வாழ்க்கைல எக்கனாமிக்கல் எக்ஸ்டஸி வேணும்னா சுருளி அருவிக்கு சுற்றுலா போங்க பாஸ்!

இரண்டாவது அருவியில் குளிக்க வருவதே அங்கே பாய்ந்து வரும் மூலிகை நீரில் உடல் நனைத்து ஆசுவாசம் பெறத்தான். அங்கேயும் போய் ரசாயன ஷாம்பூக்களையும், ரெடிமேட் சிகைக்காய்த்தூள் தூள்களையும், கண்ட, கண்ட நறுமண
வாழ்க்கைல எக்கனாமிக்கல் எக்ஸ்டஸி வேணும்னா சுருளி அருவிக்கு சுற்றுலா போங்க பாஸ்!

தேனி மாவட்டம், கம்பம் நகருக்கு அருகில் இருக்கிறது சுருளிப்பட்டி எனும் சிற்றூர். இந்த ஊர் இரண்டு விஷயங்களுக்காகத் தமிழக அளவில் பிரபலம். ஒன்று காமெடி நடிகர் சுருளிராஜன் பிறந்தது இந்த ஊரில் தான் என்பதால் இவ்வூரைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இரண்டாவது விஷயம் இவ்வூரில் இருக்கும் சுருளி அருவி.

அருவிக்குச் செல்ல நபர் ஒருவருக்கு 5 ரூபாய் கட்டணம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் எதுவுமில்லை. காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை அருவிக்கரையில் இருக்கலாம். அதற்குமேல் அனுமதி இல்லை.

இந்த அருவியில் வருடத்தின் அத்தனை நாட்களிலும் ஆர்ப்பரித்துக் கொண்டு தண்ணீர் கொட்டுவதில்லை... எப்போதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெருமழைக்கு வாய்ப்பிருக்கும் பொது அருவியில் நீர்வரத்து அதிகமாகி அருவியை அணுக முடியாமல் செல்லும் வழி வெள்ளநீரால் அடைபட்டுக் கொண்டால் மட்டுமே இந்த அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.

சில நேரங்களில் நக்ஸலைட்டுகள் ஊடுருவல் எனக்கூறி அப்போதும் அருவியில் குளிக்க காட்டிலாகாவினர் தடை விதிப்பார்கள். மற்றபடி தன்னில் ஆசையுடன் நனைய வரும் சுற்றுலாப் பயணிகளை அரவணைத்து அணைத்துக் கொள்ளும் அன்னையாகவே அன்பு காட்டக் கூடியது இந்த அருவி. மிதமான வேகத்தில் உச்சந்தலையில் ஜில்லிட்டு இறங்கும் அருவி நீர் முதல்முறை அருவிக்குளியலில் ஈடுபடுவோருக்கு மிகப்பெரிய எக்ஸ்டஸி (பேரின்ப உணர்வு).

பார்க்கிங் ஏரியாவை அருவியிலிருந்து 2 கிலோமீட்டருக்கு முன்பே நிறுத்தி விடுகிறார்கள். அங்கே வாகனங்களைப் பார்க் செய்து விட்டு இறங்கி நடந்து செல்ல வேண்டும். நடக்கும் போது கொஞ்சம் கவனம் தேவை. இல்லாவிட்டால் மரங்கள் தோறும் தொங்கிக் கொண்டும், பேன் பார்த்துக் கொண்டும், குடும்பப் பஞ்சாயத்துகளில் மத்யஸ்தம் செய்து கொண்டும் இருக்கும் ஆஞ்சநேய அவதாரர்களுக்கு நமது பொருட்களைத் தாரை வார்க்க நேரும். அவற்றைக் குரங்குகள் என்று சொல்ல மனம் வரவில்லை. உற்றுக் கவனிக்கையில் அவற்றின் அறிவு பிரமிக்கச் செய்வதாக இருக்கிறது.

நாங்கள் கடக்கும் போது காயம் பட்ட வயதான மாருதியொன்றின் உடலில் எங்கெங்கே காயங்கள் உள்ளன என்று ஆராய்ந்து கைகளால் மென்மையாகத் தடவி ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது இளம் மந்தியொன்று. குட்டி மந்திகள் ஒன்றிரண்டு காயம் பட்ட மாருதியின் மடியில் தலை சாய்த்தும், தோளில் முகம் புதைத்தும் சோகம் காட்டி அரவணைத்துக் கொண்டிருந்தன. சற்றுத் தொலைவில் காயத்துக்கு காரணமான இளம் ஆண் மந்தியொன்று இன்னும் கோபமடங்காது கர்புர்ரெனத் தன் கோபத்தை வெளிப்படுத்திய வண்ணம் அலைந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஆதிமனிதர்களை நினைவுபடுத்திக் கொண்டு மனித இனத்தின் ஜனன சாட்சியங்களாக அரங்கேறிக் கொண்டிருந்தது அந்தக் காட்சிகள் அங்கு.

