக, ஸ்ட்ரெஸினால், நம்முடைய மனோபலம், உறவுகள், உணர்வுகள் பாதிக்கப்படும்போது, அந்த ஸ்ட்ரெஸ் மன அழுத்தம் தரும். மனநலத்தில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ என்று கூறப்படுகிறது. ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் மன நிலையில் தொடர்ந்து நாம் இருந்து கொண்டே இருந்தால், உடலும், மனமும் கடுமையாக பாதிக்கப்படும்.

ஸ்ட்ரெஸின் அறிகுறிகளைப் புரிந்து செயல்பட்டால், அதிலிருந்து வெளியேறி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அறிதலும், அதற்கு ஏற்றாற் போல் பாதை அமைத்துக் கொள்வதும், உடல்-மனநல பாதுகாப்பின் முதல் படி!

ஸ்ட்ரெஸ் எதைக் குறிக்கிறது? ஸ்ட்ரெஸ் என்றால் என்ன?

ஏதோ அவசரம் மற்றும் அபாயமான நேரங்களில், நம் உடலும் மனமும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையே ஸ்ட்ரெஸ். பெரும்பாலும் ஸ்ட்ரெஸ் தரும் சூழ்நிலைகளை சந்திக்கக் கையாளும் முறைகளை ‘ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ்’ (Stress response) என்போம். இவை மூன்று வகையாகப் பிரிக்கப் படுகிறது. போராடுவது (Fight): சூழ்நிலையில் வெற்றி பெற முயற்சிப்பது. அடுத்தது, சூழ்நிலையை விட்டு ஓடி விடுவது (Flight): வெற்றி பெற முடியாது என்று எண்ணி விட்டு விடுவது. மூன்றாவது, உறைந்து நிற்பது (Freeze): சண்டையும் போடாமல், விட்டும் விடாமல், என்ன செய்வது என்று புரியாததால், ஒன்றுமே செய்யாமல் திகைத்திருப்பதும் நேரலாம்.

எதற்கோ பயந்தோ, ஆர்வப்பட்டாலோ, உடனே ஸ்ட்ரெஸை சமாளிக்க, நமது உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் (stress hormone) ஆட்ரினலினும், (adrenaline), கார்ட்டீஸால் (cortisol) உற்பத்தியாகும். இந்தப் போராளிகள், நம்மைச் சவாலுக்கு தயார்படுத்தும்.

அதன் உடல் அறிகுறிகள்: இதயம் வேகமாகத் துடிப்பது, மூச்சு வேகமாக விடுவது, நம் மற்ற உறுப்புகள் தயார் நிலையில் இருப்பது. இப்படி ஆனதும், ஆட்ரினலின், கார்டிஸால் சுரப்பதால் இன்னும் தெம்பு கூடுவது போல் தோன்றும். உடல், மூளை சுருசுருப்பாக வேலை செய்யும். இதைப் பல முறை கவனித்து இருப்போம், தேவை என்றால் அசதி கூடத் தெரியாமல் வேலை செய்வோம். பின்பே அசதி தெரியும்.

அதே சமயம் நம் மனது இதை உணர்ந்து, நம் உடலின் செய்கைகளுக்கு ஏற்றாற் போல் பயம், தைரியம் என்ற உணர்வுகளைக் காட்டும். ஸ்ட்ரெஸை, ஆட்கொள்ளவா, ஓடிப்போய் விடவா என்று அலசிக் கொண்டிருப்போம்.

செயல் முடிந்த பின் நம் மனம் அதிலிருந்து விலகவில்லை என்றால், உடலும், மனமும் ஸ்ட்ரெஸ் நிலையிலேயே இருக்கும், ஸ்ட்ரெஸ் அறிகுறிகள் இருந்து கொண்டே இருக்கும்.

ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் விளைவுகள்

உடலும் மனமும் அதிவேகத்தில் செயல்படுவதால், சதா சர்வகாலமும் ஸ்ட்ரெஸுடன் இருந்தால், நம் மன நலனை அது பாதிக்கும். சில சமயங்களில் இருக்கும் வலிகள், நோய்கள் ஸ்ட்ரெஸினால் இன்னும் அதிகரித்தது போலவும் கூடத் தோன்றும். நீடித்த ஸ்ட்ரெஸ் நம்முடைய ஒவ்வொரு அங்கத்தையும் பாதிக்கக்கூடும். பதற்றம், படபடப்பு, வலிகள், சோம்பல், அதிகப்படியான தூக்கம் அல்லது தூக்கமின்மை, தோல் பிரச்னைகள், மறதி, நினைவாற்றலில் தடுமாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படலாம்.

 ஸ்ட்ரெஸ் ஆட்கொண்டால்

ஸ்ட்ரெஸ் ஒரு முறை நிலைக்கச் செய்து விட்டால், அது ஒரு பழக்கம் போல் ஆகி, திரும்பத் திரும்ப அப்படியே செயல் படுவோம். இப்படித் தான் இருக்கும், இதிலிருந்து விடுதலை இல்லை என்று ஏற்றுக் கொண்டால், ஸ்ட்ரெஸ் நம்முள் வளர்ந்து, நம்மை ஆக்கிரமிப்பு செய்து கொள்கிறது.

நம் அறிவுணர்வியலில் (Cognitive) அதாவது, யோசித்து, புரிந்து கொள்வதில் ஸ்ட்ரெஸ் உட்புகுந்து கொண்டால் மறதி ஏற்படும். ‘ஞாபகம் இருப்பதில்லை’ என்று சொல்லி கொண்டே இருந்தால், இதை மாற்ற மாட்டோம். இப்படி நமக்குளே சொல்லி நிலை நாட்டுவதை ‘ஆடோ ஸஜஷன்’ (Auto suggestion) என்பார்கள். ஸ்ட்ரெஸினால் மறதி - மறதியால் ஸ்ட்ரெஸ் என்ற ஜோடி சேர்ந்துவிடும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். எப்பொழுதும் கவலையான எண்ணங்கள் ஓடும், அதிகமாகக் குறை கூறுவோம், கவனம் சிதறும்.

நம்முடைய உணர்வுகள்: ஸ்ட்ரெஸ் இருந்து கொண்டே இருந்தால், அதிகமான நேரம் பதற்றம், சோகம் இருந்து, ஒருவிதமான வெலவெலத்துப் போதலான உணர்வு தோன்றும். சலிப்பு, எரிச்சல் தோன்றி, வெறுப்பு தட்டும். ஸ்ட்ரெஸ் இருக்கையில், எல்லோருடன் இருந்தாலும், தனிமையாக இருப்பது போலவே உணருவோம்.

நம் உடல் ஸ்ட்ரெஸை பற்றி தெரிவிக்கும் விதம்: உடல் வலி, தலை சுற்றல், அடிக்கடி சளி, ஜுரம், மார்பில் வலி, வாந்தி பேதி, என்று ஏதோ ஒரு பாகத்தில் பாதிப்பு இருக்கலாம்.

ஸ்ட்ரெஸினால், ஒரு சிலருக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும், சிலருக்கு சுத்தமாகப் பசி எடுக்காது. அதே போல், தூக்கமும் அதிகம், குறைச்சல் ஆகலாம். செய்ய வேண்டிய வேலைகள் தாமதமாகும். இதைச் சமாளிக்க, நகத்தைக் கடிப்பது, புகை பிடித்தல், மது அருந்துவது, போதைக்கு  அடிமையாவது என்ற பழக்கங்கள் ஆரம்பமாகும். 

இவையெல்லாம் அதிகமான ஸ்ட்ரெஸ் தொடர்ந்து ஏற்படும் போது தலை தூக்கும். சூழ்நிலைகளை நன்றாக சமாளிக்கக் கற்றுக் கொண்டால், ஸ்ட்ரெஸ் அதிகமாவதைத் தவிர்க்கலாம்.

