பிசிசிஐ கோரிய வழக்குச் செலவில் 60% தொகையை பிசிபி வழங்க வேண்டும்: ஐசிசி உத்தரவு

புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பிசிசிஐ கோரிய வழக்குச் செலவில் 60% தொகையை பிசிபி வழங்க வேண்டும்...
பிசிசிஐ கோரிய வழக்குச் செலவில் 60% தொகையை பிசிபி வழங்க வேண்டும்: ஐசிசி உத்தரவு

புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பிசிசிஐ கோரிய வழக்குச் செலவில் 60% தொகையை பிசிபி வழங்க வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014-இல் பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் (பிசிபி) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். அதன்படி 2015 முதல் 2023 வரை இரு அணிகளும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ ஒப்பந்த ஷரத்துப்படி செயல்படவில்லை. இதனால் தனக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புக்காக 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.500 கோடி) இழப்பீடு தர வேண்டும் என ஐசிசியிடம் முறையிட்டிருந்தது பிசிபி. 

மத்திய அரசு அனுமதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் தொடரில் பங்கேற்க முடியும் என பிசிசிஐ கூறியிருந்தது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களைக் கட்டுப்படுத்தாது, மேலும் ஐசிசிக்கு வருவாய் கிடைப்பதற்கான வழிவகைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தரவில்லை. 2008-இல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து மத்திய அரசு தான் இரு தரப்பு தொடர்களுக்கு அனுமதி தர வேண்டும் என பிசிசிஐ பதில் மனு தாக்கல் செய்தது.

ஒப்பந்தத்தின்படி இந்தியா கிரிக்கெட் தொடரில் பங்கேற்காததால், பிசிசிஐ ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை தொடர்பாக ஐசிசி தகராறு தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் விசாரணையைத் தொடங்கியது. ஐசிசி தகராறு தீர்ப்பாயத் தலைவர் மைக்கேல் பெலாஃப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இதற்காக இரு வாரியங்களும் சர்வதேச சட்ட நிபுணர்களை வழக்காட நியமித்தன. 

கடந்த மாதம் வழக்கில் தீர்ப்பளித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தான் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் மேல்முறையீடும் செய்ய முடியாதது எனவும் உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்குச் செலவை பிசிபி வழங்க முறையிட்டது பிசிசிஐ. இதையடுத்து பிசிசிஐ கோரிய தொகையில் 60 சதவிகிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கவேண்டும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் ஐசிசி தகராறு தீர்ப்பாயத்தின் நிர்வாகச் செலவுகளில் 40 சதவிகிதத்தை பிசிசிஐ தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com