தில்லியில் இன்று தொடங்குகிறது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சாதனைத் தங்கம் வெல்வாரா மேரி கோம்?

மகளிருக்கான பத்தாவது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடக்க விழாவில் உரையாற்றும் மேரி கோம்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடக்க விழாவில் உரையாற்றும் மேரி கோம்.


மகளிருக்கான பத்தாவது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தலைநகர் தில்லியில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் 72 நாடுகளில் இருந்து 300-க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஏற்கெனவே கடந்த 2006-ஆம் ஆண்டில் இதே போட்டியை நடத்திய இந்தியா, தற்போது 12 ஆண்டுகள் கழித்து 2-ஆவது முறையாக மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. 2006 சீசனில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இப்போட்டியில் இந்தியா தங்கம் உள்பட 3 பதக்கங்கள் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதிப்பாரா மேரி கோம்?: இந்த சீசனில் இந்தியாவின் சார்பில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் (48 கிலோ பிரிவு) உள்பட 10 பேர் பங்கேற்கின்றனர். உலக குத்துச்சண்டையில் இதுவரை 5 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ள மேரி கோம், ஐரிஷ் வீராங்கனை கேத்தி டெய்லரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கேத்தி தொழில் முறை குத்துச்சண்டைக்கு மாறிவிட்டதால், மேரி கோம் இந்தப் போட்டியில் தங்கம் வெல்லும் பட்சத்தில் உலக குத்துச்சண்டை போட்டியில் அதிக தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார். அத்துடன், அவர் இந்தியாவில் வெல்லும் 2-ஆவது தங்கமாக அது இருக்கும்.
இப்போட்டியில் மேரி கோம் தவிர்த்து, அவரது மாநிலமான மணிப்பூரிலிருந்து சரிதா தேவியும் களம் காண்கிறார். 60 கிலோ பிரிவில் போட்டியிடும் சரிதா தங்கம் வெல்லும் பட்சத்தில், உலக சாம்பியன்ஷிப்பில் அவருக்கு இது 2-ஆவது தங்கமாக இருக்கும்.
இவர்கள் தவிர்த்து, பிங்கி ஜங்ரா (51 கிலோ) மணீஷா மெளன் (54 கிலோ), சோனியா (57 கிலோ), சிம்ரன்ஜித் கெளர் (64 கிலோ), லோவ்லினா போர்கோஹெயின்(69 கிலோ), சவீதி பூரா (75 கிலோ), பாக்யவதி கச்சாரி (81 கிலோ), சீமா பூனியா (81 கிலோவுக்கு மேல்) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
அனுமதி கிடைக்குமா?: இதனிடையே கொசோவோ நாட்டிலிருந்து டோன்ஜெடா சாடிகு என்ற ஒரே வீராங்கனை பங்கேற்க அனுமதி கேட்டுள்ளார். தென் கிழக்கு ஐரோப்பாவில் சர்ச்சைக்குரிய பிராந்தியமாக இருக்கும் கொசோவோவை இந்தியா அங்கீகரிக்காத நிலையில், அவருக்கான நுழைவு இசைவு வழங்க இந்தியா தாமதித்து வருகிறது. எனினும், அவரை அனுமதிக்காத பட்சத்தில் சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அஞ்சுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com