இந்த முறை அருவிக்குச் செல்லும் வழியிலமைந்த பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்றெனச் சொல்லவேண்டுமெனில் அது கழிப்பிட வசதிகளெனச் சொல்லலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு, மூன்று இடங்களில் கழிப்பிட வசதிகள் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தன. கழிவறைகளில் சிற்சில சிதிலங்கள் இருந்தாலும் சுகாதாரத்தில் அவை மோசமென்று சொல்லமுடியாது. கழிவறைக்குழாய்களில் தங்கு தடையின்றி தண்ணீர் வருவதே பெரிய விஷயமில்லையா?

அருவிக்குச் செல்லும் வழியெங்கும் திராட்சைத் தோட்டங்கள் பரவலாகக் கண்ணில் படுகின்றன. தோட்டக்காரர்கள் மிக அருமையான முறையில் அந்தத் திராட்சைத் தோட்டங்களைப் பராமரித்துக் கொண்டிருப்பது அங்கிருந்த சுத்தத்தில் பிரதிபலித்தது. அருவிக்குச் சென்று திரும்புகையில் கிலோ 50 ரூபாய்க்கு நம்பி திராட்சைகளை வாங்கிச் செல்லலாம். பழங்கள் புளிப்போ, துவர்ப்போ இல்லாமல் நல்ல ருசி!

ஒருவழியாக அருவியை நெருங்கி விட்டீர்கள் எனில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிடும். பெருமழைக்காலங்களில் இந்த ஆற்றுப்பாலத்தை மறித்துக் கொண்டும் தண்ணீர் வரத்து இருக்கும். அப்போது பாலத்தைக் கடக்கமுடியாத போது அருவியில் குளிக்கத் தடை விதிப்பார்கள். சாதாரண காலங்களில் இதைத் தாண்டினால் அருவிக்குச் செல்லும் படிகள் நெருங்கி விடும். ஆரோக்யமானவர்களால் விறுவிறுவென ஏறிக் கடக்க முடிவதான அகலமான படிகள் அருவி தொடும் இடத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனத் தனித்தனியாகப் பாதை பிரிவதோடு பெண்கள் பகுதியில் ஆடை மாற்றுவதற்கும், கொண்டு செல்லும் பொருட்களை பாதுகாக்கவும் ஓரிரு சிறு லாக்கர் அறை வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இது காட்டிலாகா சார்பில் இலவசமாகக் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் அதைப் பராமரிப்பவர்கள் ஏதோ உங்களால் முடிந்ததைக் கட்டணமாகக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். கொடுத்தால் தங்களின் சொத்துக்கள் எதுவும் கரையாது என நினைப்பவர்கள் மறுக்காமல் ஐம்பதோ, நூறோ கொடுத்தார்கள். மாற்று ஆடைகள், கைப்பைகள் என அங்கே வைத்து விட்டு அறையைப் பூட்டி சாவியை நாமே வைத்துக் கொள்ளலாம். 

நாங்கள் அங்கே செல்லும் போது அருவியில் தண்ணீர் வரத்து மிதமாகத் தான் இருந்தது. காலையில் பத்து மணிக்கு முன்பாகச் சென்று விட்டால் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கிறது. நேரமாக, ஆக வெயில் ஏற, ஏற கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்வதையும் காண முடிந்தது. அருவியிலிருந்து கொட்டும் நீரை மேலே எங்கேயோ தடுத்து ஒரு டியூப் வழியாக குடிநீராகவும் கீழே தேவைப்படுபவர்களுக்கு வழங்குகிறார்கள். அருவியில் குளிக்க வைக்க முடியாத சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்தத் தண்ணீரில் தலையையும், உடலையும் ஆசை தீர நனைத்துக் கொள்ளலாம். தண்ணீர் தேனாக இனிக்கிறது. நம்மூர் RO தண்ணீரெல்லாம் இதன் சுவைக்கு முன் பிச்சை வாங்க வேண்டும். கற்கண்டுத் தித்திப்பாய் இன்னும் அதன் சுவை நாவை விட்டு அகலவில்லை.

