பகுதி - 821

சருவிய சாத்திர திரளான..
பகுதி - 821

பதச் சேதம்

சொற் பொருள்

சருவிய சாத்திர திரளான

 

சருவிய: பழகிய, பயிற்சியுள்ள;

சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத

 

சடுதிகழ்: ஆறாக விளங்குகின்ற; ஆஸ்பதத்து: ஆதாரங்களில்;

அரு மறையால் பெறற்கு அரிதாய

 

 

அனிதய வார்த்தையை பெறுவேனோ

 

அனிதய: இதயத்துக்கு எட்டாத—மனத்துக்கு எட்டாத;

நிருதரை மூக்கு அறுத்து எழு பார

 

நிருதரை: அரக்கர்களை; எழு: ஏழு; பார: பெருமையுடைய;

நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே

 

நெடுதிரை: நீண்ட அலைகள்; ஆர்ப்பு: பேரொலி; பொருதோனே: போரிட்டோனே;

பொருள் அடியால் பெற கவி பாடும்

 

பொருள்: மெய்ப்பொருள்; அடியால்: (உன்) திருவடியால்;

புலவர் உசாத்துணை பெருமாளே.

 

உசாத்துணை: உற்ற துணை;

சருவிய சாத்திரத் திரளான... நன்கு பயின்ற எல்லாச் சாத்திரங்களின் திரண்ட பொருளாக (விளங்குவது எதுவோ),

சடுதிகழ் ஆஸ்பதத்து அமையாத... ஆறாக அமைந்துள்ள (மூலாதாரம் முதலான) ஆதாரங்களுக்குள் பொருந்தி அடங்காதது (எதுவோ),

அருமறையாற் பெறற்கு அரிதாய... அரிய மறைகளால் அடைய முடியாதது (எதுவோ),

அனிதய வார்த்தையைப் பெறுவேனோ...மனத்துக்கு எட்டாதது (எதுவோ, அப்படிப்பட்ட) உபதேச மொழியை நான் பெறுவேனோ (அப்படிப்பட்ட உபதேசத்தை அடியேனுக்கு அருள வேண்டும்).

நிருதரை மூக்கறுத்து... அரக்கர்களுடைய மூக்கை அறுத்து (அவமதித்து),

எழுபார நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே... நீண்ட அலைகள் புரள்கின்ற ஏழு கடல்களிலும் பேரொலி எழுமாறு போரிட்டவனே!

பொருள் அடியாற் பெறக் கவிபாடும்...  உன்னுடைய திருவடிகளின் துணையால் மெய்ப்பொருளை அடைவதற்காகப் பாடல்களைப் புனைகின்ற,

புலவர் உசாத்துணைப் பெருமாளே.... புலவர்களுக்கு உற்ற துணையாக நிற்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

அசுரர்களை மூக்கறுத்து அவமதித்து, அலைகள் புரள்கின்ற ஏழு கடல்களிலும் பேரொலி உண்டாகுமாறு போரிட்டவனே!  உன்னுடைய திருவடிகளைத் துணைக்கொண்டு (அதன் மூலமாக) மெய்ப்பொருளை அடையவேண்டும் என்பதற்காகப் பாடல்களைப் புனைகின்ற புலவர்களுக்கு உற்ற துணையாக விளங்குகின்ற பெருமாளே!

நன்கு பழகிய சாத்திரத் தொகுதிகளின் உட்பொருளாக ஆனதும்; ஆறு ஆதாரங்களிலும் பொருந்தி அமையாததும்; அரிய வேதங்களாலும் அடைய முடியாததும்; மனத்துக்கு எட்டாததுமான அந்த அரிய உபதேசத்தை அடியேனுக்கு அளித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com