புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்

கஜா புயல் கரையைக் கடக்கும் நிகழ்வானது சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
புயல் கரையை கடக்கும் நிகழ்வு சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது: பாலச்சந்திரன்


சென்னை: கஜா புயல் கரையைக் கடக்கும் நிகழ்வானது சுமார் 3 அல்லது 4 மணி நேரம் நிகழக்கூடியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று இரவு கஜா புயல் கரையைக் கடக்கவிருக்கும் நிலையில், பிற்பகல் 3 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் மற்றும் இயக்குநர் பாலச்சந்திரன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பாலச்சந்திரன் கூறியதாவது, வங்கக் கடலில் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கு திசையில் 217 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நாகப்பட்டினம் கடற்கரையை நோக்கி மணிக்கு 17 கி.மீ. முதல் 20 கிலோ மீட்டர் வேகத்துக்கு நகர்ந்து வருகிறது.

இது தமிழ்நாடு கடற்கரையை இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகப்பட்டினத்துக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், நகாப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளில் பரவலாக கன மழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழையும் பெய்யும்.

இதர மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடந்த பிறகு உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் தாக்கத்தினால் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் மழை பெய்யும்.

நாளை மதியத்துக்குப் பிறகு இந்த புயல் அரபிக் கடலை அடைந்த பிறகு படிப்படியாக மழை குறையும்.

புயல் கரையைக் கடக்கும் போது பலத்த காற்று வீசும். மணிக்கு 70 - 80 கி.மீ. வேகத்திலும், இது சில சமயங்களில் 90 - 100 கி.மீ. வேகத்திலும் அதிகரிக்கும். 

புயல் கரையைக் கடக்கும் பகுதியில் உள்ள மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது கடல் அலையின் உயரம் சுமார் 1 மீட்டர் அளவுக்கு அதிகமாக இருக்கும். மழை இன்று மாலை முதல் படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கூறுகையில், தமிழ்நாடு அரசு பேரிடர் காலங்களை திறமையாகக் கையாளும் திறன் கொண்டது. ஏற்கனவே அது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் முக்கியமான முன்னெச்சரிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை புயல் நிலவரம் குறித்து தமிழக அரசுக்கு தொடர்ந்து தகவல்களை வானிலை ஆய்வு மையம் அளித்து வருகிறது. தொடர்ந்து நாளை வரை உடனுக்குடன் வானிலை அறிவிப்புகளை தமிழக அரசுக்கு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com