ஆயிற்று, இப்போது அருவிக்கு நேர் கீழே வந்து நின்று கும்பலில் குளிக்க வாகான இடமும் பிடித்தாயிற்று. ஆனந்தத்திற்கு குறைவில்லை. முதலில் சிதறித் தெறிக்கும் அருவியில் முதல் பெருந்துளி நேராக தமது உச்சந்தலை தொடும் போதே கண் மூடிப் பரவசமாகி விடுகிறார்கள் பலர். சேலையிலும், நைட்டியிலும், தாவணியிலும், சுரிதாரிலும், முன் கொசுவக் கண்டாங்கிச் சேலையிலுமாக கலர் கலராக தலை முடி விரிந்து பரவி நீரோட்டத்தில் அலையாட அருவி நீர் உச்சந்தலையில் பாய்ந்திறங்கி முழுக்காட்ட கண் மூடி ரசித்து ஆனந்தமாக அனுபவிக்கும் பற்பல தபஸ்வினிகளை அங்கே காண முடிந்தது. கும்பலில் எல்லோரும் சாத்வீகிகளாக இருந்து விடுவதில்லை சில துர்வாசினிகளும் இருந்தார்கள். ‘ஏம்மா, எம்மா நேரந்தான் இப்படி அசையாம ஒரே இடத்துல நின்னு குளிப்ப, நகரும்மா மித்தவங்களும் குளிக்காண்டாமா?!’ என கோப முகம் காட்டி இடித்துத் தள்ளிக் கொண்டு அருவிக்கு தலை காட்டியவர்களையும் காண முடிந்தது. இடித்துத் தள்ளிக் கொண்டும், உரத்து முணுமுணுத்தவாறும் இருந்த போதும் பெண்கள் அருவிக் குளியலின் ஆனந்தமயோனுபவத்தை ஒரு துளி விடாமல் ரசித்துப் பருகினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். எதிரில் கம்பித் தடுப்பிற்கு அப்பால் ஆண்கள் குளிக்கும் பகுதி. அங்கே எல்லாம் சரக்கடித்து மட்டையானால் முகத்தில் ஒரு ஞான ஒளி தோன்றுமே அந்த ரேஞ்சில் ஆண்கள் அடித்த வெயிலுக்கு ஆனந்தமாக அருவிக் குளியலுக்கு தலையை மட்டுமல்ல மொத்த உடலையும் ஒப்புக் கொடுத்திருந்தனர். அவர்களுக்கென்ன சிற்றாடை தேவையில்லை உள்ளாடை போதுமே. பெண்களை விட ஆண்கள் அதிசுதந்திரமாக அருவிக் குளியலை பேரின்பத்துடன் அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். உள்ளே சென்ற எவருக்கும் அருவியின் தாலாட்டிலிருந்து தலையை மீட்டுக் கொள்ளும் விருப்பம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும். 

ஒருவழியாக அங்கிருந்த பராமரிப்பாளர் வந்து ‘ரொம்ப நேரமா குளிக்கிறவங்கல்லாம் வெளில வாங்க சார், வாங்க மேடம், மித்தவங்களும் குளிக்கனுமே’ என்று குரல் கொடுத்து உள்ளிருந்த கும்பலைக் கலைத்தனர்.

அப்பாடா! ஒரு வழியா ஆசை தீர அருவிக் குளியல் போட்டாச்சு இனி மீண்டும் வந்த வழியிலேயே 1 1/2 கிலோ மீட்டர் நடந்து பார்க்கிங் பகுதிக்குச் செல்பவர்கள் செல்லலாம். அன்றியும் மதிய உணவு தயார் செய்து எடுத்து வந்து இங்கேயே உண்பதென்றாலும் அதற்கும் அங்கே விஸ்தாரமாக இடமிருக்கிறது. ஒரு தார்பாலின் சீட் விரித்து எத்தனை பேர் வேண்டுமானாலும் பந்தி விரித்து சாப்பிடலாம். பார்க்கிங் பகுதியில் பணியாரம், சமோஷாக்கள், கப்பக்கிழங்கு சிப்ஸ்கள் எனப் பொரித்து விற்கிறார்கள். அவற்றை பெரும்பாலும் யாரும் வாங்கி உண்பதாகத் தெரியவில்லை. கொய்யாப்பழக் கடைகள், இளநீர் கடைகளில் கணிசமான கூட்டம் நின்றது. அது தவிர பேன் சீப்பு, ஈர்விழிகள், போன்ற அதிசயமான பொருட்களையும் தரையில் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். 

