பகுதி - 843

என் பந்த வினைதொடர்..
பகுதி - 843

பதச் சேதம்

சொற் பொருள்

என் பந்த வினைதொடர் போக்கிவிசையமாகி

 

விசையமாகி: வெற்றி தந்து;

இன்பம் தனை உற்றுமகா ப்ரியம் அதுவாகி

 

 

அன்பு உந்திய பொன்கிணி பாற் கடல்அமுதான

 

பொன்கிணி: பொன் கிண்ணி;

அந்தம் தனில் இச்சைகொள் ஆற்பதம்அருள்வாயே

 

ஆற்பதம்: ஆஸ்பதம்—ஆதாரம்;

முன் புந்தி நினைத்துஉருவால் சிறுவடிவாகி

 

புந்தி நினைத்து: மனத்தால் எண்ணி;

முன் திந்தி எனபரதாத்துடன் நடமாடி

 

பரதாத்துடன்: பரத சாத்திர முறையுடன்;

தம் பந்தம் அற தவ(ம்)நோற்பவர் குறை தீர

 

 

சம்பந்தன் என தமிழ்தேக்கிய பெருமாளே.

 

தேக்கிய: தேக்குதல்—நிரம்பப் பருகுதல் (தேக்கெறிதல் என்றால் ஏப்பம் விடுதல் என்று பொருள்);

என்பந்த வினைத்தொடர் போக்கி விசையமாகி...  என்னைப் பிணித்திருக்கின்ற வினையாகிய சங்கிலித் தொடரிலிருந்து நான் விடுபடச்செய்து, என்னை வெற்றிபெறச் செய்து,

இன்பந்தனை யுற்று மகாப்ரியம் அதுவாகி...  இன்ப நிலையை எய்தி, பெரு விருப்பம் கொண்டு,

அன்பு உந்திய பொற்கிணி பாற்கடல் அமுதான... அன்பால் தூண்டப்பட்டு, பாற்கடல் என்னும் பொற்கிண்ணத்திலே உள்ள அமுதத்துக்கு இணையான,

அந்தந்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே... முடிவான பேரின்பப் பொருளின் மீது இச்சை கொள்கின்ற ஆதார நிலையைத் தந்தருள வேண்டும்.

முன் புந்தி நினைத்து உருவாற் சிறு வடிவாகி... முற்காலத்தில் (சூரனை அழிக்க) மனத்தால் நினைத்து, வடிவத்தால் சிறிய பாலகனாகத் தோன்றி,

முன்திந்தியெனப் பரதாத்துடன்நடமாடி... (சூரனை சம்ஹரித்தபோது) ‘திந்தி’ என்ற தாளகதியோடு பரதசாஸ்திர முறைப்படி, துடி என்னும் கூத்தினை ஆடி*,

(* இது, முருகன் சிதம்பரத்தில் நடனமாடியதைக் குறிக்கலாம் என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்களின் கருத்து.  ‘அலைகடல் வளைந்துடுத்த’ என்று தொடங்கும் திருக்கணியல் வகுப்பிலும் அருணகிரி நாதர் ‘முதலி பெரியம்பலத்துள் வரை அசல மண்டபத்துள், முநிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்’ என்று பாடுவதைக் காணலாம்.)

தம்பந்தம் அறத் தவ நோற்பவர் குறைதீர... தங்களுடைய பந்த பாசங்களிலிருந்த விடுபடுவதற்காகத் தவம் மேற்கொண்டுள்ளவர்களுடைய குறை தீரும்படியாக,

சம்பந்தன் எனத்தமிழ் தேக்கிய பெருமாளே.... திருஞான சம்பந்தராக அவதரித்து தமிழை நிரம்பப் பருகி (தேவாரமாக உலகுக்கு அளித்த) பெருமாளே!

சுருக்க உரை

முற்காலத்தில் சூரனை அழிக்கவேண்டும் என்று மனத்தால் நினைத்து, சிறிய பாலகன் வடிவத்தைக்கொண்டு அவனை !ம்ஹரித்து, அந்த ஸம்ஹார காலத்திலே பரத சாஸ்தி முறைப்படி துடி என்னும் கூத்தை (சிதம்பரம், பேரம்பலத்தில்) ஆடியவனே!  தங்களுடைய பந்தபாசங்களிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக தவம் மேற்கொண்டுள்ளவர்களுடை மனக்குறையைப் போக்கும்படித் திருஞான சம்பந்தராக அவதரித்து, தமிழை நிரம்பப் பருகி, தேவாரப் பண்களாக உலகுக்கு அளித் பெருமாளே!

என்னைப் பிணித்திருக்கின்ற வினைத்தொடர் என்னும் சங்கிலியிலிருந்து என்னை விடுவித்து, என்னை வெற்றிபெறச் செய்து, நான் இன்ப நிலையை அடைந்து மிகுந்த பிரியத்துடனும் அன்புப் பெருக்கத்துடனும், பாற்கடல் என்னும் பொற்கிண்ணத்தில் உள்ள அமுதத்துக்கு இணையானதான முடிவான பேரின்பப் பொருளின்மீது விருப்பம்கொள்கின்ற ஆதார நிலையத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com