பகுதி - 839

மக்கள் ஒக்கல்..
பகுதி - 839

பதச் சேதம்

சொற் பொருள்

மக்கள் ஒக்கல்தெரிவை பக்க மிக்கதுணைவர் மற்றும்உற்ற குரவர்அனைவோரும்

 

ஒக்கல்: உறவினர்; தெரிவை: பெண், மனைவி; துணைவர்: சகோதரர்களும் நண்பர்களும்; உற்ற: உள்ள; குரவர்: பெரியோர்கள்;

வைத்த செப்பிற்பணமும் ரத்நம்முத்தில் 
பணியும் மட்டும் அற்றுபெருகும் அடியாரும்

 

செப்பில்: உண்டியலில், சேமிப்பில்; பணியும்: ஆபரணங்களும்; மட்டுமற்று: மட்டுமல்லாமல்;

புக்கு துக்கித்து எரிகள்தத்த வைக்க
புகுது பொய்க்கு மெய்க்குசெயலும் உருகாதே

 

புக்கு: வீட்டுக்குள் வந்து; துக்கித்து: துக்கம் கொண்டாடி; எரிகள்: நெருப்பு; தத்த வைக்க: கொழுந்துவிட்டெரிய; பொய்க்கு: பொய்யான; மெய்க்கு: உடலுக்கு;

புஷ்பம் இட்டுகருணை நல் 
பதத்தைபரவு புத்தி மெத்ததருவது ஒரு நாளே

 

பரவு(ம்): போற்றுகின்ற

செக்கர் கற்றைசடையில் மிக்ககொக்கின் 
சிறகு செக்கம் உற்றசலமும் மதி சூடி

 

செக்கர் கற்றைச் சடை: செந்நிறமுள்ள கற்றைச் சடை; செக்கம்: செகம், உலகம்; செக்கம் உற்ற சலம்: உலகுக்கு வந்த நீர்—கங்கை;

சித்தம் உற்று தெளியமெத்த மெத்ததிகழு(ம்) 
சித்த முத்திசிவமும்அருள்வோனே

 

சித்த முத்தி: திடமான முத்தி; சிவமும்: நன்மைப் பொருளையும்;

கொக்கு உறுப்பு கொடுமை நிற்கும் 
வட்டத்துஅசுரை கொத்தின்ஒக்க கொலை செய்வடி வேலா

 

கொக்கு உறுப்பு: (கொக்கு மாமரம், உறுப்பு: கிளை) மாமரக் கிளை; மை வட்டத்து: கரிய வட்டமாகிய கடல்; அசுரை: அசுரனை—சூரனை;

கொற்றம் வெற்றிபரிசை ஒட்டி எட்டிசிறிது குத்தி வெட்டிபொருத பெருமாளே.

 

கொற்றம்: வீரம்; பரிசை: கேடயத்தை; ஒட்டி எட்டி: அருகிலிருந்தும் தூர இருந்தும்;

மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்கத் துணைவர் மற்றும் உற்ற குரவர் 
அனைவோரும்...  குழந்தைகள், உறவினர்கள், அருகில் இருக்கின்ற பல சகோதரர்கள், நண்பர்கள், அதற்குமேலும் இருக்கின்ற பெரியவர்கள் என்று அனைவரும்,

வைத்த செப்பிற் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும்... (நான்) சேர்த்து வைத்திருக்கிற செப்புக் காசுகளும், ரத்தினத்தாலும் முத்தாலும் ஆன அணிகலளும் என் (பிணத்தோடு) வராமல் போக; திரளான கூட்டமாகக் கூடுகின்ற அடியார்களும்,

புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே... வீடு புகுந்து துக்கம் கொண்டாடி, (சுடுகாட்டில் வைக்கின்ற இந்த உடலுக்கு) வைக்கின்ற தீ கொழுந்துவிட்டெரியச் செய்யப்போகின்ற பொய்யானதும் நிலையற்றதுமான இந்த உடலின்பொருட்டு  என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல்,

புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு 
நாளே...  மலர்களைத் தூவிப் பூசித்து, கருணை நிறைந்தததான உன் திருப்பதங்களை நான் போற்றுவதற்கான அறிவை எனக்கு விரைவில் நிரம்பத் தந்தருள வேண்டும்.

செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கின் சிறகு செ(க்)கம் உற்றச் சலமும் மதி சூடி... சிவந்த கற்றைச் சடையில் மிகுதியாக கொக்கின் இறகுகளையும்; இந்த மண்ணுலகுக்கு வந்ததான கங்கை நதியையும்; பிறை நிலவையும் அணிந்திருக்கின்ற சிவபெருமானுக்கு,

சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்சித்த முத்திச் சிவமும் 
அருள்வோனே... அவருடைய மனத்திலே நன்கு பொருந்தி தெளிவடையுமாறும் மிகமிக நன்றாக விளங்குமாறும் திடமான முக்தி நிலையாகிய நன்மைப் பொருளை அருளியவனே!

கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரரை கொத்தின் ஒக்கக் கொலை செய் வடிவேலா... மாமரத்தின் கிளைகளைப் பரப்பிக்கொண்டு, வட்டமான கருங்கடலுக்கு நடுவில் நின்ற சூரபதுமனையும் மற்ற அரக்கர்களையும் ஒரே வீச்சில் கொன்றொழித்த கூரிய வேலை உடையவனே!

கொற்ற வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது குத்தி வெட்டிப் பொருத 
பெருமாளே.... வீரத்தையும்ம் வெற்றியையும் உடைய கேடயத்தோடு அருகிலும் தூரத்திலும் நின்றபடி (சிலரை வேலால்) குத்தியும்; (சிலரை வாளால்) வெட்டியும் போரிட்ட பெருமாளே!

சுருக்க உரை

சிவந்த கற்றைச் சடாமுடியில் கொக்கின் இறகுகளையும் கங்கையையும் பிறைச் சந்திரனையும சூடிய சிவபிரானுக்குச் சித்தத்தில் பொருந்தியிருக்குமாறு திடமான முத்திப் பொருளை உபதேசித்தவனே! கரிய வட்டமாகக் கிடக்கின்ற கடலின் நடுவிலே கிளைகளோடு மாமர வடிவிலே நின்ற சூரபதுமனையும் மற்ற அசுரர்களையும் ஒரே வீச்சில் கொன்றொழித்த கூரிய வேலை ஏந்துபவனே! வீரமும் வெற்றியும் பொருந்தியதான கேடயத்தை ஏந்தியபடி அருகிலிருந்த சில அரக்கர்களை வாளால் வெட்டியும்; தூர இருந்த சில அசுரர்களை வேலால் குத்தியும் போரிட்ட பெருமாளே!

மக்களும் உறவினர்களும் சகோதரர்களும் நண்பர்களும் குரு முதலான பெரியோர்களும், நான் சேமித்து வைத்திருக்கும் பொருளும் (என் பிணம் செல்லும்போது) கூட வராமல் ஒழிய; திரளாகக் கூடிய அன்பர்கள் துக்கம் மேலிட்டு என் உடலுக்குத் தீ வைக்க, அத்தீ கொழுந்துவிட்டெரிய, அழிந்துபோகும் நிலையற்ற இந்த உடலின்பொருட்டாக என் செயல்கள் உருகிக்கொண்டிராமல், உன் திருவடிகளுக்கு மலர் தூவி பூசித்துப் போற்றும் நல்லறிவை அடியேனுக்கு உடனே தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com