81 ரன்கள் எடுத்த அக்‌ஷர் படேல்: 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வி ( ஆட்டத்தின் முழு விடியோ)

பேட்டிங் திறமை கொண்ட பந்துவீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தரும் அக்‌ஷர் படேலும் நிலைமையை மாற்றினார்கள்...
81 ரன்கள் எடுத்த அக்‌ஷர் படேல்: 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வி ( ஆட்டத்தின் முழு விடியோ)

இந்திய ஏ அணியிடம் முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று, ஒருநாள் தொடரையும் இழந்த மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணி 4-வது ஒருநாள் ஆட்டத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எனினும் 8-ம் நிலை வீரராகக் களமிறங்கிய அக்‌ஷர் படேல் 81 ரன்கள் எடுத்தது அந்த அணியினருக்குச் சிறிது நேரம் நடுக்கம் கொடுத்திருக்கும் என்பது மட்டும் உண்மை. 

பில்லியனரும் கிரிக்கெட் ரசிகருமான ஆலன் ஸ்டான்ஃபோர்ட் ஆண்டிகுவாவில் கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கினார். பிறகு இந்த மைதானத்தின் உரிமை ஆண்டிகுவா மற்றும் பார்புடா அரசு மற்றும் மே.இ. தீவுகள் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் வசம் சென்றது.  அந்த மைதானத்தில் நேற்று இந்தியா ஏ - மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது. 

முதலில் விளையாடிய மே.இ. தீவுகள் ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. சேஸ் 84 ரன்களும் விக்கெட் கீப்பர் தாமஸ் 70 ரன்களும் எடுத்தார்கள். கார்டர் 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் கலீல் அஹமது 4 விக்கெட் எடுத்தார். இதனால் அவர் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

இந்திய அணியால் இந்த பெரிய ஸ்கோரைச் சரியாக விரட்டமுடியாமல் போனது. 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததால் மே.இ. தீவுகள் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் திறமை கொண்ட பந்துவீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தரும் அக்‌ஷர் படேலும் நிலைமையை மாற்றினார்கள். வலுவான கூட்டணி அமைத்தார்கள். 68 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். எனினும் அக்‌ஷர் படேல் திறமையாக விளையாடி வெற்றிக்கு அருகில் கொண்டு நிறுத்தினார். 63 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com