பகுதி - 837

கட்டம் உறு நோய்தீமை..
பகுதி - 837

பதச் சேதம்

சொற் பொருள்

கட்டம் உறு நோய்தீமை இட்ட குடில் மாமாய கட்டுவிடும் ஓர்கால் அளவா (ஏ)

 

கட்டம் உறு: கஷ்டத்தைத் தருகின்ற; இட்ட குடில்: அமைக்கப்பட்ட உடல்; கட்டுவிடும்: பந்தத்தை விடுகின்ற;

கத்த உறவோர் பாலர்தத்தை செறிவார்வாழ்வு கற்பு நெறிதான் மாய உயர்காலன்

 

கத்த உறவோர்: உறவினர்கள் கத்த; பாலர்: பிள்ளைகள்; தத்தை செறிவார் வாழ்வு: ஆபத்துகள் நிறைந்த நீண்ட வாழ்வு என்பது குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்களின் விளக்கம்; கற்புநெறி: ஒழுக்க நெறி;

இட்ட ஒரு தூதாளும்முட்ட வினையால்மூடி இட்ட விதியேஆவி இழவா முன்

 

இட்ட: ஏவிய; தூதாளும்: தூதர்களும்; முட்ட: தாக்க;

எத்தி உனைநாடோறும்முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடுஆர நினைவாயே

 

எத்தி உனை: ஏத்தி உனை, உன்னைப் போற்றி; ஆர: நன்றாக;

துட்டர் என ஏழ் பாரும்முட்ட வினையாள்சூரர் தொக்கில் நெடுமா மார்புதொளையாக

 

ஏழ்பாரும்: ஏழு உலகங்களும்; முட்ட வினையாள் சூரர்: வினை முட்ட ஆள் சூரர்—(கொடுந்)தொழில்களை முழுக்கச் செய்துவந்த சூரர்கள்; தொக்கில்: தோலில்—உடலில் (த்வக்: தோல்—வடமொழி);

தொட்ட வடிவேல் வீரநட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞானமுருகோனே

 

நட்டம் இடுவார்: நடனமாடுபவர்—நடராஜர்;

மட்டு மரை நால்வேதன் இட்ட மலர்போல் மேவ மத்தமயில் மீது ஏறி வருநாளை

 

மட்டு: நறுமணம்; மரை: தாமரை; நால்வேதன்: பிரமன்; இட்ட மலர்: இஷ்டமான மலர்; இட்டமலர் போல் மேவ: தாமரையைப் போன்ற பதுமாசனத்திலே அமர்ந்து; மத்த மயில்: செருக்குற்ற மயில்;  

வைத்த நிதி போல்நாடி நித்தம் அடியார்வாழ வைத்த படிமாறாத பெருமாளே.

 

வைத்தநிதி: சேமித்து வைத்த நிதி; வைத்தபடி: வைத்த நிலையில் (படி: தன்மை);

கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் காலம் அளவாவே... கஷ்டத்தைக் கொடுக்கின்ற நோய்களாலும்ம் பிற தீமைகளாலும் அமைந்திருக்கும் குடிலான இந்த உடலானது உலக மாயையின் தொடர்பை விடப்போகின்ற (உயிர் போகப்போகின்ற) சமயத்தை அறிந்துகொண்டு,

கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய... உறவினர்களும் பிள்ளைகளும் கதறி அழ; ஆபத்துகள் நிறைந்த நீண்ட வாழ்க்கையும், (மேற்கொண்டிருந்த) ஒழுக்க நெறியும் அழியும்படியாக,

உயர் காலன் இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன்... உயர்ந்த யமன் அனுப்பிய ஒப்பற்ற தூதர்களும் தாக்க; வினைகளால் மூடப்பட்டு, விதியின் முறைப்படியே உயிர் பிரிவதற்கு முன்னாலே,

எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே... முத்தமிழால் நான் உன்னை எப்போதும் போற்றித் துதிப்பதற்கு, நீ விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாக நினைத்தருள வேண்டும்.

துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக தொட்ட வடிவேல் வீர ..... ‘இவர்கள் துஷ்டர்கள்’ என்று ஏழுலகிலும் உள்ளவர்கள் சொல்லும்படியாகத் தங்கள் கொடுந்தொழிலை முழுக்க நடத்திய சூரர்களுடைய, தோலால் மூடப்பட்ட அகன்ற மார்பிலே துளைக்கும்படியாக வடிவேலைச் செலுத்திய வீரனே!

நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே... நடராஜருடைய பாலனே! சுத்தத் தமிழால் நிறைந்திருக்கும் ஞானவேள் முருகனே!

மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை... நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனுக்கு விருப்பமான பதுமத்தின் வடிவிலான (பத்மாசனத்தில்) செறுக்கு நிறைந்த மயிலின் மீது நீ அமர்ந்து வருகின்ற அந்த நாளை,

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே.... தாங்கள் சேமித்து வைத்த நிதி என்று போற்றுகின்ற அடியார்களை எப்போதும் வாழவைப்பவனே! கருணைத் தன்மை எப்போதும் மாறாத பெருமாளே!

சுருக்க உரை

‘இவர்கள் துஷ்டர்கள்’ என்று ஏழுலகங்களில் உள்ளவர்களும் வேதனையுடன் கூறும்படியாகத் தம் கொடுந்தொழில்களை முழுமையாகச் செய்துவந்தவர்களான சூரர்களுடைய அகன்ற மார்பைத் துளைக்கும்படியாகச் செலுத்திய வடிவேலை ஏந்தியவனே! நடராஜருடைய பாலனே! சுத்தத் தமிழால் நிறைந்திருக்கும் ஞானவேளே! முருகனே!  செறுக்குள்ள மயிலின்மீது. தாமரையில் வீற்றிருப்பவனும் நால்வேதங்களையும் ஓதுபவனுமான பிரமனுக்கு விருப்பமுள்ள மலரான பதுமத்தின் வடிவிலமைந்த பதுமாசனத்தில் நீ அமர்ந்த நிலையில் வரும் நாளைத் தாம் சேமித்து வைத்த நிதியாகப் போற்றுகின்ற அடியார்களை எப்போதும் வாழவைப்பவனே!  கருணை மாறாதா பெருமாளே!

கஷ்டத்தைக் கொடுக்கும் நோய்களாலும் பிற தீமைகளாலும் நிறைந்துள் இந்த உடல், உலகின் மாயப் பிணிப்பிலிருந்து விடுபட்டு, உயிர் நீங்கப்போகும் தறுவாயில் சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, நீண்டதும், ஒழுக்கம் நிறைந்ததுமான வாழ்க்கை அழியும்படியாக யமன் அனுப்பிய தூதர்கள் வந்து தாக்குவதால் நான் உயிரை இழப்பதற்கு முன்னால் உன்னை எப்போதும் முத்தமிழால் போற்றவேண்டும் உன் கருணை நிறைந்த மனத்தால் விருப்பத்துடன் நினைத்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com