கல்லெறியும் தூரத்தில் சுருளியாண்டவர் ஆலயம் இருக்கிறது. பக்த மகா ஜனங்கள் அங்கேயும் செல்லத் தவறவில்லை. 

கீழிருக்கும் கோயிலைத் தவிரவும் சுருளி மலை மேலும் சிவலிங்கம் ஒன்றுண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் என் சித்தப்பா குடும்பத்தாருடன் அங்கே சென்று வழிபட்ட அனுபவமுண்டு எனக்கு. பொதுவாக அங்கே மலையேறிச் செல்ல அப்போதெல்லாம் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. சித்தப்பாவுக்கு மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டி அந்தப் பகுதிகளிலெல்லாம் நல்ல அறிமுகமிருந்ததால் துணிந்து எங்களை மேலே அழைத்துச் சென்றார். மலைமேலேறும் ஒற்றையடிப்பாதையில் காட்டுப் புதர்கள், வானுயர்ந்த மரங்கள் மற்றும் முள் மரங்களின் ஊடே நடந்து சென்றால் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் மேலிருக்கும் சிவனை தரிசிக்கலாம். அங்கே கதம்ப வண்டுகள் நிறைய உண்டு. உடன் வந்த உறவினர் ஒருவரை தேனீ ஒன்று கடித்து விட அவர் சட்டையக் கழற்றி உதறியதில் மரக்கிளை பட்டு கதம்ப வண்டுக் கூட்டம் சிதறிச் சூழ்ந்தது எங்களை. அச்சத்துடன் மலையிறங்கியவர்களை விடாமல் துரத்தின அந்த பெரிய வண்டுகள். அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அந்த வண்டுகளில் விஷக் கொடுக்குகளில் சிக்கி அவதிப்பட்டார்கள். மறுநாள் காலை கண்விழித்துப் பார்க்கையில் வண்டினால் கடிபட்டவர்களின் முகம் பேயறைந்தாற் போலிருந்தது. அதன் கொடுக்குகள் பதிந்த தடம் ஏதோ கொடுக்காப்புளி முள் குத்தினாற் போல பிடுங்கி நீக்கக் கடினமானதாக இருந்தது. அந்த வலி தீர கிட்டத்தட்ட ஒரு வாரமானது என்றார்கள் கடிபட்டவர்கள். கடிபடாமல் தப்பியவர்கள் நானும் எனது சித்தப்பாவும் மட்டுமே. இப்போது மலைமேலிருக்கும் சிவனை தரிசிக்க அனுமதியுண்டா? பாதைகள் செப்பனிடப்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை. இம்முறை நாங்கள் குழந்தைகளுடன் சென்றதால் அதைப் பற்றி எனக்கு விசாரிக்கத் தோன்றவும் இல்லை. அருவியில் குளித்த ஆனந்தமே போதும் என ஊர் திரும்பினோம்.

சுருளி அருவிச் சுற்றுலாவில் தவிர்க்க வேண்டியவை...

