ஆஸி. சுற்றுப்பயணத்துக்கு முன்பு தவன் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி தருகிறது: ரோஹித் சர்மா

ஆஸி. சுற்றுப்பயணத்துக்கு முன்பு தவன் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி தருகிறது: ரோஹித் சர்மா

ஆஸி. சுற்றுப்பயணத்துக்கு முன்பு ஷிகர் தவன் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி தருகிறது என இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ஆஸி. சுற்றுப்பயணத்துக்கு முன்பு ஷிகர் தவன் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி தருகிறது என இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
 மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத் தொடரில் ஓபனர் தவன் சரிவர விளையாடவில்லை. மேலும் டி20 தொடரிலும் முதலிரண்டு ஆட்டங்களில் அவர் சோபிக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அற்புதமாக ஆடி 92 ரன்களை குவித்தார்.
 இதுதொடர்பாக கேப்டன் ரோஹித் கூறியதாவது:
 கடைசி ஆட்டத்தில் இந்தியா வெல்ல தவன் ஆட்டம் உதவியாக இருந்தது. அணி நிர்வாகத்தின் பார்வையில் வீரர்கள் ரன்களை குவிக்க வேண்டும். அதன்படி முக்கியமான ஆஸி. சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளது. தற்போது தவன் வெற்றியைத் தேடித் தரும் வகையில் ரன்களை விளாசியுள்ளார்.
 ரிஷப் பந்த்தும் தனது இருப்பை ஆட்டத்தின் மூலம் பதிவு செய்துள்ளார். மே.இ.தீவுகள் அளித்த அழுத்தத்தை நமது வீரர்கள் திறம்பட எதிர்கொண்டனர்.
 ஆஸி.யில் நடைபெறும் சுற்றுப்பயணம் மிகவும் வித்தியாசமாக கடினமாக இருக்கும். டி20 தொடரை வென்றதின் மூலம் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
 ஆஸி.யில் சிறப்பாக ஆடி சாதனை படைக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாகும். மே.இ.தீவுகள் தொடரில் பீல்டிங் மேம்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என நினைக்கவில்லை. முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு டி20 ஆட்டங்கள், பயிற்சி ஆட்டங்கள் உள்ளன. ஆசிய கோப்பை, மே.இ.தீவுகள் டி20 தொடரை கேப்டனாக வென்றது குறித்து கேட்டபோது, எதையும் எளிதாக கையாள்வேன் என்றார்.
 எந்த ஆட்டமும் ஒரு புதிய ஆட்டமாக கருத வேண்டும். க்ருணால் பாண்டியா போன்றோர் அச்சமின்றி ஆடுவது சிறப்பானது. தோனி அணியில் இல்லாதது பெரிய இழப்பாகும். அவர் அணியில் இருந்தாலே வீரர்களுக்கு மிகுந்த உற்சாகம் என்றார்.
 பாடம் கற்றுள்ளோம்...
 3-0 என டி20 தொடரை இழந்தது மனதுக்கு வேதனை தருகிறது. அதே நேரத்தில் கடைசி ஆட்டத்தில் நாங்கள் கடினமாக போராடினோம் என கேப்டன் கார்லோஸ் பிராத்வொயிட் தெரிவித்துள்ளார்.
 அவர் மேலும் கூறியதாவது:
 கேப்டனாக எனக்கு இந்த தோல்வி அவமானகரமாக உள்ளது. எனினும் எங்களிடம் உள்ள வீரர்களைக் கொண்டு கடும் சவாலை உண்டாக்கினோம். அணியின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இரண்டாவது ஆட்டத்தில் முழுமையாக சரண் அடைந்துவிட்டோம். ஆனால் மூன்றாவது ஆட்டத்தில் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. எனினும் இந்திய வீரர்கள் வெற்றியை தட்டிச் சென்று விட்டனர்.
 இளம் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் சிறப்பாக ஆடினார்.
 ரிவர்ஸ் ஸ்விப் என புதிய உத்தியை கையாண்டு ஆடினார். வீரர்கள் தொடர்ந்து நிலையாக தங்கள் ஆட்டத்திறமையை வெளிப்படுத்த வேண்டும். எங்களிடம் எதிரணிகளை நிலைகுலையச் செய்யும் வெற்றி வீரர்கள் 4 பேர் உள்ளனர். பிரவோவும் சிறப்பாக ஆடினார். இந்திய தொடரில் பெற்ற பாடங்களை கற்றுள்ளோம். வங்கதேச தொடரில் சரிவர ஆடுவோம். ஷிகர் தவன்-பந்த் இணை சிறப்பாக ஆடியது என்றார் பிராத்வொயிட்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com