ஸ்ட்ரெஸின் காரணிகள்

நம் வாழ்வில் நடக்கும் நல்ல விஷயங்களும், நெருக்கடிகளும், கட்டாயங்களும், ஸ்ட்ரெஸின் காரணிகள் ஆகலாம். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், இழப்பு, உறவுமுறை மாறுதல் இவையும் காரணியாகலாம். வாழ்வில் தினந்தோறும் நேரிடும் நிகழ்வுகள்: காலை நேரத்திற்குள் வேலையை முடிப்பது / வேலைக்குப் பயணம் செய்வது இதுபோல் ‘தினசரி தொந்தரவுகள்’ (daily hassles) என்பதும் காரணிகளாகலாம். இவற்றைச் சமாளிக்கும் திறன், அல்லது வலு இல்லாமல் போனால் ஸ்ட்ரெஸ் உண்டாகிறது. இதைத் தவிர, நம்முடைய கண்ணோட்டங்கள், சிந்தனைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்தாலும் ஸ்ட்ரெஸ் நிலவும்.

எந்த ஸ்ட்ரெஸ் வகைகள், நலம் குறைக்கக் கூடும் என்பதை ஹோம்ஸ், ராஹே (Holmes and Rahe) ஸ்ட்ரெஸ் பட்டியல் இட்டிருக்கிறார்கள். அவற்றில் முதல் பத்து : வாழ்க்கைத் துணையின் மரணம், விவாகரத்து, கல்யாண வாழ்க்கையில் பிரிவு, சிறைத் தண்டனை, நெருங்கிய குடும்பத்தினரின் மரணம், உடல் நலக் குறைவு, திருமணம், வேலை இழப்பது, திருமண வாழ்க்கையில் இணக்கமின்மை, வேலையிலிருந்து ஓய்வு பெறுவது.

ஸ்ட்ரெஸ் பாதிக்காமல் இருக்க

வலுவான, நம்பகமான, ஆதரவான உறவினர், நண்பர்கள் கூட்டமைப்பு (network) இருந்தால், ஸ்ட்ரெஸ் உணரும் போது மற்றவர்கள் இருக்கிறார்கள் என்கிற மனதிடம் பாதிப்பு வராமல் காக்கும். இதற்கு மாறாக, தனிமை சூழ்ந்திருந்தால், ஸ்ட்ரெஸின் தாக்கம் தெரியும்.

என் கட்டுக்குள் இருக்கிறது’ என்ற எண்ணம் இருந்தால் ஸ்ட்ரெஸை எதிர் கொள்ள வழிகளை அமைப்போம். ‘எதுவும் என் கையில் இல்லை’ என்ற மனப்பான்மை இருந்தால், எதையும் செய்ய முயல மாட்டோம். ஸ்ட்ரெஸ் தன் ராஜ்யத்தை நிலை நாட்டி நம்மை அதற்கு அடிமையாக்கும்.

மனப்பாங்கு, மனப்பான்மையின் பங்கு உண்டு! பாதிப்புகளை வாய்ப்பாகப் பார்க்கிறவர்கள், நன்மையை யோசிக்கும் பக்குவம் உள்ளவர், தன் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து செயல்படுபவர், வாழ்க்கை என்றால் சுக-துக்கத்துக்குச் சம பங்கு என்று நினைப்பவர், இவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் எனலாம். இந்தப் பட்டியலில், ஏதேனும் இரண்டு இருந்தாலும் ஸ்ட்ரெஸ் நெருங்காது.