  • சுற்றுலாப் பயணிகளில் சிலர் அருவிக்குச் செல்லும் வழியிலிருக்கும் மந்திகளுக்கு சமோஷாக்களையும், இனிப்புப் பணியாரங்களையும் இன்னும் சிப்ஸ், கேக்குகள் என தாங்கள் உண்ணக் கொண்டு வந்த ஐட்டங்களை எல்லாம் பேரன்போடு உவந்து தானமளித்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. சில இடங்களில் இவர்கள் அளிக்கும் ஜங்க் ஃபுட் தானங்களைப் பெற மந்திகள் ஆர்வத்துடன் கையேந்தி நிற்கும், ஏங்கிப் போய் முகம் பார்த்துக் காத்திருக்கும் அவலத்தையும் காண முடிந்தது. இது முற்றிலும் தவறான செய்கை. மனித இனம் தான் பசிக்குப் பிச்சையெடுக்கும் கேவல நிலைக்குத் தாழ்ந்து விட்டதென்றால் இயற்கை உணவுகளுக்குப் பழக்கப்பட்டுப் போன மந்திகளையும் அந்த நிலைக்கு தாழ்த்த வேண்டிய அவசியமென்ன? உங்களுக்கு நிஜமாகவே விலங்குகளின் பால் அன்பிருந்தால் அவற்றை இயல்பாக காட்டில் இயங்க அனுமதித்தாலே போதும். உங்கள் வருகையால் அவை தங்களது இயல்பு நிலை கெட்டு மனிதனைப் போல கையேந்தும் நிலையை வரவழைக்காதீர்கள்.
  • இரண்டாவது அருவியில் குளிக்க வருவதே அங்கே பாய்ந்து வரும் மூலிகை நீரில் உடல் நனைத்து ஆசுவாசம் பெறத்தான். அங்கேயும் போய் ரசாயன ஷாம்பூக்களையும், ரெடிமேட் சிகைக்காய்த்தூள் தூள்களையும், கண்ட, கண்ட நறுமண எண்ணெய்களையும் தேய்த்து போதாக்குறைக்கு உடலுக்கும் நறுமண சோப்புக்களைத் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களை விடவும் முட்டாள்கள் வேறு எவரும் இல்லை. இத்தனைக்கும் அருவியில் குளிக்கையில் சோப்பு, ஷாம்பூ, எண்ணெயெல்லாம் பயன்படுத்தக் கூடாது என அருவிப் பராமரிப்புப் பணியாளர்கள் அறிவுறுத்தியும் கூட 
  • நம் மக்கள் அதற்கு செவி கொடுப்பதாக இல்லை. அவர்கள் இஷ்டத்துக்கு பிறரை ஏமாற்றுவதாக நினைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். இதற்குப் பேசாமல் வீட்டுக் குளியலறையில் குளித்து விட்டுப் போகலாம்.
  • மூன்றாவது மேலே அருவி வரை ஏறிச் சென்று குளிக்க முடியாதவர்கள் அல்லது சோம்பேறித்தனப்படுபவர்கள் சிலர் அருவியிலிருந்து வழிந்து தண்ணீர் கீழிருக்கும் ஓடைக்கு வரும் பாதையில் தேங்கியிருக்கும் சிறு குட்டையிலிருக்கும் நீரில் குளித்துக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது. இதே ஓடையில் நீர் வரத்து அதிகமிருந்தால் இப்படிக் குளிப்பதில் அர்த்தமிருக்கிறது. ஏனெனில் பெருமழைக்காலங்களில் மேலே அருவியில் குளிப்பவர்களிடமிருந்து வழிந்து வரும் அழுக்கு நீர் தேங்காமல் ஓடிக் கொண்டே இருந்தால் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. அதே குட்டையாகத் தேங்கிய நீரில் அழுக்குகள் மேலும் சேரவே வாய்ப்புகள் அதிகம். இது ஆரோக்யமானதல்ல.

இந்த மூன்று விஷயங்களும் சுருளி அருவிச் சுற்றுலாவில் பயணிகள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்பேன்.

மெச்சுதலான விஷயம்...

சுருளி அருவிக்கு சுற்றுலா செல்வதென்பது வெறும் பொழுது போக்குக்காக மட்டுமில்லை... தாவரவியல், விலங்கியல், வன விலங்கியல் மற்றும் அக்ரிகல்ச்சுரல் பயிலும் மாணவர்கள் இதை ஒரு கல்விச் சுற்றுலாவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான மிகச்சிறந்த உதாரணமாக உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆதார மலைகளில் சுருளிமலையும் ஒன்று. வன இலாகாவினர் அங்கிருக்கும் நெடிதுயர்ந்த மரங்கள், அரிதான செடிகொடிகள் அனைத்திலும் அவற்றுக்குரிய அறிவியல் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாதுகாத்திருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

முடிவாக...

தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே மத்திய அரசுக்கெதிரான கடுமையான அதிருப்தி அலைகளை எழுப்பி வரும் நியூட்ரினோ ஆய்வகம் அமையவிருப்பதும் இதே சுருளியாற்றிலிருந்து கல்லெறியும் தொலைவில் தான் என்கிறார்கள். நியூட்ரினோ ஆய்வகம் இங்கு அமைந்தால் நிச்சயம் இந்த மலைப்பகுதியிலுள்ள லட்சோபலட்சம் மூலிகைச் செடிகளுக்கும் வன உயிரனப் பெருக்கத்திற்கும் இயற்கைச் சமநிலைக்கும் நிச்சயம் பங்கம் வரலாம். அதை இந்தப் பகுதி மக்கள் விரும்பவில்லை. இயற்கையுடன் இயைந்த தங்களது இயல்பு வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளும் ஆசை யாருக்குத்தான் இருக்கக் கூடும்.

வாய்ப்பிருப்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது அருவியில் நீர்வரத்து இருக்கும் போது சுருளி மலைக்கும், அருவிக்கும் சென்று வாருங்கள். சுருளி அருவிச் சுற்றுலா நிச்சயம் உங்களையும் உங்களது பர்ஸையும் ஏமாற்றாத சிக்கனச் சுற்றுலாவாக மனதை அள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com