உணர்வுகளை கையாளத் தெரிவதும் உதவும்! உணர்வுகளைப் புரிந்து, அவைற்றைக் கண்டு கொண்டு, உணர்வைச் சமாதானம் படுத்தத் தெரிவது உதவும். இதனால், உடல்-மனநலம் பாதிக்காமல் இருக்கும், உடலும் பாதிப்பு இல்லாமல், ஸ்ட்ரெஸை சமாதானப் படுத்தி அனுப்பி விடும். ஸ்ட்ரெஸ் ஏற்பட்டாலும் உணர்வைப் புரிவதனால், முடிந்த பிறகு உணர்வைப் புரிந்து கொள்வோம், அதுவே நம்மை நல்ல நிலைக்கு வரச் செய்ய உதவும்.

உங்களின் ஸ்ட்ரெஸ் அடையாளம் காணுங்கள்

ஸ்ட்ரெஸ் எப்பொழுது தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானது. அதற்கு ஏற்றவாறு எப்படி அணுக வேண்டும் என்பது புரிய வரும்.

ஸ்ட்ரெஸ், என்னவெல்லாம் செய்யலாம்?

உடற் பயிற்சி

தினசரி விடாமல், உடல் பயிற்சி செய்வது. அது நடப்பதோ, நீச்சலோ, ஓடுவதோ, ஏதேனும் விளையாட்டு என்று தினம் 30-40 நிமிடத்திற்குச் செய்வதால் வலு அதிகரிக்கும். பயிற்சிகள் நம் மனநலத்தை மேம்படுத்த, அதன் விளைவு, செய்வதை அருமையாகச் செய்வோம்.

உணர்வாற்றல்

நம் ஐந்து புலன்கள் (sensory organs): நமக்கு நேர்ந்த ஸ்ட்ரெஸ் சரி செய்ய, பார்வை, சத்தம், ஸ்பரிசம், சுவை, மணம் உபயோகமாகலாம். இவற்றில் எந்த உறுப்பு ஸ்ட்ரெஸை குறைக்கிறது என்று நாம் அறிய வேண்டும்: பாட்டுக் கேட்பதா, மணல், புல் மேல் நடப்பதா, நற்மணம் சுவாசிப்பதா என்று.

மற்றவர்களுடன் சந்திப்பு

சிறிது நேரம் மற்றவர்களுடன் நேரம் கழிப்பது என்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் என்று இல்லாமல், நண்பர்கள், மற்றவருக்கு உதவி செய்வதற்காக என்று ஏதோ ஒரு விதத்தில் குறிக்கோளற்ற நேருக்கு நேர் சந்திப்புகள் வளர்த்துக் கொள்ளலாம். இப்படி இருப்பது, நம் மனதுக்கு இதமாக இருக்கும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தரும். உடல்-மனதுக்கு ரிலாக்ஸ் செய்யவும் உதவும்.

உணவு வகைகள்

சாப்பாட்டில், காய்கறிகள், பழங்கள், நிறைய உட்கொள்ள வேண்டும். சிப்ஸ், எண்ணெய்யில் பொறித்த பண்டங்களை தவிர்த்து இயற்கை உணவு, 2-3 லிட்டர் தண்ணீர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஓய்வு

நன்றாகத் தூங்குங்கள் நேக பிரச்னைகளுக்கு அதுவே தீர்வாகும். தினந்தோறும் அதே நேரத்திற்குத் தூங்க வேண்டும். கைப்பேசி, லேப்டாப் படுக்கை அறையில் இல்லாமல் பழகிக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், ஸ்ட்ரெஸ் என்பது நாம் கையாளும் விதத்தில் அடங்கி உள்ளது. மேற்சொன்ன விஷயங்களைப் புரிந்து செயல்பட்டால், ஸ்ட்ரெஸ் நமக்கு ஊக்கம் தரும் கருவியாக உபயோகிக்க முடியும். ஸ்ட்ரெஸ், டென்ஷன் மன அழுத்தம் எல்லாம் நம்மை ஆக்கிரமிக்க நாம் ஏன் விட வேண்டும்?

- மாலதி சுவாமிநாதன் - மனநல மற்றும் கல்வி ஆலோசகர் malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com